Published : 09 Jul 2017 01:10 PM
Last Updated : 09 Jul 2017 01:10 PM

கணவனே தோழன்: தவறை அன்பால் உணர வைத்தவர்

என் கணவர், தன் நண்பர் ஒருவர் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் சீட்டு கட்டிவந்தார். முதல் சீட்டின்போது அவரே போய் பணத்தைக் கட்டிவிட்டு வந்தார். பின்னர் சில நாட்கள் கழித்துத் தன் நண்பனிடம் கொடுத்து சீட்டுப் பணத்தைக் கட்டச் சொன்னார். அவரும் கட்டிவிடுவார். கடைசி இரண்டு சீட்டு இருக்கும்போது என் கணவருக்குத் தெரியாமல் அவருடைய நண்பர் அந்தச் சீட்டுப் பணத்தை எடுத்துவிட்டார்.

சீட்டு முடிந்து பணம் வாங்கச் சென்றால் சீட்டு நடத்துபவர், “உங்கள் பணத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பே உங்களுடைய நண்பர் எடுத்துவிட்டார்” என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு என் கணவர் அதிர்ச்சியடைந்தார். இந்த விஷயத்தை அவர் என்னிடம் சொன்னார். எனக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அவரை ஒருமையில் திட்டிவிட்டேன். ஒரு வாரம் அவரிடம் பேசாமல் இருந்தேன். இரண்டு மாதம் கழித்து, என் கணவர் அவர் நண்பர் இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கி என்னிடம் கொடுத்தார்.

சில நாட்களில் என் தோழி ஒருத்தி வீட்டுக்கு வந்தாள். அவர்கள் ஒரு இடம் வாங்கப் போவதாகவும் அதற்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து உதவ முடியுமா என்றும் கேட்டாள். அந்தப் பணத்தை ஒரு மாதம் கழித்து வட்டியோடு தந்துவிடுவதாகச் சொல்ல, நானும் அந்தப் பணத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டேன். ஆனால், ஒரு மாதம் கழித்து நான் கேட்ட போது பத்து நாட்கள் கழித்து தருகிறேன் என்றாள்.

அதன் பிறகு நான்கு மாதங்கள் ஆன பிறகும் அவள் பணத்தைக் கொடுக்கவில்லை. இறுதியாக நானே அவள் இருக்கும் இடத்துக்கே சென்று விசாரித்தேன். அப்போது அவள் உன்மையிலேயே நிலம் வாங்கப் பணம் கேட்கவில்லை என்றும், ஏற்கெனவே மற்றவர்களிடம் வாங்கிய கடனை அடைக்கவே என்னை ஏமாற்றிப் பணம் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இந்த நெருக்கடியான நிலையில் என் கணவர் என்னிடம் கொடுத்துவைத்திருந்த பணத்தைக் கேட்டார். அந்தப் பணத்தை எல்.ஐ.சி.யில் டெபாசிட் செய்துவிடலாம் என்று சொன்னார். பணம் பத்திரமாக இருப்பதோடு நமக்கு இரட்டிப்பும் ஆகும் என்றும் சொன்னார். என்ன செய்வது என்று தெரியாமல் நடந்த விஷயத்தை அவரிடம் சொல்லிவிட்டேன். அவரிடம் இருந்து பயங்கர திட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் அவரோ, “நீ எதற்கும் கவலைப்படாதே. எப்படியாவது உன் தோழியிடம் பேசி பணத்தை வாங்கிவிடலாம்” என்றார். மேலும், “கடந்த 15 நாட்களாக நீ ஒரு மாதிரியாக இருந்தாய். நீ ஏதோ பிரச்சனையில் சிக்கி இருக்கிறாய் என்று எனக்குத் தோன்றியது. அதனால்தான் நான் உன்னிடம் சும்மா ஒரு காரணத்தைச் சொல்லிப் பணத்தை கேட்டேன்” என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.

அதோடு நிற்காமல், “நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீண் போகாது. அப்படியே போனாலும் ஒன்றும் கவலையில்லை, சம்பாதித்துக் கொள்ளலாம்” என்றார். கணவருக்குத் தெரியாமல் நான் பணம் கொடுத்து ஏமாந்த போதும் என்னிடம் கோபம் காட்டாமல் பொறுமையாக நடந்துகொண்ட தோழன் என் கணவர்.

- கா. லலிதா காசிராவ், கிருஷ்ணகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x