Published : 10 Dec 2017 10:41 AM
Last Updated : 10 Dec 2017 10:41 AM

பெண்ணுக்கு நீதி 13: பெண்களுக்கு எதிரான அக்னிக் குழம்பு

 

‘நா

ன் உன்னைக் காதலிக்கிறேன் என்றுகூட அல்ல. ‘வேறு யாரையும் நான் காதலிக்கவில்லை’ என்றாவது எழுது எனக்கொரு கடிதம்’என்ற வாட்ஸ் அப் தகவலை உதாசீனப்படுத்தியதுதான் அனிதா செய்த ஒரே குற்றம். அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் அவள் மேல் அமிலத்தை வீசினான். அமிலம் அவளது முகத்தைப் பொசுக்கியது. இமைகள், காது, மூக்கு என்று முகம் முழுவதும் சிதைந்து அவள் உயிர் பிழைப்பதே சிரமமானது.

நரகமாகும் வாழ்க்கை

அமில வீச்சு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு வகை. பெண்களுக்கெதிரான அனைத்து வகை பேதங்களையும் களைவதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தின்கீழ் (CEDAW) இதுவும் பாலியல்ரீதியிலான பாகுபாட்டின் அடிப்படையிலான குற்றமே.

உலகிலேயே அமில வீச்சு அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லை கடந்து உலகம் முழுவதற்கும் பொதுவானவையாகவே இருக்கின்றன. இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரையில் வங்கதேசம், கம்போடியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவைவிட மோசம். இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் 14 முதல் 35 வயது வரையிலான பெண்களாகத்தான் இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள ஆண் வெளிப்படுத்தும் ஆசையை நிராகரிப்பது, காதலர்களாகப் பழகிய பின் திருமணத்துக்கு ஏதோவொரு காரணத்தால் மறுப்பு சொல்வது, பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பது/தவிர்ப்பது போன்றவை இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.

அமில வீச்சுக்களால் பெண்களின் அடையாளம் அழிக்கப்படுகிறது. ஆளுமையும் தன்னம்பிக்கையும் ஒடுக்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அமில வீச்சுக்குப் பிறகு மீண்டும் சராசரி வாழ்க்கையைத் தொடரும் வாய்ப்பே பல பெண்களுக்கு இல்லாமல் போகிறது. அமில வீச்சின் பின்விளைவுகளை அன்றாடம் அனுபவிக்கும் பெண்மனம் தினம் தினம் இறப்புக்கு நிகரான வேதனையை அனுபவிக்கிறது.

டெல்லி கூட்டு வன்புணர்வு வழக்குக்குப் பிறகு அமில வீச்சு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வரையறுக்கப்பட்ட குற்றங்களாகக் கருதி, புதிய சட்டப் பிரிவுகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன (இ.த.ச 326 ஏ).

வழிகாட்டும் நெறிமுறைகள்

அமில வீச்சில் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கான உடனடித் தேவைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் 2015-ல் வழிகாட்டும் நெறிகளை வழங்கியுள்ளது. அதன்படி, ‘தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுமையான மருத்துவ வசதி அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனை என்பதால் மட்டும் இத்தகையவர்களுக்குச் சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது. அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண், முதன்முதலில் சிகிச்சைக்குச் செல்லும் மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு அமில வீச்சுக்கு உள்ளானவர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும். அந்தச் சான்றிதழை அவர் மேல் சிகிச்சையைத் தொடரவும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இது தொடர்பாக மாநில அரசு வழங்கக்கூடிய ஏனைய திட்ட உதவிகளைப் பெறவும் பயன்படுத்தப்படலாம்’ என்று விரிவான விதிமுறைகளை அளித்தது.

நிவாரணத்துக்கான உத்தரவுகள்

மேலும் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல் துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் போன்றோரையும் உள்ளடக்கிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், அந்த மாவட்டத்துக்கான நிவாரண வாரியமாகச் செயல்பட்டு, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரண தொகையை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தவிர அமில வீச்சு குற்றத்துக்கு தண்டனை பெறும் குற்றவாளிக்குத் தண்டனையுடன் சேர்த்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அபராதத் தொகையை நிர்ணயிக்கும்போது அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மருத்துவ செலவைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அமில வீச்சு மூலம் பெண்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் குற்றவாளிகளுக்கு எத்தனை வழக்குகளில் தண்டனை கிடைக்கிறது?

பாதுகாப்பு அவசியம்

இத்தகைய குற்றங்களுக்கெதிரான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் வழக்குகளின் விகிதம் ஏன் குறைவாகவே இருக்கிறது என்பதற்குப் பலவித காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, அமில வீச்சுத் தாக்குதல் போன்ற குற்றங்களைப் புலன்விசாரணை செய்யும் காவல் துறையினர் அது பற்றிய முழுமையாக புரிதலோ விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கிறார்கள். மேலைநாடுகளில் இருப்பது போன்ற சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண், அமிலத்தால் அச்சுறுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக அமிலம் வீசிய குற்றவாளியாலும் அச்சுறுத்தப்படும் அவலம் நிகழ்கிறது. குறைந்தபட்சம் சாட்சி சொல்லும் சமயத்திலாவது பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்க உரிய இடத்தைப் பராமரிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறது

மனத் தடைகளை உடைத்தெறிவோம்

முக அழகு ஒன்றையே பெண்களின் முக்கிய மூலதனமாகக் கருதும் பொதுப் புத்தியும் ஆண்களின் உலகமும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வதில் சுணக்கம்காட்டுகின்றன. இத்தகைய பாரம்பரியமான மனத் தடைகளை உடைத்தெறிய வேண்டும். அமில வீச்சால் பெண்களின் அடையாளம் அழிக்கும் ஈனச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது, சட்டத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல, சமுதாயத்தின் கையில் தரப்பட்ட சாசனமும்கூட. அமிலம் வீச நினைப்பவர்கள் ஒரு விரலால் அதைத் தொட்டுப்பார்த்தாலேகூட, தான் செய்ய நினைக்கும் தவறைச் செய்ய மாட்டார்கள்.

(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x