Last Updated : 10 Dec, 2017 10:29 AM

 

Published : 10 Dec 2017 10:29 AM
Last Updated : 10 Dec 2017 10:29 AM

இல்லம் சங்கீதம் 13: விலகியிருந்தாலும் நெருக்கம் தேவை

அடுத்தமுறை எனை நீ

அழுத்தும் இரவுகளில்

வெளியிலசையும் தென்னையை

வெறிப்பதையாவது

விசாரி ஏன் என்று எப்போதாவது

- உமா மகேஸ்வரி

சமூகத்தில் மரியாதையுடன் வாழும், மத்திய அரசுப் பணியில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர் அவர். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அவர்களுடையது. மகள் கல்லூரியிலும் மகன் பள்ளியிலும் படிக்கிறார்கள். ‘சந்தோஷம் தேடும் வாழ்வு’ என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயம், தனது தாம்பத்திய வாழ்வின் பிரச்சினைகளை அப்பட்டமாக அடையாளம் காட்டியிருப்பதாக மின்னஞ்சலில் தொடர்புகொண்டார். ‘தற்கொலைக்கு முயல்கிறேன்’ என்ற வாசகத்தைப் பார்த்ததும் உடனடியாக அவரை அழைத்துப் பேசினோம். பேசும்போதே உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். அவருக்குத் தேவையான கவுன்சிலிங் வழிகாட்டுதல்களைப் பரிந்துரைத்ததில், தற்போது மன அழுத்தத்திலிருந்து மீண்டிருப்பதோடு பிரச்சினையை முதிர்ச்சியாக அணுகும் பக்குவத்துக்கு வந்திருக்கிறார். பிறருக்கும் உதவலாம் என்ற நோக்கில் தனது அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு அந்தரங்க வாழ்க்கை குறித்து எழுதவும் அனுமதி தந்தார்.

வாட்ஸ் அப் தூண்டில்

டீன் ஏஜ் குழந்தைகள் இருக்கிறார்களே என்று தாம்பத்திய உறவை அடிக்கடி தவிர்த்திருந்தாராம். குழந்தைகளின் எதிர்காலத் தேவையை மனதில்வைத்துப் பகுதி நேரப் பணி ஒன்றையும் கூடுதலாகப் பார்த்துவருகிறார். இல்லறத்தின் அடுத்த கட்டம் என்று மனைவியுடன் வாழ்வியல் மையம் ஒன்றின் வகுப்புகளிலும் பங்கேற்றுவந்துள்ளார். ஆனால், வாட்ஸ் அப் வடிவில் பிரச்சினை வந்திருக்கிறது. குடியிருப்புவாசிகளை ஒருங்கிணைக்கும் இளைஞன் ஒருவன் வாட்ஸ் அப் குழு மூலம் இவருடைய மனைவிக்கு அறிமுகமாகியிருக்கிறான். புதிதாக வீடு கட்டி குடியேறிய இடத்தில் தனிமையில் தவித்த அவருக்கு, அந்நியனின் வாட்ஸ் அப் பகிர்வுகள் ஏதோ ஒரு வகையில் ஆறுதல்தர, அவன் போனில் தொடர்புகொண்டதும் அடுத்த நிலைக்கு நகர்ந்திருக்கிறார்.

கை நழுவிய தீர்வு

கணவர் இல்லாதபோது பகலிலும் நாளடைவில் அவர் தூங்கிவிட்டதாக இரவிலும் வீட்டின் மொட்டை மாடியில் அவனைச் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார். நள்ளிரவில் மறைந்து திரும்பும் மனைவியை கணவர் தாமதமாகவே கவனித்திருக்கிறார். வாட்ஸ் அப் பதிவுகளைப் பார்த்தவர், மாமனார் வீட்டினரின் உதவியோடு பேசித் தீர்க்க முயன்றதில் பிரச்சினை மேலும் பெரிதானது. தற்போது ‘சம்பாதிக்கும் முனைப்பில் குடும்ப வாழ்க்கையில் அலட்சியம் காட்டியது, மனைவிக்கு உரிய நேரத்தை ஒதுக்காதது’ உள்ளிட்ட தன் தரப்பு தவறுகளை உணர்ந்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், தீர்வு அவர் கையில் இல்லை. மகள் ஒருவாறாகப் படிப்பில் கவனம் செலுத்த, குடும்பப் பிரச்சினையில் மகன் வெகுவாக அமைதி கெட்டிருக்கிறான் என்று புலம்புகிறார். குழந்தைகளுக்காக என அவர் மேற்கொண்ட செயல்களின் பிசகுகள் இப்போது அந்த நோக்கத்தையே வீணடித்திருக்கின்றன.

முளைவிடும் ஈர்ப்பு

குழந்தைகள் வளர்ந்துவிட்டார்களே என்று இவரைப் போல் தனது இணைக்கு உரிய நேரத்தை ஒதுக்காத மனைவி/கணவன் இங்கே கணிசமாக இருக்கிறார்கள். ஒதுக்கும் அந்த நேரம் அந்தரங்கமாக மட்டுமே அமைய வேண்டுமென்ற அவசியமில்லை. தாம்பத்தியத்தில் அனைத்தையும் கடந்துவந்தவர்களுக்கு அந்தத் தேவைகள் பொருட்டும் அல்ல. ஆனால், உதாசீனத்துக்கு ஆளாகும் தனது இருப்பை வீட்டுக்கு வெளியிலிருந்து வேறு யாராவது கொண்டாடினால் முளைக்கும் ஈர்ப்பு, கடைசியில் குடும்பத்தையும் சேர்த்துப் புதைகுழியில் தள்ளும் அபாயமும் உண்டு.

சிறப்பான பெற்றோராகத் தங்களை நினைத்துக்கொண்டு நாளெல்லாம் பிள்ளைகளின் புராணத்தையே பாடுபவர்கள், அன்றாடம் சில தருணங்களையேனும் கணவன் அல்லது மனைவிக்காக ஒதுக்க வேண்டும். அவை உடல்களின் அடிப்படைத் தேவைக்கு அப்பாலும் இருக்கட்டும். பரஸ்பர அக்கறை, பாராட்டு, பரிவு, விசாரிப்பு, பழைய நினைவுகளின் பகிர்வு, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என உறவுச் சங்கிலியின் கண்ணிகளை உறுதிப்படும் எதுவாகவும் அவை இருக்கலாம்.

கடமை மட்டுமல்ல

தாம்பத்தியத்தின் தொடக்க காலம் இனிமையாக இருக்கும். பேச்சு, சீண்டல், விளையாட்டுகள் என அவை காலத்தின் அளவிலும் கனிவின் இனிமையிலும் நீண்டிருக்கும். நாள்போக்கில் இருவருக்குமிடையேயான உறவில் ஓர் இயந்திரத்தனம் புகுந்துகொள்ளும்போது, அந்தரங்கம் புளித்துப்போகும். உறக்கத்துக்கான ஊக்கியாகவோ இயற்கை உபாதையை இறக்கிவைக்கும் முனைப்பாகவோ கடமைக்கு இணையை நாடுபவர்கள் எளிதில் வெறுப்புக்கு ஆளாகிறார்கள்.

வாரத்தில் ஒரு நாளாவது வெளியே சென்று வருவது சிறப்பு. குடும்பத்தோடு சென்றாலும் தம்பதியருக்கு இடையேயான மகிழ்வான நிகழ்வுகளை இவை வழங்கும். வெளியே செல்வதுபோல வீட்டுக்குள்ளேயும் ஒருசில இடமாற்றங்கள் புத்துணர்வூட்டும். படுக்கையறைக்கு வெளியே பாதுகாப்பும் தனிமையும் வாய்க்கும் வீட்டின் எந்த இடமும் இருவருக்குமான மனமாற்றத்தையும் புதிய அனுபவத்தையும் வாரி வழங்கும்.

பிணைப்பை வலுப்படுத்தும் நெருக்கம்

வார இறுதியில் நண்பர்களுடன் ஊர்சுற்றல், பார்ட்டி, கொண்டாட்டம் எனத் திட்டமிடுபவர்கள் அவற்றைக் குறைத்துக்கொண்டு, தம்பதியருக்கான தருணமாக சேமித்துக்கொள்ளலாம். வார நாட்களின் விலகல் விரதத்தை வாரத்தின் இறுதியில் இப்படி நிறைவுசெய்வது, இருவருக்குமிடையேயான ஈர்ப்பை அதிகமாக்கி உறவை வலுப்படுத்தும். வெவ்வேறு ஊர்களில் பணியிலிருப்பவர்கள், இரவு-பகல் சுழற்சியில் பணி நிமித்தம் பிரிந்திருப்பவர்கள் ஆகியோர் கடைப்பிடிக்கும் உத்தி இது.

எந்த உறவுக்கும் இடையே வாய்க்காத அற்புத அரவணைப்பைத் தம்பதியர் அவ்வப்போது பரிமாறிக்கொண்டே இருப்பது அவசியம். கைகளைப் பிணைத்துக்கொள்வது, தோள் சாய்வது என்று எங்கெல்லாம் தொடுகைக்கு வாய்ப்புண்டோ அப்போதெல்லாம் அதை இணைக்கு உணர்த்துவதும் தான் உள்வாங்குவதும் பிணைப்புக்கு உரம் சேர்க்கும். இவற்றையே உதவும் சாக்கிலும் உணர்த்தலாம். கணவனின் சட்டைக்கு பட்டன் அணிவிப்பது, மனைவியின் சேலைக்கு ஃபால்ஸ் சீரமைப்பது என வாய்ப்புகளை தேடிக் கண்டடைவது அவரவர் பாடு. உடல்நலம் குன்றும்போது அருகிலிருப்பதும் அரவணைத்திருப்பதும் உடலுக்கும் மனதுக்கும் இதம் சேர்க்கும்.

அற்புதம் செய்யும் அறை

படுக்கையறையும் படுக்கையும் அலுத்துக் களைத்த உடல்களுக்கு புத்துணர்வு சேர்ப்பதாக இருக்கட்டும். வீட்டில் இருவருக்குமான அந்தப் பிரத்தியேக இடத்தைப் பிடித்த வகையில் வைத்திருப்பதும் அவ்வப்போது அதில் மனதுக்கினிய மாற்றங்களைச் செய்வதும் சுவாரசியமூட்டும். படுக்கையறைக்குள் தொலைக்காட்சிக்கும் வளர்ந்த குழந்தைகளுக்கு செல்போனுக்கும் தடைபோடுங்கள். கடந்த நாளின் கசடுகளைத் துவைத்தெடுத்து, விடியும் நாளின் புதிய உலகையும் புதுப்புது அனுபவங்களையும் எதிர்கொள்வதற்கான ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள். உறக்க வாயிலில் கைகோத்தபடி நாளின் இனிமைக்கான சில வார்த்தைகளை அல்லது வருடல்களையேனும் இணையுடன் பகிர்ந்துவிட்டுத் தூக்கத்தில் ஆழலாம். உறக்கத்தின் இடையேயும் இமை பிரிக்காது இணையின் கதகதப்பை உணர்வது வாழ்க்கையின் மீதான பிடிப்பை மென்மேலும் அதிகரிக்கும்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x