Last Updated : 11 Feb, 2018 11:27 AM

 

Published : 11 Feb 2018 11:27 AM
Last Updated : 11 Feb 2018 11:27 AM

வட்டத்துக்கு வெளியே: பழைய காயங்கள் புதிய நம்பிக்கைகள்

டுமலைப்பேட்டையில் கடந்த ஆண்டு ஆட்கள் கூடியிருந்த சாலையில் நடந்த கொலை, அதன் சிசிடிவி பதிவுக் காட்சியால் மக்களின் பேசுபொருள்களுள் ஒன்றானது. கொலைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர். சமீபத்தில் அவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அந்தச் சம்பவம் மக்களின் நினைவிலிருந்து விடைபெற்றுவிடும். ஆனால் தானுண்டு வீடுண்டு என்று வாழ்ந்துவந்த கெளசல்யா என்ற சாதாரண ‘குடும்பப் பெண்’ணின் வாழ்க்கை இந்தச் சம்பவத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது. கணவர், கொலைசெய்யப்பட்டுவிட்டார். கொன்றவர்கள், தன் குடும்பத்தினர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, அவர் தன்னை எப்படி நிலைநிறுத்திக்கொண்டுள்ளார் என்பது பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம். அதை அறியத் தருகிறது சமீபத்தில் வெளிவந்துள்ள ‘சாதிகள் இருக்கேடி பாப்பா’ ஆவணப் படம்.

‘மாதவிடாய்’ ஆவணப் படம் மூலம் கவனம் பெற்ற கீதா இளங்கோவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘சாதிகள் இருக்கேடி பாப்பா’ என்ற தொடர் ஆவணப் படத்தின் 3-வது பகுதி இது. சாதிகள் பற்றிய குழந்தைகளின் சந்தேகத்துக்கான பதில்களாக மற்ற இரு பகுதிகளை அவர் உருவாக்கியுள்ளார். சாதிப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட கெளசல்யா, இந்த 3-வது தொகுப்பில் ஒரு சாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். பதின்ம வயதிலிருக்கும் குழந்தைகள் அவருடன் உரையாடுகிறார்கள்.

உரையாடலின் வழியே

தன்னுடைய காதல், வீட்டாரின் எதிர்ப்பு, அதையும் மீறித் திருமணம் என கெளசல்யாவின் வாழ்க்கை குறித்தும் குழந்தைகள், அவர்களுக்கேஉரிய ஆர்வத்துடன் கேள்வி கேட்கிறார்கள். அவர்களது சரளமான உரையாடல்கள் மூலம் ஆணவப் படுகொலையிலிருந்த மீண்ட கெளசல்யாவின் இன்றைய வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிகிறது.

பள்ளியில் உடன் படித்த தலித் மாணவியோடு பழகக் கூடாது எனப் பெற்றோர் சொன்னபோதுதான் சாதிப் பாகுபாடு கெளசல்யாவுக்கு அறிமுகமானது. குழந்தைகளுக்கு எப்படிச் சாதிப் பாகுபாடு புகட்டப்படுகிறது என்பதற்கான உதாரணமாக இதைச் சொல்லலாம். “நாங்கள் சாதி ஒழிப்புக்காகத் திருமணம் செய்துகொள்ளவில்லை” என்று ஒரு கேள்விக்கான பதிலில் சொல்கிறார் கெளசல்யா. வீட்டாரின் விருப்பத்தை மீறித் திருமணம் செய்துகொண்டுள்ளோம் என்றுதான் நினைத்திருக்கிறார். படுகொலைக்கு முன்புவரை சாதியின் தீவிரம் படுகொலையில் சென்று முடியும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அந்த நாலு பேர்

தன்னைப் பாசமாக வளர்த்த பெற்றோரே தன்னையும் சங்கரையும் கொல்லத் துணிந்ததற்குக் காரணமானவர்கள் என நாலுபேரைப் பற்றிச் சொல்கிறார். ‘நாலு வித’ மாகப் பேசும் அந்த நாலு பேரரால்தான் சாதி, மதம், புனிதம் போன்ற கற்பிதங்கள் இன்னும் சமூகத்தில் வியாபித்திருக்கின்றன என்பதையும் இதன் மூலம் அவர் சித்தரிக்க முயல்கிறார்.

கிட்டத்தட்ட பிடிமானமற்ற வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட கெளசல்யா, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை வந்து பார்க்கும் சமூகச் செல்பாட்டாளர்கள் தந்த புத்தகங்கள் அவருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கின்றன. குறிப்பாக, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் புத்தகங்களைச் சொல்கிறார். “அந்தப் புத்தகங்களைப் படித்ததன் மூலம் பெண்கள் சடை பின்னத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்” என வெகுளியாகச் சொல்கிறார்.

ஆணவக் கொலை இப்போதுதான் தோன்றியதா என்ற கேள்விக்கு, ஆணவக் கொலையால் மாண்ட பெண் தெய்வங்களைத்தான் நாட்டார் தெய்வங்களாக வணங்கிவருகிறோம் எனப் பதிலளிக்கிறார். இந்தப் பதிலை கெளசல்யா சொல்வது கவனிக்கத்தக்கது. குழந்தைகளின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவரது உடல் மொழியில் இருக்கும் பாவனைகள், அவரது புதிய நம்பிக்கையைக் காட்டுகின்றன. கேள்விகளுக்கான உறுதியான பதில்கள் அவர் வளர்த்தெடுத்துள்ள ஆளுமைப் பண்புக்குச் சான்றுகளாக இருக்கின்றன. ‘தனியாக இருக்கும் பெண்’ எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியும் பேசுகிறார்.

தடை தாண்டிய பயணம்

சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக வீசப்படும் பாலியல் வக்கிர வார்த்தை பற்றிப் பதற்றமின்றிப் பகிர்ந்துகொள்கிறார். காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்களைக் குறிக்கும் ‘ஓடிப்போனவள்’ என்ற வசைச் சொல்லால் இப்போதும் தான் அழைக்கப்படுவது பற்றிச் சொல்லி, சமூகத்தின் நிலையைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு பெண் தனியாக இருப்பதால், எளிதாக அணுகக்கூடியவள் என்ற ஆண்களின் பொது மனப்பான்மையைப் பற்றிப் பக்குவத்துடன் பேசுகிறார்.

கெளசல்யா இப்போது வெளியே வந்திருக்கிறார். காரத்தே கற்றுத் தேர்ந்திருக்கிறார். பறை இசைக்கக் கற்றிருக்கிறார். சாதி ஒழிப்பு தொடர்பான கூட்டங்களில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திவருகிறார். சொந்த முயற்சியால் படித்து, பரீட்சை எழுதி அரசு வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துவருகிறது. இந்தியப் பெண்கள் தொகையில் 21 சதவீதம் பேர் தனியாக வாழும் பெண்கள்தாம் என்கிறது ஓர் அறிக்கை. இந்தப் பின்னணியில், தலை சீவி பொட்டுவைத்த ‘குடும்பப் பெண்’ என்ற இடத்திலிருந்து ஜீன்ஸ் அணிந்து பல்சர் பைக் ஓட்டும் இன்றைய நிலைவரையிலான கெளசல்யாவின் வாழ்க்கையைச் சொல்லும் இந்த ஆவணப்படம், தனியாக வாழும் பெண்களுக்குப் சில புதிய நம்பிக்கைகளைத் தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x