Last Updated : 26 May, 2018 06:31 PM

 

Published : 26 May 2018 06:31 PM
Last Updated : 26 May 2018 06:31 PM

இல்லம் சங்கீதம் 37: எதையும் தள்ளிப்போடாதீங்க

தெருமுனை பெண்ணின்

இடுப்பிலிருந்த குழந்தை

பொக்கைவாய் காட்டிச் சிரித்ததற்கு

இணையான பிறிதொன்றைச்

சொல்லமுடியவில்லை.

உன் அன்புக்கும் அப்படியே

- செல்வநாயகி

நல்ல வேலை, கைநிறைய சம்பளம் அதற்குப் பிறகுதான் திருமணம் என்பதே இன்று பலரது கொள்கையாக இருக்கிறது. இப்படி ஆணும் பெண்ணும் முப்பது வயதை எட்டியபின் திருமணம் முடித்து, குழந்தையை எதிர்பார்க்கும்போது இல்லற சிரமங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்கிறார்கள்.

இளவயது திருமணம் எப்படி உடல், மன, சமூகரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்துமோ அதேபோலத்தான் தாமதமான திருமணங்களும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குழந்தைப்பேறுக்கான சரியான திருமண வயதாகப் பெண்ணுக்கு 20-25, ஆணுக்கு 27-30 என்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தாமதத் திருமணங்கள் மட்டுமல்ல, சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு பொருளாதாரம் உள்ளிட்ட நடைமுறை பிரச்சினைகளுக்காகக் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவதும் இதே சங்கடங்களை ஏற்படுத்தும்.

பரிசோதனை அளிக்கும் தெளிவு

குழந்தையின்மைக்கான காரணங்கள் ஆண், பெண்ணைச் சார்ந்து வேறுபடுகின்றன. முன்பெல்லாம் குழந்தைப்பேறு தள்ளிப்போனால் கண்ணை மூடிக்கொண்டு பழியை பெண் மேல் போட்டு விடுவார்கள். பெண்ணை மட்டுமே மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி அலைக்கழிப்பார்கள். ஆனால், நவீன மருத்துவம் ஆணுக்கான பரிசோதனையை முதலில் கோருகிறது.

காரணம், ஆணுக்கான பரிசோதனை எளிமையானது. திருப்தியான இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கும் தம்பதியரில், கணவனின் உயிரணுக்களைச் சோதிப்பதன் மூலமே ஆண் தரப்பு பிரச்சினைகளை அலசி, குழந்தையின்மைக்கான சரிபாதி காரணங்களைத் தீர்மானிக்க முடியும். அதன் பின்னர் அவசியமெனில் பெண்ணுக்கான பலகட்ட பரிசோதனைகளை ஒவ்வொன்றாக மேற்கொள்ளலாம்.

காரணம் அறிவோம்

“குழந்தையின்மை பிரச்சினையின் தனித்துவ காரணங்களில் ஆணின் பங்கு 50 சதவீதமாகவும் பெண்ணின் குறைபாடு 40 சதவீதமாகவும் இருக்கிறது. மிச்சமிருக்கும் 10 சதவீத காரணங்கள் சற்று சிக்கலானவை” என்று சொல்லும் குழந்தையின்மை மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயராணி காமராஜ், ஆணுக்கான பிரச்சினைகளைப் பட்டியலிடுகிறார்.

“ஆணுக்கு இயல்பான விறைப்புத்தன்மையும் திருப்தியான உறவும் இருப்பதைத் தம்பதி உறுதி செய்தால், அடுத்த கட்டமாக விந்தணுக் குறைபாடு ஏதேனும் இருக்கிறதா எனத் தெளிவு பெறலாம். சிறுவயது அம்மை உள்ளிட்ட வைரஸ் தொற்றினாலும் விந்தணுக் குறைபாடு நேரலாம்.

பிறவியிலேயே சிலருக்கு விதைப்பை போதிய வளர்ச்சியின்றி இருக்கும். 3 சதவீத ஆண்களுக்கு விதைப்பை வயிற்றிலிருந்து கீழிறங்காத பிரச்சினை ஏற்படுகிறது. விளையாட்டாலோ விபத்தாலோ அடிபடுவது, போன்றவற்றாலும் விதைப்பையினுள் பாதிப்புகள் எழலாம். தவறான பாதையில் செல்லும் ஆண்களுக்குப் பாலியல் தொற்றுநோய்கள் ஏற்பட்டு அதனால் விந்துக்குழாய் அடைப்பு ஏற்படலாம்.

தொடர்ந்து இறுக்கமான உள்ளாடை, ஜீன்ஸ் பேண்ட் அணிவது, தொடர்ச்சியான புகை - மதுப்பழக்கம், எப்போதும் வெந்நீரில் குளிப்பது போன்றவையும் ஆணுக்கு உயிரணு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக இன்று உலக அளவில் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும் போக்கே நிலவுகிறது. அதிகரிக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடும் பூச்சிக்கொல்லிகளும் உணவுப் பொருளுக்கான பதப்படுத்திகளின் பயன்பாடும் இவற்றுக்குக் காரணம்” என்கிறார் டாக்டர் ஜெயராணி காமராஜ்.

பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, சீரற்ற மாதவிடாய், கருப்பை கட்டி, சினைப்பையில் நீர்க்கட்டிகள், குணப்படுத்தாத வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் விளையும் கருக்குழாய் அடைப்பு, கருப்பையின் காசநோயாக உட்சுவர் வளருவது உள்ளிட்ட பல காரணங்கள் குழந்தையின்மைக்கான காரணிகளில் சில.

திட்டமிடல் நன்று

இயல்பான இல்லறச் சேர்க்கையில் ஓராண்டு கடந்த பிறகும் குழந்தை பிறப்புக்கான அறிகுறிகள் இல்லையென்றால் தம்பதி அது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் சராசரியைவிட வயது அதிகமான தம்பதியரில் எவரேனும் ஒருவருக்குக் குழந்தைப்பேற்றினை பாதிக்கும் கோளாறுகள் இருந்தால் ஆறு மாதங்களிலே கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தைப்பேற்றினைத் திட்டமிடும் தம்பதி பலரும் நாள் பார்த்துச் சேர்வார்கள். ஆனால், நாள் கணக்கு பாராத தொடர்ச்சியான சேர்க்கையே குழந்தைக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

தினந்தோறும் அல்லாது போனாலும் ஒரு நாள் விட்டேனும் உறவைத் தொடர்வது அவசியம். வாரத்தில் 4 நாட்கள் இணைபவர்களுக்குக் கருத்தரிப்பதற்கான சதவீதம் 83 என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவு. இதுவே வாரத்தில் 3 நாட்கள் எனில் 64 ஆகவும், 2 நாட்கள் எனில் 47 ஆகவும், ஒரு நாள் எனில் 17 சதவீதமாகவும் வாய்ப்பு குறைகிறது.

கைகொடுக்கும் மருத்துவ ஆலோசனை

குழந்தைப்பேறு தள்ளிப்போவதாக உணரும் தம்பதியினர் ஓராண்டு காத்திருப்பிற்குப் பின்னர் மருத்துவ ஆலோசனையை நாடலாம். எடுத்த எடுப்பில் தீவிர சிகிச்சை இருக்காது. தம்பதியரின் இயல்பான நெருக்கம், அவர்களின் அன்றாட வாழ்க்கைமுறை, மன - உடல் ஆரோக்கியம் தொடர்பாக மருத்தவர் விசாரித்துச் சில ஆலோசனைகளை வழங்குவார். அடுத்ததாகத் தேவையெனில் சில ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.

அதன் அடிப்படையில் அவசியமெனில் சில மருந்துகளையும் பரிந்துரைப்பார். இவற்றுக்கு மத்தியில் தம்பதி தங்களின் சீரான உறவைத் தொடர்ந்திருக்க வேண்டும். முக்கியமாக மருத்துவ ஆலோசனைகள் அனைத்திலும் தம்பதி சமேதரமாகப் பங்கேற்பது மருத்துவ முயற்சிகள் எதிர்பார்க்கும் முடிவை எட்ட உதவும். இப்படியே ஓராண்டு செல்லலாம். அதன் பின்னரும் குழந்தை தள்ளிப்போனால் அடுத்தகட்ட சிகிச்சைக்குப் போகலாம்.

அன்பால் வெல்வோம்

செயற்கைக் கருத்தரிப்பு உட்பட குழந்தையின்மைக்கான மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாகப் மக்கள் மத்தியில் தேவையற்ற தயக்கமும் தவறான கருத்துகளும் நிலவுகின்றன. மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளின் கீழ் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த சிகிச்சை முறைகளையே மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை பெற விரும்புவோர் தகுதியான மருத்துவரை நாடுவதில் கவனம் செலுத்தினால் போதும். பொதுவாக இளவயது தம்பதி எனில் பொறுமையாகவும் வயது அதிகமான தம்பதிக்கு சற்று துரிதமாகவும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம்.

மணவாழ்வில் கணவன் - மனைவி இணக்கத்துக்கு உந்து சக்தியாக அவர்களுக்கு இடையிலான உடல் நெருக்கம் வாய்த்திருக்கும். ஆனால், குழந்தைப்பேறு தள்ளிப்போகும் தம்பதி, தங்களது தனிப்பட்ட உடல் தேவைகளைப் பின்தள்ளி, குழந்தைக்காக என்றே தங்களது சேர்க்கையைத் தீர்மானிப்பார்கள்.

இது நாளடைவில் தாம்பத்திய வாழ்க்கையில் அலுப்பைத் தந்துவிடும். இந்தப் போக்கே பிறகு குழந்தைப்பேற்றினை பாதிக்கும் காரணியாகவும் மாறக்கூடும். எனவே இந்தத் தம்பதி, ஒருவருக்கொருவர் பரிவுடனும் அன்புடனும் தங்கள் தம்பத்திய வாழ்க்கையைத் தொடர்வது அவசியம். உறவில் சங்கடங்கள் எழுந்தால் மருத்துவ ஆலோசனைகளைப் பெறத் தயக்கம் கூடாது.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x