Last Updated : 09 Jul, 2017 01:16 PM

 

Published : 09 Jul 2017 01:16 PM
Last Updated : 09 Jul 2017 01:16 PM

பெண்களை இறுக்கும் ஜிஎஸ்டி

நெற்றியை அலங்கரிக்கும் திலகம், வளையல்கள் ஆகியவை பெண்களுக்கு அவசியம் என்பதை மத்திய அரசு நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் ஜூலை 1 முதல் அமலான சரக்கு மற்றும் சேவை வரிகளில் இவற்றுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் பெண்களின் மாதாந்திர சுகாதாரத்துக்கு உதவும் சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டியில் வரிவிலக்கும் வரிகுறைப்பும் மறுக்கப்பட்ட விநோதமும் அரங்கேறி இருக்கிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் தொடங்கியிருக்கும் பிரச்சாரங்கள் புதிய விவாத அலையை உருவாக்கியிருக்கின்றன.

நாப்கின்கள் அழகு சாதனமா?

மத்திய அரசின் பொருளாதார சீரமைப்பில் முக்கிய நடவடிக்கை என்ற அறிவிப்புடன் வந்துள்ளது சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கான தொடக்ககால ஆலோசனைக் கூட்டங்களில், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முழு வரிவிலக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், சுகாதாரப் பட்டியலில் சானிட்டரி நாப்கின்கள் சேர்க்கப்படவில்லை. அவை அழகு சாதனப் பொருட்கள் வரிசையில் 12 சதவீத வரி விதிப்பு பெற்றிருக்கின்றன. சுமார் 38 கோடி பருவமெய்திய பெண்கள் வாழும் நாட்டில் அவர்களின் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. சானிட்டரி நாப்கின்களுக்கு கோரப்பட்ட முழு வரிவிலக்கு கிடைக்கவில்லை.

இதை எதிர்த்து சமூக ஊடகங்களில் பெண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கினர். நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு change.org வாயிலாக கோரிக்கை மனு அனுப்பும் இயக்கத்தை நடத்தினர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததோடு, தன் பங்குக்கு அருண்ஜெட்லிக்குக் கடிதமும் எழுதினார். காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் போராட்டங்களை ஒருங்கிணைத்தார். மும்பையில் சுய உதவிக் குழு மகளிர் உதவியுடன் சாயா காக்டே என்ற பெண் ஜூன் 21 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

கேள்விக்குறியாகும் பெண்களின் சுகாதாரம்

தன்னார்வ அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில், நாட்டில் 12 சதவீத பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பது தெரியவந்துள்ளது. மீதியிருக்கும் 88 சதவீத பெண்கள் பொருளாதாரச் சூழல், அறியாமை, தரமான நாப்கின்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் மாற்று உபாயங்களுடன் தங்களின் மாதாந்திர உதிரப்போக்கைச் சிரமங்களுடன் எதிர்கொண்டுவருகிறார்கள். அவற்றில் பழந்துணிகளுக்கு முதலிடம். ஏராளமான கிராமப்புறங்களில் செய்தித்தாள், இலைச்சருகுகள், பதப்படுத்திய மணல் போன்றவற்றைக் கொண்டு பெண்கள் சமாளித்துவருகிறார்கள் என்பது வேதனை.

இது மட்டுமன்றி, கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் 23 சதவீதப் பெண் குழந்தைகள் பருவமெய்திய பிறகு பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. பள்ளிகளில் போதுமான கழிவறைகள் அல்லது ஓய்வறைகள் இல்லாததும் சுகாதாரமான நாப்கின்கள் கிடைக்காததும் வளரிளம் பெண்கள் இப்படி படிப்புக்கே முழுக்குப்போட காரணமாகின்றன.

சுகாதாரக் கேடுகள்

முறையான சுகாதாரமின்மை காரணமாகக் கர்ப்பப்பாதை தொற்று, மகப்பேறினைப் பாதிக்கும் குறைபாடுகள் எனத் தொடங்கி கருப்பைவாய் புற்றுநோய்வரைக்கும் பெண்கள் ஆளாகிறார்கள். உலகில் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரத்தில் காட்டப்படும் அலட்சியம், நாட்டின் எதிர்கால சந்ததியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சி. இந்தியாவில் சானிட்டரி நாப்கின்கள் தொடர்பான அறியாமையைப் போக்குவது, எளிய மக்களுக்கும் நாப்கின்கள் கிடைக்கச் செய்வது போன்றவற்றை எந்த அரசும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலை வைத்துத்தான் நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து விவாதிக்க வேண்டும்.

தொடரும் சவால்கள்

அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், தற்போது தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை என்றும் அவற்றை அப்புறப்படுத்துவது சவாலானது என்றும் சொல்லிவருகிறார்கள். மருத்துவக் கழிவுகளில் ஒன்றாக எரிப்பதா அல்லது திடக்கழிவாக அகற்றுவதா எனத் தெளிவான விதிமுறைகள் வகுக்கப்படாததால் குழப்பங்கள் தொடர்கின்றன. ஒரு பெண் தன் வாழ்நாளில் 125 கிலோ நாப்கின்களை பயன்ப்படுத்த வேண்டியிருக்கிறது.

நாப்கின்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களின் அளவு அதிகரித்துவருவது பெண்களின் உடலுக்கு ஊறு விளைவிப்பதோடு, பல சூழல்சார் சவால்களையும் உருவாக்கியுள்ளன. இதைக் காரணமாக்கி நீரால் சுத்தம் செய்து உலர்த்தி மீண்டும் உபயோகிக்கக் கூடியவை குறித்தும், அவற்றின் உற்பத்தி குறித்தும் விவாதங்கள் தொடங்கின. ஆனால் அவற்றின் நடைமுறைச் சிக்கல்களால் வரவேற்பை இழந்தன. இதற்கு முன்பாக அரசு சார்பில் அமலான நடவடிக்கைகள் பலதும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கைவிடப்பட்டுள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய குடும்ப நல அமைச்சகம் சார்பில் கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு ஆறு பேடுகள் ஒரு ரூபாய் விலையிலும், மற்றவர்களுக்கு 6 ரூபாய் விலையிலும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முன்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள மகளிர் விடுதிகளுக்கு நவீன எரிக்கும் கருவிகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில்கூட இதே நோக்கில் பள்ளிகளுக்கு என தனி அடுப்புகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இவை நடப்பில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது கிடப்பில் கிடக்கின்றன.

வரி விலக்கில் சர்வதேச விழிப்புணர்வு

தங்களின் மாதாந்திர சுகாதார உபகரணங்களுக்கு வரி விலக்கு கோருவதைச் சர்வதேச அளவில் பெண்கள் தங்களது உரிமையாகப் பெற தொடர்ந்து போராடிவருகின்றனர். உலகிற்கே முன்மாதிரியாக முழு வரிவிலக்கினை முதலில் அறிவித்த பெருமையை தட்டிச் சென்றது வளரும் நாடான கென்யா. இந்த வரிசையில் அயர்லாந்து அடுத்ததாக இடம் பிடித்தது. கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா போன்றவை சுகாதார உபகரணங்களுக்கு வரிச் சலுகை அறிவித்தன.

அமெரிக்காவில் மாகாணங்கள் வாரியாக வரி விலக்கு மற்றும் சலுகைகள் அமலில் உள்ளன. மேலும் பல நாடுகளில் விவாதங்கள், கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஜிஎஸ்டியை முன்னிறுத்தி இந்தியாவும் வந்திருக்கிறது. பெண்கள் குரலுக்குச் செவிமெடுக்கும் விதமாகத் தற்போதைய வரி விதிப்பை 12 சதவீதத்திலிருந்து குறைந்தபட்ச வரிவிதிப்பான 5-சதவீதமாக மத்திய அரசு குறைக்கலாம்; அல்லது முழு வரிவிலக்கினை அறிவிக்கலாம். இந்த விவாதங்கள் மூலமாக பெண்கள் அனைவருக்குமான சுகாதாரம் உறுதி செய்யப்படுவது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x