Published : 09 Apr 2018 11:21 AM
Last Updated : 09 Apr 2018 11:21 AM

படிப்போம் பகிர்வோம்: விதையாக மாறிய குரல்

அதிகார வர்க்கத்தின் அகங்காரத்தாலும் ஒடுக்குமுறையாலும் மக்கள் வஞ்சிக்கப்படும்போதெல்லாம் சமூகப் போராளிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், அது வலுப்பெற்றுச் சமூகத்தின் குரலாக மாறும்போது அதிகாரத்தின் கொடுங்கரங்களால் அதன் குரல்வளை நெரிக்கப்படுகிறது. அந்தக் குரல்கள் அப்போதைக்கு மடிந்தாலும் அவை எதிர்காலக் குரலுக்கு விதையாகத்தான் புதைகின்றன. அவ்வாறு கோழைகளின் தோட்டாக்களுக்குப் பலியான பின்னும் போராட்டக் குரலை ஒலிக்கச் செய்து கொண்டிருக்கும் போராளியே கௌரி லங்கேஷ்.

கௌரி லங்கேஷின் தந்தை, கன்னட எழுத்தாளர்களில் முக்கியமானவர். சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். மரபு வழியாக கௌரிக்கு வந்த அறிவாற்றலுக்கும் எழுத்தாற்றலுக்கும் குறைவில்லை. மாதத்துக்கு ஒரு முறையோ ஆண்டுக்கு ஒரு முறை வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் சொகுசான மேல்தட்டு வாழ்க்கையை அவரால் எளிதில் வாழ்ந்திருக்க முடியும். தன் பங்குக்கு மேலும் சொத்து சேர்த்திருக்க முடியும். ஆனால், அப்படிச் சராசரியாக வாழ்ந்து மடிய அவர் விரும்பவில்லை.

எழுத்துக்கு மரணமில்லை

சாதி, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகக் களப் பணியாற்றி தன் கண்டனங்களை ‘கௌரி லங்கேஷ் பத்திரிகே’ மூலம் பதிவுசெய்தார் அவர். மனிதக் கழிவைத் தலையில் ஊற்றிக்கொண்டு போராடும் பாங்கி சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காக அவர் போராடினார். புகழ்பெற்ற அம்ரித் மஹல் காளைகளைப் பாதுகாக்கத் தவறிய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். சிக்மகளூரில் மதக் கலவரம் உருவாக்கப்படுவதைக் குறித்து எழுதித் தள்ளினார். ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கும் எழுத்தாளர் கல்புர்கி படுகொலைக்கும் இவர் எழுப்பிய கண்டனக் குரல் நாடெங்கும் ஒலித்தது.

போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்ட கௌரி லங்கேஷ், ‘கௌரி லங்கேஷ் பத்திரிகே’யில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளையும் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், மாணவப் போராளி உமர் காலித் ஆகியோர் கௌரி லங்கேஷ் மரணத்துக்குப் பிறகு தெரிவித்த கருத்துகளையும் சந்தன் கௌடா தொகுத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரன் மொழிபெயர்த்திருகிறார்.

கௌரி லங்கேஷ் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை அவரது ஒவ்வொரு சொல்லும் உணர்த்துகிறது. எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டபோது கௌரி இவ்வாறு எழுததினார்: “இவர்களின் கொலையால் பாசிச சக்திகள் லாபமடையத் துடிக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது, எனினும் கருத்துகளுக்கு எப்போதும் மரணம் கிடையாது”. கௌரியை மட்டும்தான் அவர்களால் கொல்ல முடிந்தது. அவரது கருத்துகளை யாராவது கொல்ல முடியுமா? அவை காலங்களைக் கடக்கும் ஆற்றல் வாய்ந்தவை ஆயிற்றே!

புத்தகம்: கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்

ஆசிரியர்: சந்தன் கௌடா

தமிழில்: பொன். தனசேகரன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001

தொலைபேசி: 04652 - 278525

விலை: ரூ.150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x