Last Updated : 10 Sep, 2017 10:13 AM

 

Published : 10 Sep 2017 10:13 AM
Last Updated : 10 Sep 2017 10:13 AM

பக்கத்து வீடு: விண்வெளி நிஞ்சாவின் 665 நாட்கள்!

இலக்கில் தெளிவு இருந்தால் உலகத்தையே கடந்துவிடலாம் என்று சொல்வார்கள். விண்வெளி வீராங்கனை பெக்கி ஆனெட் விட்சன் (Peggy Annette Whitson) அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி, விண்வெளியில் 665 நாட்கள் தங்கியிருந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த வாரம் தன் குழுவினருடன் கஜகஸ்தான் நாட்டில் வெற்றிகரமாகத் தரையிறங்கினார் பெக்கி.

அமெரிக்காவை சேர்ந்த இவர், உயிர் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 1997-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் விண்வெளி ஆய்வாளராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். இதுவரை விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அதிகபட்சமாக 288 நாட்கள்தான் தங்கியுள்ளனர். ஆனால், பெக்கி விட்சன் கடந்த ஆண்டு சென்ற பயணத்துடன் சேர்த்து இதுவரை 665 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார்.

இடைவிடாத ஆய்வு

விண்வெளியில் அமைந்த ஆய்வு மையத்தில் பல உணவு வகைகளைச் சாப்பிட பெக்கி முயன்றிருக்கிறார். விண்வெளி வீரர்களுக்கு என கொடுக்கப்பட்ட உணவுப் பொருட்களை வைத்து பீட்சா செய்வது, ரொட்டித் துண்டுகளில் ஆப்பிள் போல் வெட்டி தன்னுடைய கை கடிகாரத்தில் வைத்துக்கொள்வது போன்ற வித்தியாசமான முயற்சிகளை அவர் செய்து பார்த்தார்.

விண்வெளிப் பயணத்தில் தன் துறை சார்ந்த பல ஆராய்ச்சிகளைச் செய்தார். குறிப்பாக நுரையீரல் திசு புற்றுநோய், எலும்பு செல்கள் போன்றவை குறித்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அதேபோல் விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு வெளிப்புறமாக நான்கு முறை சென்று வந்துள்ளார்.

அது மட்டுமில்லை, பெண் விண்வெளி வீராங்கனைகளிலேயே பெக்கி மிகவும் அதிக வயதுடையவர். அதிக அனுபவம் கொண்ட முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரண்டு முறை தளபதியாக இருந்த முதல் பெண், விண்வெளியில் அதிக தூரம் நடந்த முதல் பெண் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் பெக்கி விட்சன் படைத்துள்ளார்.

விண்வெளி நிஞ்சா

தரையிறங்குவதற்கு முன்பு விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பேசிய பெக்கி விட்சன், “பூமியை அடைந்ததும் பீட்சா சாப்பிட ஆசையாக இருக்கிறது” எனச் சொல்லியிருக்கிறார்!

கஜகஸ்தானில் தரை இறங்கியதும் பெக்கி விட்சனுக்கு முதலில் சன் கிளாஸ் கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு ‘வெல்கம் பேக் பெக்கி’ என்ற வாசகம் கொண்ட அழகான பூங்கொத்து வழங்கப்பட்டது.

பெக்கி விட்சன் குழுவினரின் வருகை குறித்து அமெரிக்க விண்வெளி வீரரான பிரேஸ்நிக், “உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு எங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது” என்று சொன்னது மட்டுமல்லாமல் பெக்கி விட்சனை ‘அமெரிக்காவின் விண்வெளி நிஞ்சா’ எனப் புகழாரமும் சூட்டியுள்ளார். விண்வெளியில் அதிக நாட்கள் பணிபுரிந்தவர்கள் பட்டியலில் பெக்கி விட்சன் தற்போது எட்டாவது இடத்தில் உள்ளார்.

அடிவான அழகைத் தேடும் கண்கள்

“விண்வெளியில் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விண்வெளியில் இருந்து பூமியின் அழகைப் பார்க்கும் வாய்ப்பு இப்போது எனக்கு இல்லை. என் இறுதி நாட்கள்வரை இந்தப் பூமியின் அடிவானத்தைத் சுற்றியிருக்கும் வளையத்தின் அழகை என் கண்கள் தேடிக்கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் எனக்கு வழங்கப்படும் பணி என்னவாக இருக்கும் என்று இப்போது எனக்குத் தெரியாது. ஆனால், மீண்டும் விண்வெளிக்குச் சென்று பணிபுரியவே விரும்புகிறேன்” எனத் தரையிறங்கியதும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார் பெக்கி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x