Last Updated : 22 Apr, 2018 10:17 AM

 

Published : 22 Apr 2018 10:17 AM
Last Updated : 22 Apr 2018 10:17 AM

இல்லம் சங்கீதம் 32: குழப்பம் தரும் அந்த நாட்கள்

அலைகளைச் சொல்லிப்

பிரயோஜனமில்லை

கடல் இருக்கிறவரை

- நகுலன்

நாற்பதைத் தாண்டும் இல்லத்தரசிகள் மீது அவர்களுடைய கணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, ‘எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசுகிறாள், சதா எரிச்சலடைகிறாள்’ என்பதாகவே இருக்கும். சில ஆண்கள் பதிலுக்குக் கோபப் படுவார்கள். சிலர், முன்னெப்போதும் இல்லாத மனைவியின் சீற்றத்தைப் பார்த்துப் பம்முவார்கள். ஆனால், விபரமறிந்த ஆண்களோ மனைவியை அரவணைத்துச் செல்வார்கள். பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றமான மெனோபாஸ் சிரமங்களைப் புரிந்துகொண்டு பரிவோடு தாங்கும் இந்த வகைக் கணவர்கள் குறைவு.

அரவணைப்பு அவசியம்

பெண்ணுடலில் மாதவிடாய்ச் சுழற்சி தொடங்குவது எப்படி இயல்பானதோ அந்தச் சுழற்சியை நிறைவுசெய்யும் மெனோபாஸ் பருவமும் இயல்பானதே. கருப்பையோடு தொடர்புடைய ஹார்மோன்கள், மெனோபாஸ் காலத்தில் தமது சுரப்பைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளும். இதனால் பெண்ணின் உடலும் மனமும் தடுமாற்றங்களுக்கு ஆளாகும். பருவமடைதலின்போது ஒரு பெண்ணுக்குள் ஏற்படும் மாற்றங்களை இயல்போடு ஏற்றுக்கொள்ளும் குடும்பம், அதன் இறுதிக் கட்டமான மெனோபாஸ் காலத்து மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மெனோபாஸ் காலத்தில் அன்புடனும் அரவணைப்புடனும் குடும்பம் பெண்ணைத் தாங்கினால் அவள் தனது சிரமங்களை எளிதில் கடக்க முடியும்.

மனதைத் தயார் செய்வோம்

45 முதல் 55-க்கு இடைப்பட்ட வயது, உலகம் முழுக்கப் பெண்களின் மெனோபாஸ் காலமாக வரையறுக்கப்பட்டிருந்தது. உயரும் வாழ்க்கைத் தரம், ஆரோக்கியம் ஆகியவற்றால் தற்போது சுமார் 50 வயதுக்குப் பிறகே பலரையும் மெனோபாஸ் நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் பெண்ணின் உடலும் மனதும் சிறிதும் பெரிதுமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும். மாதாந்திர சுழற்சி வழக்கமான ஒழுங்கிலிருந்து தடுமாறுவதும் சீற்றமடைவதுமாக மெனோபாஸ் தொடங்கும். அதிகம் வியர்ப்பது, தூக்கம் குறைவது, அடிக்கடி களைப்படைவது, எரிச்சல், பதற்றம், தன்னம்பிக்கைக் குறைவு, ஊசலாடும் மனநிலை, உறவில் நாட்டக் குறைவு, எடை அதிகரிப்பது, முடி கொட்டுதல், உலர் சருமம், பொலிவில் சரிவு, உறுப்பில் வறட்சி, உறவின்போது வலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தலைகாட்டும். மெனோபாஸ் தொடங்குவதைச் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம். மெனோபாஸ் ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் முன்பே பெண்ணின் கருப்பை படிப்படியாக அதற்குத் தயாராவதை ‘பெரிமெனோபாஸ்’ (Perimenopause) என்கிறோம். இந்தக் காலகட்டத்தில் மெனோபாஸின் உடல், மனத் தடுமாற்றங்களில் பலவும் அவ்வப்போது தலைகாட்டும். பெண்கள் தமது உடல் மாற்றத்தைப் புரிந்துகொண்டு சத்தான உணவு, போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, வீட்டு வேலைகளில் தேவையான பங்கீடு என்று திட்டமிட்டால் மெனோபாஸ் காலத்தைத் திடமாக எதிர்கொள்ளலாம்.

அச்சப்படத் தேவையில்லை

“ஐம்பது வயசாகியும் உதிரப்போக்கு இருக்கே, அதனால ஏதாவது பிரச்சினையான்னு கேட்டு நிறைய பெண்கள் வர்றாங்க. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு அவங்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைக்கிறோம்” என்கிறார் மூத்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நிர்மலா. “முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படுவது பெண்ணுக்குச் சிரமம். படிப்பு, வேலை, தாமதத் திருமணம் இப்படிப் பல காரணங்களால் இன்னைக்கு நிறையப் பேருக்குத் தாமதமாதான் குழந்தை பிறக்குது. இவங்க 30 வயசு கடந்ததுமே மெனோபாஸைச் சந்திக்கும்போது தடுமாறுவாங்க. அடுத்த குழந்தை பிறப்பதும் சிக்கலாகிடும். அதனால அவங்க பெரிமெனோபாஸ் அறிகுறிகளின்போதே மருத்துவரைச் சந்தித்தால், ஹார்மோன் சிகிச்சை மூலமா அவங்க மெனோபாஸைச் சில வருஷத்துக்குத் தள்ளிப்போடலாம்” என்கிறார் நிர்மலா.

இயலாமையில் நேரும் சங்கடங்கள்

பெண்ணின் மெனோபாஸ் காலம் ஒரு குடும்பத்தின் முக்கியமான காலமாகவும் அமைந்துவிடுகிறது. அப்போது, கணவரும் மத்திம வயதை அடைந்தவராகவோ கடந்தவராகவோ இருப்பார். குழந்தைகளும் பதின்ம வயதிலோ அதைக் கடந்தோ இருப்பார்கள். குடும்ப கடமைகள், எதிர்காலத் திட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள் எனக் குடும்பத்தில் சங்கடங்கள் மிகுந்திருக்கும்.

அந்தரங்க உறவே இதுபோன்ற நெருக்கடிகளிலிருந்து தம்பதியை ஆற்றுப்படுத்தும். ஆனால், மெனோபாஸ் சிலருக்கு எதிரியாக அமைந்துவிடும். ஹார்மோன் தடுமாற்றங்களால் சில பெண்களுக்கு இயல்பாகவே உறவில் நாட்டம் குறையும். இதனால் கணவன் - மனைவி தகராறு எழுவதற்கும் குடும்பத்தில் அமைதி குலையவும் கூடும். கணவரது விருப்பத்துக்கு ஒத்துழைக்காத தனது உடல் உபாதைகளால் அவர் மீது சந்தேகம், கோபம் போன்றவை மனைவிக்கு எழலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க, கணவனும் மனைவியும் முன்கூட்டியே அமர்ந்து பேசுவது, தேவையெனில் மருத்துவரைச் சந்தித்துத் தெளிவு பெறுவது போன்றவை உதவும்.

மருத்துவ ஆலோசனை அவசியம்

“மெனோபாஸ் காலத்தின்போது உறவில் திருப்தியில்லையெனக் கணவன் குறைபடுவது நடக்கும். உறுப்பின் வறட்சியால் உறவில் வலியைப் பெண் உணருவார். தலை முதல் பாதம்வரை திடீரெனச் சூடுபாய்வதால் எரிச்சலையும் சில பெண்கள் உணருவார்கள். பெண்ணின் சிரமங்கள் ஆணையும் தடுமாறச்செய்யும். ஒரு நாளில் இரண்டு முறைக்கும் மேலாக உடல் சூடாவது நீடித்தாலோ வேறு உபாதைகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலோ மகளிர் சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். உறவின் வலிக்கு ஜெல் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனையோடு பயன் படுத்தலாம். புரிந்துகொண்ட தம்பதிக்கு மெனோபாஸ் தொடர்பான சங்கடங்கள் ஒரு பொருட்டல்ல. அதனால் குடும்பத்தினர் அனைவரும் மெனோபாஸ் குறித்து அறிந்து வைத்திருப்பதும் தேவையான அரவணைப்பை வழங்குவதும் அவசியம்” என்கிறார் நிர்மலா.

ஆணுக்கும் உண்டு மெனோபாஸ்

பெண்ணின் மெனோபாஸ் தடுமாற்றங்களைப் போன்றே ஆணின் உடலும் மெனோபாஸ் கட்டத்தை எதிர்கொள்கிறது என்கிறது நவீன மருத்துவம். விதைப்பையில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் படிப்படியாகக் குறையும்பொது ஆணின் மெனோபாஸ் தொடங்குகிறது. ஆனால், பெண்ணுக்குச் சராசரியாக 50 வயதில் மெனோபாஸ் அணுகுகிறது என்றால் ஆணுக்கு 70 வயதிலோ இன்னும் சிலருக்கு அதற்கும் பிறகோ ஏற்படுகிறது. இதனாலேயே 75 வயதில் அப்பா ஆனவர்களைச் செய்திகளில் பார்க்கிறோம். இந்த வயதுக்குப் பின்னர் ஆண் சந்திக்கும் மெனோபாஸ் சங்கடங்கள் முதுமையின் உபாதைகளுக்குள் ஒளிந்துகொள்வதால் பெண் அளவுக்கு ஆணுக்கு மெனோபாஸ் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x