Published : 11 Feb 2018 11:26 AM
Last Updated : 11 Feb 2018 11:26 AM

படிப்போம் பகிர்வோம்: துணிவு தந்த பூரணி

நா

ன் அரசு வங்கியில் பணியாற்றிவருகிறேன். நான் நான்காம் வகுப்பு படித்தபோது என் தாத்தா அளித்த ஊக்கத்தால் வார, மாத இதழ்களுக்குப் படங்கள் வரைந்து அனுப்பினேன்; கட்டுரைகளை எழுதினேன். அவற்றுக்குக் கிடைத்த சிறு சன்மானத் தொகையைச் சேர்த்துவைத்துப் புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். என் பிறந்தநாளின் போதும் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்கும்போதும் என் தாத்தா எனக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தார். நா.பார்த்தசாரதி எழுதிய ‘குறிஞ்சி மலர்’ நாவலில் வரும் பூரணி என்ற கதாபாத்திரத்தின் தைரியமான பேச்சு என் மனதில் ஆழப் பதிந்தது. அதேபோல் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தியாக பூமி’ நாவலைப் படிக்கும்போதெல்லாம் மனதில் உத்வேகம் ஏற்படும். மு.வரதராசனின் ‘கள்ளோ காவியமோ’, சுதந்திரப் போராட்ட காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை வைத்து பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியும் என்பதை விவரிப்பதாக இருந்தது.

ராபின் ஷர்மா எழுதிய ‘தனது பொக்கிஷத்தை விற்ற துறவி’, ‘யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்’ ஆகிய புத்தகங்களைத் தற்போது படித்துவருகிறேன். ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களைப் படித்தால்கூட நிச்சயம் மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் உணர முடியும். நிம்மதியைத் தேடி அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த இயந்திரமயமான வாழ்க்கையில் மனநிறைவு என்பது நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் உள்ளது என்பதை புத்தகங்கள் உணர்த்திவிடும். புத்தகங்களைவிடச் சிறந்த நண்பர் யாருமில்லை.

- ஏ.சாந்தி, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x