Published : 11 Feb 2018 11:27 AM
Last Updated : 11 Feb 2018 11:27 AM

விவாதம்: இன்னும் ஏன் தயக்கம்?

இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேட்மேன்’ திரைப்படத்தையொட்டி பலரும் சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். பாலிவுட் நடிகர்களும் பிரபலங்களும் கையில் சானிட்டரி நாப்கினைப் பிடித்தபடி படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். அதைத் தொடர்ந்து பலரும் அதைச் சவாலாக ஏற்றுச் செய்ய, கடந்த வாரம் அதுபோன்ற ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், தீங்குகளைப் பற்றிச் சிலர் கருத்து சொன்னதோடு சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக வந்திருக்கும் menstrual cup எனப்படும் மாதவிடாய் குப்பியைக் கையில் பிடித்தபடி படமெடுத்துப் பகிர்ந்தார்கள்.

ஆண்களும் பெண்களும் இப்படிப் பொதுவெளியில் சானிட்டரி நாப்கின் குறித்துப் பேச முன்வருவது மாதவிடாய் குறித்த மனத்தடையைக் குறைக்கும் என்று சொல்லப்பட்டது. இப்படிப் படமெடுத்துப் பதிவுசெய்வதால் மட்டுமே மாற்றம் சாத்தியமில்லை என்ற எதிர் கருத்தும் ஒலித்தது. இந்தியாவில் 12 சதவீதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரக் கணக்கு. அதன்படி பார்த்தால் மீதமுள்ள 88 சதவீதப் பெண்களுக்கு மாதவிடாய் குறித்தோ அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரமான வழிமுறைகள் குறித்தோ தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியக் கிராமங்கள் பலவற்றில் லட்சக் கணக்கான பெண்கள் மரத்தூள், சருகுகள், காகிதங்கள், பழைய துணிகள் போன்றவற்றைத்தான் மாதவிடாய் நாட்களில் நம்பியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் இருந்தும்தான் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதோ, கடைகளில் சானிட்டரி நாப்கினை வாங்குவதோ தவறு என்று பெரும்பாலான பெண்களே நினைக்கிறார்கள். வீட்டில் இருக்கும் ஆண்களுக்குத் தெரியாமல் மறைத்துச் செயல்படுவதில்தான் மாதவிடாயின் மகத்துவம் அடங்கியிருப்பதாக நினைக்கும் இந்தியப் பெண்கள் ஏராளம். பெண்களுக்கே இப்படியான மனத்தடைகள் இருக்கும்போது ஆண்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தங்கள் வீட்டுப் பெண்களின் மாதவிடாய் நேரத்து வேதனையைப் புரிந்துகொண்டு உதவுகிற ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ‘அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்’ என்று சொல்லிவிட்டு விலகிவிடுவது அவர்களுக்கு மிக எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது.

மாதவிடாய் குறித்தோ அதற்கான உபகரணங்கள், சுகாதாரம் குறித்தோ பொது வெளியில் பேசுகிற ஆணையும் பெண்களையும் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை. சமூக அமைதிக்குக் கேடு விளைவிப்பவர்கள் போலவே பலரும் அவர்களை அணுகுவார்கள். அப்படி அணுகுகிறவர்களின் மனங்களில் ஆண்கள் சானிட்டரி நாப்கின்களோடு நிற்கும் ஒளிப்படங்கள் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்திவிடுமா? ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம்தோறும் இயற்கையாக நிகழும் உடலியல் செயல்பாடு குறித்துப் பேசுவது அத்தனை பெரிய குற்றமா? மாதவிடாய் குறித்துப் பேசுவதற்கும் அதை எதிர்கொள்வதற்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மனத்தடைகளை எப்படிக் களைவது?

நீங்க என்ன சொல்றீங்க?

தோழிகளே, மாதவிடாய் குறித்தும் அந்த நேரத்து சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்ற குரல் உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் உங்கள் அனுபவம் என்ன, கருத்து என்ன? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x