Published : 10 Dec 2017 10:31 AM
Last Updated : 10 Dec 2017 10:31 AM

தஞ்சை வாசகியரின் உற்சாகத் திருவிழா

கலைகளின் பிறப்பிடமான தஞ்சை நகருக்குப் பெருமைசேர்க்கும் வகையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ மகளிர் திருவிழா தஞ்சையில் டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் டிசம்பர் 3-ல் நடைபெற்றது. கொட்டும் மழை மகளிருக்காகச் சற்று விட்டுக்கொடுத்த அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட, நாளெல்லாம் உழைக்கும் இல்லத்தரசிகளும் பணிக்குச் செல்லும் பெண்களும் கல்லூரி மாணவிகளும் அனுபவத்தில் முதிர்ந்த பெண்களும் உற்சாகத்தோடு அரங்கை நிறைத்தனர். பெண்ணினத்தைக் கூர்தீட்டும் கருத்துகளைக் கேட்கவும் திறமைகளை வெளிப்படுத்தவும் ‘நமக்காக ஒரு நாள்’ என்ற உணர்வோடும் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

சாதனைப் பெண்கள், போராட்டங்கள் பல கண்ட பெண் ஆளுமைகள், பெண் கல்வியாளர்களின் கருத்துரைகள், கண்டுகளிக்க கலைநிகழ்ச்சிகள் என நாள் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுடனும் கொண்டாட்டத்துடனும் கழிந்தது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞரும் தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமான த. பானுமதி குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ஆர். திராவிடராணி, ‘பெண் என்பதே அடையாளம்’ என்ற தலைப்பில் பேசினார்.

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காதீர்

விழாவில் பேசிய வழக்கறிஞர் பானுமதி, “குடும்பத்தினர், ஆண்களை 24 மணி நேரமும் வெளியில் உலவ அனுமதிக்கின்றனர். ஆனால், பெண்கள் மாலை ஐந்து மணிக்குள் வீடு திரும்பிவிட வேண்டும் என்கின்றனர். இரவு நேரங்களில் பொதுவெளியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொதுவெளியைப் பெண்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். பெண்களும் சம்பாதிக்க வேண்டும் என்பதை இல்லதரசிகள் உணர வேண்டும்.

DSC_4740right

காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறுங்கள். இந்த உலகத்தில் சரிபாதிப் பெண்கள். ஆனால், பொதுவெளியில் பார்த்தால் ஆண்களின் நடமாட்டம்தான் அதிகமாக உள்ளது. அதனால்தான் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. பெண்களும் அதிக அளவில் பொதுவெளிக்கு வந்துசெல்கிறபோதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்.

பெண்களைப் பார்த்து இன்றளவும் ஆண்கள் ஒருவித அச்சத்துடனயே உள்ளனர். தங்க நகைகளை வீட்டில் பூட்டிவைத்துவிட்டுச் செல்பவரின் மனது பதைபதைப்பதைப் போல ஆண்களின் மனதும் பதைபதைக்கிறது. அதனால்தான் நமக்கு இன்றுவரை அரசியல் நீதி கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ஏற்காமல் மசோதாவைத் தள்ளிவைத்துக்கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து பெண்களைத் திசை திருப்பத்தான் உரிமைகளைப் பிசிறு பிசிறாகப் பெண்களுக்குத் தருகின்றனர்.

‘வீடுகள் உள்பட அனைத்து இடங்களிலும் பெண்களின் மொத்த உழைப்பு நான்கில் மூன்று பங்காக உள்ளது. ஆனால், அவர்களுக்கு ஊதியமோ பத்து சதவீதம்தான் கிடைக்கிறது’ என ஓர் ஆய்வு சொல்கிறது. 75 சதவீத உழைப்புக்கு 75 சதவீதக் கூலியும் சொத்தும் கிடைத்தால் இந்த உலகத்தில் யார் ஆளுமை இருப்பார்கள் என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார, சமூக, அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவர்களை நம்மால் எதிர்கொள்ள முடியாது என்ற ஆணாதிக்க அச்சத்தின் வெளிப்பாடுதான் பெண் உரிமைகள் மறுக்கப்படுவது” என்றார்.

தைரியமூட்டி வளருங்கள்

முனைவர் ஆர். திராவிடராணி பேசும்போது, “21-ம் நூற்றாண்டில் பல்வேறு தளங்களில் பெண்கள் இன்று உயர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுக்கப்படுகிறதா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம், அடிப்படை உரிமைகளைக் கேட்டுப் பெண்கள் போராடிய காலத்துக்கு முன்பே தமிழகத்தில் உரிமை கேட்டுப் பெண்கள் போராடிய வரலாறு உள்ளது. ஆனால், இன்று பெண்கள் பணியாற்றும் இடங்களில் ஒடுக்கப்படுகின்றனர். கூலி வேலைக்குச் செல்லும் இடங்களில்கூட ஊதிய வேறுபாடு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆணாதிக்கப் போக்குக்கு நடுவில் பணியாற்றும் நிலையில்தான் பெண்கள் உள்ளனர். பெண்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் திறனைக் கற்றுத்தர வேண்டும். அந்தக் குழந்தையைத் தொடுபவர் என்ன நோக்கத்துக்காகத் தொடுகிறார் என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் அதை எதிர்க்கும் துணிச்சலையும் ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தைரியசாலிகளாகவும் எதிர்காலத்தில் சமூகத்தில் தங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்கும் திறனோடும் பெண் சமுதாயம் வளரும்” என்றார்.

விவசாயத்தைக் காக்க வேண்டும்

சிறப்பு விருந்தினர்கள் பேசி முடிந்ததும், ‘விவசாயம் வளர்கிறதா, தேய்கிறதா?’ என்னும் தலைப்பில் பேச்சரங்கம் நடந்தது. புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் சி. அமுதா நடுவராகச் செயல்பட்டார். ‘விவசாயம் வளர்கிறது’ என சாஸ்த்ரா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சத்யா ஆல்பர்ட் பேசினார். ‘தேய்கிறது’ என்று பேசிய பேராசிரியர் திராவிடமணி, விவசாயம் எதிர்கொள்ளும் சவால்களையும் விவசாயிகள் படும்பாட்டையும் உணர்வுபூர்வமாக விளக்கினார்.

நடுவர் அமுதா, “வீழ்கிறது என்பதுதான் மெய்யாக உள்ளது. இருப்பினும் வீழவிடாமல் காக்க வேண்டும். விளைநிலங்களும் நீர்நிலைகளும் கட்டிடங்களாகவும் தொழிற்சாலைகளாகவும் பொழுதுபோக்குக் கூடங்களாகவும் மாறிப்போனதும், யானைபோல இருந்த ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் வாலைப் போல் சுருங்கிவருவதும் கவலையளிக்கிறது. மீண்டும் இவற்றை நாம் புதுப்பித்தாலும், அழியாமல் பாதுகாப்பது இளைய சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. அதற்கு, நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.

பரிசு மழை

தஞ்சை செல்வராணி -ராஜேஷ் தப்பாட்டக் கலைக்குழுவினரின் பறையாட்டம் வாசகிகளை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. உணவு இடைவேளைக்குப் பிறகு இவர்கள் நிகழ்த்திய பொய்க்கால் குதிரையாட்டம் அரங்கையே அதிரவைத்தது. அதே உற்சாகத்துடன் போட்டிகள் தொடங்கின. பந்து பாஸ் செய்தல், பொட்டு ஓட்டுதல், மைம், தலையில் ஸ்டிரா செருகுதல், பலூன் உடைத்தல் என வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்றவர்களுக்கும் பரிசு வழங்குவது ‘பெண் இன்று’ மகளிர் திருவிழாவின் சிறப்பு. அந்த வகையில் போட்டிகளில் பங்கேற்ற அனைவரும் பரிசு பெற்று மகிழ்ந்தனர். இவற்றுக்கு நடுவே தஞ்சாவூரைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதிலைச் சொன்ன வாசகியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழச்சியின் முத்தாய்ப்பாக மெலட்டூர் சிவகாமி, தஞ்சாவூர் ரங்கமணி இருவருக்கும் பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. இது தவிர அரங்குக்கு முதலில் வந்த ராகப்பிரியாவுக்கும் சாந்தகுமாரி, அருள்மொழி, நாகலட்சுமி ஆகியோடுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவையனைத்துக்கும் மணிமகுடம் போல் தஞ்சாவூரைச் சேர்ந்த வாசகி ராஜேஸ்வரிக்கு சூப்பர் பம்பர் பரிசாகத் தண்ணீரைச் சுத்திகரிக்கும் வாட்டர் டிஸ்பென்ஸர் வழங்கப்பட்டது. மகளிர் திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நிச்சயப் பரிசு வழங்கப்பட, வாசகிகளின் ஆரவாரத்துடன் விழா நிறைவடைந்தது.

காலை நிகழ்ச்சியை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் பெரியநாயகியும் மாலை நிகழ்ச்சியை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபாவும் தொகுத்துவழங்கினர். இந்த விழாவை ‘தி இந்து’வுடன் இணைந்து தைரோகேர், தி சென்னை சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, ஜெப்ரானிக்ஸ், ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல், விக்டோரியா ஹோட்டல், பாலு ஹோண்டா, கலர்ஸ், பிபிடிஎஸ், ராகா ரைஸ்பிரான் ஆயில், பிஎல்.ஏ. எவர்ஃபிரெஷ் ஃபுட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தி, பரிசுகள் வழங்கின.

 

விழாவில் வாசகியரின் கேள்விகளுக்குப் பதில் கூறினார் வழக்கறிஞர் பானுமதி.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளன, தண்டனைகள் என்ன?

- சூர்யகலா, திருக்காட்டுப்பள்ளி.

நிர்பயா வழக்குக்குப் பிறகு டெல்லியில் பாலியல் குற்றங்களுக்குப் பத்தாண்டுகள் தண்டனை என்பது ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வது, தனிபட்ட மனிதர்களிடம் உள்ள வக்கிரப் புத்தியால்தான் ஏற்படுகிறது. அதுபோன்ற மனிதர்களை இந்தச் சமுதாயம்தான் உருவாக்கிவைத்துள்ளது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண், பெண் பேதத்தை மறக்கச்செய்ய பள்ளிகளில் பேதம் காட்டாமல் சமமாகப் பழகவைக்கின்றனர். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பாலின வித்தியாசம் காட்டப்படுவதே பாலியல் குற்றங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம்.

Ty03pen_indru33 த. பானுமதி 100 

ஆணையும் பெண்ணையும் சேர்ந்துப் பழகவிடுவது இந்தியக் கலாச்சாரத்துக்கு ஒத்துவருமா?

- உமாமகேஷ்வரி, தஞ்சாவூர்.

இந்தியாவில் இரண்டு சமூகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆண்கள் தனி, பெண்கள் தனி என்ற பிரிவினையைக் கல்வி நிறுவனங்களில் இருந்தே தொடங்கிவிடுகின்றனர். பெண்கள் படிக்கும் பகுதியைச் சுவர் எழுப்பி மறைத்துவைத்துள்ள பள்ளிகளும் உள்ளன. விலங்குகளும் பறவைகளும் கூட்டமாகவே வாழ்கின்றன. மனித இனம் மட்டும் தங்களுக்குள் பாலின பேதத்தை ஏற்படுத்திவைத்துள்ளனர். இரவு, பகல் போல இந்த உலகத்தில் இயற்கையாகக் கிடைக்கிற உரிமைகளைக்கூடப் பெண்கள் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது.

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி அதிகளவில் ‘மீம்ஸ்’ போடுகின்றனர். இது, ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதானே?

- சவுந்தர்யா, கோவில்வெண்ணி.

ஆம், அவர் பெண் என்பதால்தான் இந்த மீம்ஸ்கள் அதிக அளவில் வருகின்றன. பெண்களும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு அச்சப்பட்டுதான் அரசியல் பணியில் ஈடுபடத் தயங்குகின்றனர். இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் அரசியலுக்குள் வந்துவிட்டால் ஆண்களுக்கு அங்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதனாலேயே பொதுவாழ்வில் உள்ள பெண்களைக் கடுமையாக விமர்சித்து, அவர்களை மவுனமாக்கிக் கருத்துரிமையற்றவர்களாக மாற்ற சிலர் எடுக்கிற முயற்சிகள்தான் இதுபோன்ற நக்கல் விமர்சனங்கள்.

 

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x