Last Updated : 11 Feb, 2018 11:26 AM

 

Published : 11 Feb 2018 11:26 AM
Last Updated : 11 Feb 2018 11:26 AM

வான் மண் பெண் 42: பெண்களின் ‘பசுமை ஆட்சியியல்’

பெ

ண்களை இயற்கைக்கும் நிலத்துக்கும் நிகராக ஒப்பிடுவது உண்டு. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம், பெண்களின் உயிரியல் செயல்பாடுகள். பெண், இன்னொரு உயிரைத் தனக்குள் வளரச் செய்பவள். இயற்கையும் நிலமும் அத்தகைய தன்மையைப் பெற்றிருப்பதால்தான் பெண் இயற்கையின் அம்சமாகவும் பூமாதேவியாகவும் கருதப்படுகிறாள்.

இந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டே பெண்களால் சூழலியலைக் காப்பாற்ற முடியும் என்று பலர் சொல்லிவந்தார்கள். அது நிரூபிக்கப்படாத கோட்பாடாக இருந்துவந்தது. ஆனால், அந்தக் கோட்பாட்டைத் தன் கள ஆய்வுகள் மூலம் முதன்முதலில் அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர் வீணா அகர்வால்.

பெண்ணியப் பொருளாதார அறிஞர்

இந்தியாவில் 1951-ல் பிறந்த வீணா அகர்வால், தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பொருளாதாரப் பட்டம் பெற்ற வீணா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் புலத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உலகம் முழுவதிலிருந்தும் வெளியாகும் பல்வேறு ஆய்விதழ்களில் 80-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 12 புத்தகங்கள் ஆகியவற்றை எழுதியிருக்கும் இவர், உலகின் முக்கியமான பெண்ணியப் பொருளாதார அறிஞர்களில் ஒருவர்.

இவரின் பங்களிப்பு இந்தியா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவர் எழுதிய ‘எ ஃபீல்ட் ஆஃப் ஒன்ஸ் ஓன்’ என்ற புத்தகம், பெண்களுக்கான நில உரிமையைப் பற்றிப் பல நாட்டு அரசுகள், சர்வதேச அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பெண்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத் தரவும் துணைநின்றது.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் - சுற்றுச்சூழல் புலத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர், தன் பணிகளுக்காக தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். தன் பெற்றோர் சூரஜ் மல்-ஷ்யாமா தேவி அகர்வால் பெயரில் கடந்த ஆண்டு சர்வதேச விருது ஒன்றையும் இவர் நிறுவியிருக்கிறார். பெண்ணியப் பொருளாதாரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த விருது வழங்கப்பட உள்ளது.

கூட்டு வன மேலாண்மை

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் இயற்கையின் அம்சமாகக் கருதப்பட்டாலும் காடுகள், நதிகள், நிலங்கள் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அவர்களுக்கு இடமளிக்கப் படவே இல்லை. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் மட்டுமல்ல, தங்களுக்கான தேவைகளை, தங்களின் இடர்பாடுகளை எடுத்துக்கூறவும்கூட அவர்களுக்கு இடமளிக்கப்பட்டதே இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் சில ஆண்டுகளில் இந்த நிலையே தொடர்ந்தது.

பிறகு 1957-ல் பல்வந்த்ரே மேத்தா ஆணையமும் 1965-ல் சந்தானம் ஆணையமும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன. அதை ஏற்றுக்கொண்ட அன்றைய மத்திய அரசு, அதற்குப் பின் வந்த ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்க பெண்களுக்கும் வாய்ப்பளித்தது. காலம் செல்லச் செல்ல கல்வி கற்கும் வாய்ப்பு விரிவடைய, பெண்கள் பல துறைகளிலும் கால் பதிக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு சமூக மேம்பாடு சார்ந்த எந்தவொரு திட்டமும் பெண்களின் மேம்பாட்டையும் உள்ளடக்கியே தீட்டப்பட்டது. அந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, அதில் பெண்களும் அதிக அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

இந்த வகையில் 90-களின் ஆரம்பத்தில் நாட்டில் உள்ள வனங்களைப் பாதுகாக்க ‘கூட்டு வன மேலாண்மை’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அழியும் நிலையில் உள்ள வனப் பகுதிகளை மக்களிடமே கொடுத்து, அவற்றைப் பராமரிக்கச்செய்து, அதன் மூலம் கிடைக்கும் பலன்களும் மக்களுக்கே வழங்கப்பட்டுவந்தன. அதாவது விறகுகள், கால்நடைத் தீவனம், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை மக்களே எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், அந்தப் பலன்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்றால் சில காலத்துக்கு வனப் பகுதிகளைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். மரம் வெட்டாமல் இருப்பது, கிழங்குகளை வேருடன் பிடுங்காமல் இருப்பது, காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பது போன்றவை பின்பற்றப்பட வேண்டும். இவற்றைச் சரியாகச் செய்ய, வனப் பகுதிகள் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்தக் குழுக்கள் பெரும்பாலும் ஆண்களையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தன. ஆனால், மத்திய அரசின் தலையீட்டால் அந்தக் குழுக்களில் குறைந்தபட்சம் இரண்டு பெண்களாவது இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டது.

பெண்களின் பங்களிப்பு

அதன் பிறகு சில குழுக்களில் இரண்டு பெண்களும் இன்னும் சில குழுக்களில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இன்னும் சில குழுக்களில் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராகப் பெண்கள் இருந்தனர். இன்னும் சில குழுக்களில் அனைத்து உறுப்பினர்களும் பெண்களாகவே இருந்தனர். அப்போது, பெண்கள் அதிக அளவில் இருந்தால் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலும் முடியாது என்பதே பதிலாக வந்தது. அந்தப் பதிலைச் சொன்னவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவும் சில நேரம் பெண்களாகவும் இருந்தனர்.

இப்படிப்பட்ட தருணத்தில் குஜராத் மாநிலத்திலும் நேபாளத்தின் சில கிராமங்களிலும் தனது ஆய்வை மேற்கொண்டார் வீணா அகர்வால் பாதுகாப்பு, பராமரிப்பு, விதிகள், விதிகளை மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்குவது, பலன்களை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிப்பது என வனம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் பெண்கள் அதிக அளவில் உள்ள குழுக்களில் ஒவ்வொரு பெண்ணும் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்ய முடிவதை வீணா கண்டுகொண்டார். பெண்கள் அதிக அளவில் இல்லாத குழுக்களில் அவர்களின் கருத்துகள் கவனம் பெறாது அடங்கிப் போவதையும் உணர்ந்தார்.

பெண்கள் அதிக அளவில் உள்ள குழுக்கள் பராமரித்த வனப் பகுதிகள், அதிக அளவில் பலன்களைத் தந்ததோடு வனத்தின் அடர்த்தியும் பரப்பும் அதிகமாகியிருப்பதையும் வீணா தெரிந்துகொண்டார். இந்த ஆய்வின் மூலம், ‘பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டால் இயற்கை வளத்தை நிச்சயமாகப் பாதுகாக்க முடியும்’ என நிரூபித்தார். ஆனால், அதேநேரம், ‘சூழலியல் பெண்ணியம்’ என்ற கோட்பாட்டின் மீது தனது விமர்சனத்தையும் வைக்கிறார்.

“பெண்களைத் தனிமைப்படுத்தி அவர்களைச் சுற்றுச்சூழலுக்காகப் போராடச் சொல்வது, மீண்டும் அவர்களைத் தனிமைப்படுத்தவே செய்யும். மேலும் வர்க்கம், சாதி, கிராமம், நகரம் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பெண்ணுக்குமான சூழலியல் தேவைகள் வெவ்வேறாக இருக்கும். அப்படி இருக்கும்போது தாங்கள் வாழும் பகுதியில் ஆண்களுடன் இணைந்து அவர்கள் பணியாற்றுவதே சிறப்பாக இருக்கும். ஆண்களைவிடப் பெண்களால் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்பது சரிதான். ஆனால் அதேவேளை, பெண்களால் மட்டுமே இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்று சொல்வதும் தவறு” என்கிறார் வீணா அகர்வால். தன் ஆய்வு முடிவுகளை ‘ஜெண்டர் அண்ட் கிரீன் கவர்னென்ஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

ஆண்களுடன் இணைந்து பணியாற்றுகிற வாய்ப்புகளையும் பெண்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கான வசதிகளையும் தொண்டு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுடன் பெண்களுக்கு அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தால் ‘பசுமை ஆட்சியியல்’ சாத்தியமே என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x