Published : 11 Feb 2018 11:27 AM
Last Updated : 11 Feb 2018 11:27 AM

எசப்பாட்டு 22: பெண்ணே பொறாமைகொள்ளும் ‘பேரழகு’

னக்குழு வாழ்க்கையில் வலுவான இடத்திலும் உடல் பலத்துடனும் இருந்த பெண்கள், விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு குழுவின் அன்றாடத் தேவைக்குப் போராட வேண்டிய கட்டம் முடிவுக்கு வந்தது. உபரியாக விளைந்ததைச் சேமிக்கவும் உணவைப் பாதுகாக்கவும் மனிதர்கள் உத்திகளைக் கண்டுபிடித்தபின் உணவுத் தேடலுக்காகப் பெண்கள், ஆண்களோடு சரிநிகர் சமானமாகக் கிளம்பிய இயல்பான வாழ்க்கையும் முடிவுக்குவந்தது. தனிச் சொத்துடைமையின் பிறப்போடு பின்னிப் பிணைந்ததாகப் பெண் மீது கற்பு திணிக்கப்பட்டது. விவசாய வாழ்வின் உச்சகட்டமாக நிலவுடைமைச் சமூகம் எழுகிறது.

தமிழகத்தில் அது மருத நிலத்தில், ‘பண்டு விளைந்தறியாக் களர் நிலங்களைக் கழனிகளாக்கிய’ குறுநில, பெருநில மன்னர்களின் ஆட்சிக் காலமாக உருவெடுத்தது. வேட்டைக் காலத்துக்குப் பிந்தைய காலத்தின் பெண்களின் நிலை குறித்த வரலாற்றுப் பதிவுகள் சில கல்வெட்டுகளில் கிடைத்துள்ளன. எழுத்தில் பதிவு என்பது சங்க இலக்கியத்தில்தான் கிடைக்கிறது. இவற்றைத் திசைகாட்டும் கருவியைப் போல் கையில் வைத்துக்கொண்டு கால இயந்திரத்தில் ஏறி, கடந்த காலத்தின் வழியாகப் பயணித்துப் பெண்களின் வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்ச முடியும்.

ஆண்களின் ‘ஒழுக்கம்’

முல்லை நிலத்தில் முகிழ்த்த பெண்ணடிமைத்தனம் மருத நிலத்தில் புது வடிவம் பெற்றது. பெண் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுவதும் அது உயர்வான பண்பாடென்று போற்றப்படுவதும் அதே வேளை ஆணுக்குப் புதிய, கட்டற்ற சுதந்திர வாசல்களைத் திறந்துவைப்பதும் நடந்தது. வீட்டுப் பெண்கள் பத்தினிகளாக மண்மகள் அறிந்திடாத வண்ணச் சீரடிகளோடு கணவனைச் சார்ந்து வாழ விதிக்கப்பட்டாள். அவனுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்பவளாக, மனையோள், இல்லக்கிழத்தி, மனையுறை மகளிர் போன்ற புனிதப்படுத்தப்பட்ட பெயர்களோடு அவனுடைய குழந்தையைப் பெற்றெடுத்துத் தருகிற ‘புதல்வன் தாய்’ ஆக்கப்பட்டாள்.

ஆண், சொத்துக்கு அதிபதி ஆனதோடு ஓய்வு நேரமும் கிடைக்க எப்போதும் களிப்பில் திளைக்க அவனால் முடிந்தது. பெண், அவனால் ருசிக்கப்படும் பொருளாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் போக்கு தொடங்கியது. மனைவி என்னும் பெண் உடல், இனவிருத்தி சார்ந்த கருவுறுதல், மகப்பேறு காலம், பாலூட்டும் காலம் போன்ற காலங்களில் ஆணின் உடல் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத யதார்த்தத்தை ஆண் மனம் ஏற்க மறுத்தது. அந்தக் காலங்களிலும் இடைவெளியின்றித் தன் பாலியல் வாழ்க்கையைத் தொடர்வதற்குப் பிற பெண்களை நாடினான். சமூகம் அதற்கான ஏற்பாட்டைச் செய்து பரத்தமை ஒழுக்கம் என்று அதையும் ஓர் ‘ஒழுக்கமாக’ நிறுவியது.

கட்டற்ற சுதந்திரம்

இது குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ள முனைவர் க.பரிமளம், “பாலியல் வாழ்க்கையைத் தொடர அவளது இனவிருத்தி சார்ந்த உடற்கூற்றுச் செயல்பாடுகள் நிகழும் காலங்கள் சாதகமாக இல்லாதபோது, பொருளால் பெறக்கூடிய பரத்தமை ஒழுக்கத்தை ஆண் மேற்கொண்டான். அன்று அது பெரும் ஒழுக்கக் கேடானதாகக் கருதப்படவில்லை. ஆணின் பரத்தமை, மனைவிக்கு இழைக்கும் பாலியல் துரோகமாகக் கருதப்படாமல் அவனது அகவாழ்க்கையின்பாற்பட்ட இன்ப நுகர்ச்சியின் இயல்பான ஒழுக்கமாகவே கருதப்பட்டது” என்று சொல்கிறார். ஆண்களின் இந்தத் தேவையை நிறைவேற்றும் சேவையைச் செய்வதற்காகவே பரத்தையர் வீதிகள் உருவாகின. இப்படிப் பரத்தையரைத் தேடிச்செல்லும் ஆணை மனைவியைத் தவிர சமூகத்தில் வேறு யாருமே கண்டிக்கவில்லை. அல்லது தலைவியின் சார்பாகத் தோழி அவனை நல்வழிப்படுத்த முனைவாள்.

இப்படித் திரியும் வீட்டு ஆம்பிளையைத் தன் கைக்குள் போட்டுவைக்கப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி அவனைத் தன் மீது ஈர்ப்புக்கொள்ளச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட நேர்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே, “அவனை வளைச்சிப் போடுடி... அப்புறம் பாரு குட்டி போட்ட பூனை மாதிரி உன் பின்னாடியே சுத்துவான்” என்பது போன்ற வசனங்கள் இன்றும் எதிரொலிக்கின்றன.

“ கேட்டேளே அங்கே அதைப் பார்த்தேளா இங்கே

எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்

ஆம்படையான் மனசு போலே நடப்பேன்

இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்

வாங்கோன்னா அட வாங்கோன்னா ”

என்ற சினிமாப் பாடலை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கையில் எவ்வளவு அருவருப்பு ஏற்படுகிறது.

எல்லை மீறிய அழகுணர்வு

மஞ்சள் குறித்துத் தமிழறிஞர் தொ.பரமசிவன் ஓரிடத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. “பரத்தையர் தம் முகத்தைப் பளிச்சென வைத்துக்கொள்ளவும், பல ஆடவருடன் உறவு கொள்வதால் நோய்த்தொற்று ஏதும் வராமல் தடுப்பதற்காகவும் கிருமிநாசினியான மஞ்சளைத் தம் முகத்தில் பூசிக்கொண்டனர். காலப்போக்கில் அவனைத் தன் பக்கம் ஈர்க்க குடும்பப் பெண்களும் மஞ்சள் பூசிக் குளிக்க ஆரம்பித்திருக்க வேண்டும்” என்றார். இன்று நடிகைகள் போலத் தாமும் அழகுசாதனப் பொருட்களை அபரிமிதமாகப் பயன்படுத்தித் தம்மை அழகுப் பதுமைகளாக ஆக்கிக்கொள்ள முயலும் பெண்களின் உளவியலுக்குள் ஆண் சார்ந்த ஆதிகால அச்சமே தொடர்வதாகக் கொள்ளலாம். அழகுசாதன நிறுவனங்களின் வியாபார விளம்பரங்கள் அதற்குக் கூடுதலாக உதவுகின்றன.

அழகுணர்வு, ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அது ஆரோக்கியமான, பண்பாட்டு வளர்ச்சிப் போக்கில் உருவான இயல்பான ஒன்றுதான். ஆனால், பெண் என்றாலே அழகுப் பதுமை என்பதாக ஒரு சித்திரம் வரலாற்றின் பக்கங்களில் வரையப்பட்டு வரையப்பட்டு அது பெண்ணின் ஆழ்மனம்வரை செலுத்தப்பட்டுவிட்டதுதான் ஆணாதிக்கத்தின் அம்சமாகிறது. தான் ‘பார்க்கப்படுபவள்’ என்ற தன்னுணர்வு பெண் மீது ஏற்றப்பட்ட வரலாறு இது.

தொழிற்புரட்சிக்குப் பிறகு முன்னேறிப் பாய்ந்த முதலாளித்துவ உலகம் பெண்ணுடலை-பெண்ணின் அழகை கரன்ஸி நோட்டைப் போல பயன்படுத்தத் தொடங்கியது. அழகுத் தொழிற்சாலைகளும் உருவாகி அழகு பற்றிய புதிய கற்பிதங்களைப் பெண்ணின் உடல் வழியே உலகுக்குப் பரப்புரை செய்யத் தொடங்கின. ‘அழகிகள்’ என்ற புதிய இனக்குழு உருவாக்கப்பட்டது. அழகிக்கான இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டன. பெண்ணின் மார்பளவு, இடுப்பளவு போன்றவை உலகப் பொது வரையறைகளுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்த ‘அழகிகள்’ பின்னர் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான தூதுவர்களாக அறிவிக்கப்பட்டனர். உலகமயப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இந்த அழகிகள் ஆக்கப்பட்டனர். அதன் இயல்பான தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பெண்கள் ஒரே மாதிரி அழகிகளாகத் தம்மைத் தகவமைத்துக்கொள்ள உந்தித் தள்ளப்பட்டு வருகின்றனர்.

அழகில் இருந்து விடுதலை

அழகிகள் என்ற இனக்குழுவைப் போல ‘மாடல்கள்’ என்னும் புதிய பெண்ணினமும் தோற்றுவிக்கப்பட்டது. பெண்ணுடலை, அவள் முகத்தை உலகளாவிய அளவில் செதுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆணின் மனதைத் தொடுவதற்காக மஞ்சள் பூசி அழகுபடுத்திக்கொள்வது இப்போது இரண்டாமிடத்துக்குச் சென்றுவிட்டது. வர்த்தக உலகத்தின் தேவைக்கேற்பத் தன் உடலையும் உள்ளத்தையும் தகவமைக்கப் பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.

இதெல்லாம் நவீன உலகத்தின் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட முடியாது. தாய்மை, பெண்மை என்று அவளைச் செதுக்கிய வேலை ஒருபுறம் தொய்வின்றித் தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இன்னொரு புறம் ‘அழகிய பெண்’ என்ற புதுக் கதையும் ஓடத் தொடங்கிவிட்டது. இந்தப் போக்கு பெண்ணின் உளவியலில் ஆண்களால்தான் பார்க்கத்தக்கவளாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்துத் தான் ஒரு உடல் மட்டுமே என மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வைப்பதில் போய் முடிகிறது.

ஆண் தன்னைப் பார்க்கிறான், தன் அழகைப் பார்க்கிறான் என்பதால் பெண் எப்போதும் தன்னைப் பார்ப்பவளாக மாற்றப்படுகிறாள். பெண்ணை, அவளது தன்னுணர்வை அவளுடைய உடம்புக்குள்ளேயே வைத்துப் பூட்டும் வேலையைத்தான் ஆணாதிக்கமும் வர்த்தக உலகமும் இணைந்து செய்துவருகின்றன. உடம்பிலிருந்து பெண்மை விடுதலை பெற வேண்டும், இவர்கள் சொல்லும் அழகிலிருந்தும்!

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x