Published : 10 Dec 2017 10:27 AM
Last Updated : 10 Dec 2017 10:27 AM

எசப்பாட்டு 13: ஆண்மை என்னும் கற்பிதம்

‘கேட்டர் பில்லர் ’ என்னும் ஜப்பானியத் திரைப்படம் பார்த்தேன். கோஜி வாகாமத்ஸு இயக்கி 2010-ல் வெளியான படம் அது. சீன-ஜப்பான் போரில் பங்கேற்ற ஜப்பானிய ராணுவ வீரன் ‘குரோகாவா’வை மையமாகக் கொண்டு படம் சுழல்கிறது. முதல் காட்சியில் சீனக் கிராமத்துக்குள் புகுந்த ஜப்பானிய ராணுவம் அந்தக் கிராமத்தை அழித்துத் துவம்சம் செய்கிறது. தப்பியோடும் சீன மக்களைக் கடமை உணர்வுடன் குரோகாவா சுட்டுக் கொல்கிறான். அலறித் துடிக்கத் துடிக்கச் சீனப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்கிறான்.சொத்துக்களைச் சூறையாடுகிறான். அடுத்த காட்சியில் போர் முடிந்து, குரோகாவா ‘பேராண்மை மிக்க போர் நாயகன்’ என்னும் தேசிய விருதைப் பெறுகிறான்.

மூன்று தேசிய மெடல்கள் நெஞ்சில் அசைந்தாடச் சொந்த கிராமத்துக்குத் திரும்புகிறான். ஆனால், போரில் இரு கால்கள், இரு கைகளை இழந்து கேட்கும், பேசும் ஆற்றலையும் இழந்து கொண்டுவரப்படுகிறான். ஊரே எல்லையில் நின்று அவனை வரவேற்கிறது. மனைவி அவனது கோலத்தைப் பார்த்துக் கதறினாலும், அவனைப் பாதுகாக்கும் கடமையை ஏற்று அவனை அழைத்துச் செல்கிறாள். தொடக்கத்தில் பரிவுடன் அவனைக் கவனிக்கிறாள். ஆனாலும், அவளுக்குப் போருக்கு முந்தைய பழைய வாழ்க்கை நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. அவனது முரட்டுத்தனமான பாலியல் ஆவேசத்தில் மூச்சுத் திணறிய இரவுகள் அவள் நினைவில் புரள்கின்றன.

அவளது உணர்வுகளைச் சற்றும் மதியாத அவனது அலட்சியம் அவள் நெஞ்சில் முள்ளாய் நிற்கிறது. இப்போது அவனுக்குக் கையும் இல்லை காலும் இல்லை. ஆனால், தின்ன ஒரு வாய் இருக்கிறது. பாலுறவு கொள்ளும் இச்சை மிச்சம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு தினசரி அவளை இம்சிக்கிறான். அவளிடம் அதைக் கோருவது அவனது ‘உரிமை’ எனக் கருதுகிறான். அவன் அதே ஆணாகவேதான் இப்போதும் இருக்கிறான். அவனுக்குச் சமைத்துப்போடவும் அவனது பாலியல் தேவைக்குத் தன் உடலைத் தரவும் மனைவி என்ற ‘கடமை’ அவளை நிர்ப்பந்திக்கிறது. அவன் முன்னர் செய்த கொடுமைகளுக்குப் பழிதீர்க்கும் உணர்வு அவளுக்கு மேலோங்குகிறது. கருணைக்கும் பழிதீர்க்கும் உணர்வுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் அவளது உளவியல்தான் கதையின் மையம்.

கட்டமைக்கப்படும் கற்பிதங்கள்

இந்தப் படத்தைப் பார்த்தபோது முதலில் எனக்குக் குற்றவுணர்வு ஏற்பட்டது. ஆண்மை என நாம் நம்பும் எல்லாவற்றையும் இந்தப் படம் கலைத்துப்போட்டது. ஆண்மை, பெண்மை என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள். சமூகமும் அதில் நிலவும் பண்பாடும் கட்டமைத்த கற்பிதங்கள். பெண்மை என்ற வரையறைக்குள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நளினம், அழகு, சேவை மனப்பான்மை, தன்னல மறுப்பு, தாய்மை எனப் பல குணங்களை இணைக்கிறார்கள். பல நேரம் இந்த இணைப்புகளே முன்னின்று இதுதான் பெண்மை என்று நம்பவைக்கின்றன. அதேபோல ஆண்மை என்ற கற்பிதத்தைக் கட்டமைக்கும் பல இணைப்புகள் உண்டு. வீரம், ஆளுமை (பெண்ணை ஆளுதல் முக்கியம்), அதிகாரம் செலுத்துதல், சாதி-மதம் காத்தல், தேசியப் பெருமிதம் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. பெண்ணுக்கு ஒரு குழந்தையைக் ‘கொடுப்பது’ ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றென உலகமே நம்புகிறது. அதற்கு வாய்ப்பில்லாத மனிதனை ஆண்மையற்றவன் என விளிப்பது வழக்கமாக இருக்கிறது.

நிலவுடைமை கோலோச்சிய நாட்களில் ஆண்டைகளால் பாலியல் பண்டங்களாக நடத்தப்பட்ட பண்ணையடிமைகளின் வீட்டுப் பெண்கள் பற்றிய கண்ணீர்க் கதைகள் ஏராளம். ஆண்மை அங்கே சாதியுடன் கைகோக்கிறது. இதன் உச்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் டி.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என்று அந்த ஊர் உயர்சாதியினர் ஊர்க்கட்டுப்பாடு விதித்திருந்த செய்தி கேட்டுத் தமிழகமே அதிர்ந்தது. உயர்சாதி வீடுகளில் வளரும் பெண் நாய்களுடன் ‘கீழ்ச்சாதி’ வீட்டு ஆண் நாய்கள் உறவு கொண்டால் சாதித் ‘தூய்மை’ கெட்டுப்போகுமே!

மதவாத ஆண்மை

இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துப் பெண்களை இஸ்லாமியர்களும் இஸ்லாமியப் பெண்களை இந்துக்களும் பாலியல் வல்லுறவு செய்து தங்கள் மத ஆதிக்கத்தைப் பெண்ணின் உடல் மீது கொடியேற்றினார்கள். பெண்களின் பிறப்புறுப்பில் பிறைச் சந்திரனையும் திரிசூலத்தையும் சூடு போட்டு வரைந்தார்கள். பெண்களின் மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள். அங்கே ஆண்மை மதவெறியாக வடிவெடுத்தது.

போர் என்று வந்துவிட்டால் எதிரி நாட்டுப் பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்வது தேசியக் கடமை ஆகிவிடுவதை வரலாறு பதிவுசெய்கிறது. செர்பியாவிலும் குரோஷியாவிலும் இந்தியா பாகிஸ்தானிலும் தேசப் பெருமை காக்க அல்லது எதிரி தேசத்தை இழிவுபடுத்த ஆண்மை திமிறி எழுந்ததையும் கண்டோம். இலங்கை ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான தமிழ்ப் பெண்களின் கதறல் ஒலி இன்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கவில்லையா? இங்கெல்லாம் ஆண்மை, தேசியத்தை முகமூடியாக அணிந்துவந்தது.

ஆனந்த் பட்வர்தனின் புகழ்பெற்ற ஆவணப்படமான ‘ஃபாதர் சன் அண்ட் ஹோலி வார்’ (தந்தை மகன் மற்றும் புனிதப்போர்) பதிவுசெய்த காட்சிகளில் மதப் பகைமை வளர்ப்போடு ஆண்மை தூண்டப்படுவதும் இணைந்து வளர்வது விளக்கப்பட்டிக்கும். இந்துப் பெண்கள் 16 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சாமியார்கள் வீர உரை ஆற்றும் காட்சிகள் அந்தப் படத்தில் பலமுறை வந்துகொண்டே இருக்கும்.

அழிக்கப்பட வேண்டிய ஆண்மை தத்துவம்

“சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் ‘ஆண்மை’க்கே உரியதாக்கப்பட்டுவிட்டது ஏன்? ‘ஆண்மை’க்குத்தான் அவை உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று தொடங்கும் தந்தை பெரியார், “ஆண்மை உலகில் உள்ளவரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்மை விடுதலையில்லை என்பது உறுதி” என்று தொடர்கிறார். பெரியாரின் இந்த வாசகத்தோடு ‘கேட்டர்பில்லர்’ படத்தின் நாயகியின் மனதில் எழும் பழிதீர்க்கும் உணர்வை இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. குற்றவுணர்வு தாளாமல் அந்தப் படத்தின் நாயகனான ராணுவவீரன் தற்கொலை செய்துகொள்வதோடு படம் முடிவடையும்.

ஆனால், பெண் விடுதலையை ஆண்மை அழிப்பு என்ற ஒன்றோடு மட்டும் நிறுத்திப் பேசுவது சரியா, அது போதுமானதா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. அது பற்றியும் பேசுவது அவசியம்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர் எழுத்தாளர்

தொடர்புக்கு:tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x