Published : 11 Aug 2014 05:59 PM
Last Updated : 11 Aug 2014 05:59 PM

வீட்டுக்கும் அவள் ராணிதான்!

“உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டுவராதே" என்று பெப்சிகோ தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்திரா நூயியிடம் அவருடைய அம்மா சொன்னாராம். ஒரு பெண் நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு வந்துவிட்டால் மனைவியாக இருப்பதுதான் நிதர்சனமா என்று கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளில் சில இங்கே.

நான் ஒரு கட்டிடப் பொறியாளர். ஒரு நாள் கட்டிட வேலைக்குத் தன் குழுவுடன் வந்த பெண், ஆஜானுபாகுவாக இருந்தார். அவரிடம் ஓரிடத்தில் குவிந்திருந்த மணலை அள்ளிக்கொட்டி சமப்படுத்தச் சொன்னேன். நான் சொன்ன வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு வந்தார். பிறகு வேறொரு இடத்தைச் சமன் செய்யச் சொன்னேன். அப்போது அந்த இடத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆண் பணியாளார், அந்தப் பெண்ணை ‘அப்படிச் செய்யாதே, இப்படிச் செய்’ என்று அதிகாரமாக மிரட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும், ‘சரிங்கண்ணா. நீங்க இதைச் சரி பண்ணுங்க. நான் கலவை கலக்குறேன்’ என்று ஒதுங்கிக் கொண்டார். அந்த ஆணும் வேலையை முடித்துவிட்டு என்னிடம் வந்து, ‘பாருங்கம்மா. எவ்ளோ அருமையா வேலையை முடிச்சிருக்கேன். என்ன இருந்தாலும் ஆம்பளை ஆம்பளைதான், பொம்பளை பொம்பளைதான்’ என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. உண்மையில் அந்த ஆணைவிட பெண்தான் கடினமான வேலையைச் செய்தார். எந்த நிலையில் இருந்தாலும் மக்களின் மனநிலை பெண்ணைக் குறைத்துதான் மதிப்பிடும் போல.

- சரஸ்வதி பாண்டியன், பெருங்குடி, சென்னை - 96.

இந்திரா நூயிக்கு நேர்ந்தது அவரின் குடும்பம் சார்ந்த கட்டுமானத்தால் ஏற்பட்ட பிரச்சினை. அதை அனைவருக்கும் பொருத்திப் பார்ப்பது உகந்தது அல்ல. ஆண், பெண் இருவரின் இயற்கை அம்சங்களை உணர்ந்தே அவரவருக்கான வாழ்வியல் முறை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனித உயிரைச் சுமந்து, பெற்றெடுக்கும் வாழ்வு முறையை இயற்கை பெண்ணுக்குத்தான் கொடுத்திருக்கிறது. ஆணுக்கு அது வாய்க்கப் பெறவில்லை. எனவே இந்தச் சமூக நீரோட்டத்தில் பெண் தாய்மைப் பண்பு கொண்டுதான் அன்பான வாழ்க்கையை வாழவேண்டும்.

- சங்கர சுப்பிரமணியன், கோரம்பள்ளம், தூத்துக்குடி.

இது ஒரு சாதாரண பிரச்சினை. தாயோ, மாமியாரோ ஆதரவு தராமல் இந்திரா நூயி இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. அவர் குறிப்பிட்டிருப்பவை எல்லாமே சின்னச் சின்ன மனவருத்தம்தான். பெண் கல்வி அவசியம் என்று பள்ளிக்குச் செல்கிறோம். வருமானம் வேண்டும் என்று வேலைக்குச் செல்கிறோம். ஒரு வேலையில் சேரும் போதே, அதை நம்மால் செய்ய முடியுமா என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும். சேர்ந்த பிறகு நான் பெண், எனக்குப் பாதுகாப்பு தேவை என்று சொல்லக்கூடாது.

- வசந்தி, மதுரை - 14.

ஒரு குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பெண்கள் பகிர்ந்துகொள்ளும் போது, அந்தக் குடும்பத்தின் வீட்டு வேலைகளை ஏன் ஒரு ஆண் பகிர்ந்துகொள்ளக் கூடாது? மொத்தக் குடும்பத்தின் உணவுத் தேவை, குழந்தைகளின் பராமரிப்பு, கல்வி, உடல்நலம் இப்படி அனைத்துமே ஏன் பெண்களுக்கே உரிய கடமையாகத் தொடர்ந்து கற்பித்து வருகிறோம்? பொதுவாக வீடு சார்ந்த வேலைகளை ஆண்கள் செய்வது இழிவானது என்று இந்தச் சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சமூகம் சொல்வதைப் போல ஆண், பெண்ணைவிட வலிமையானவன் என்றால், அவனுக்கு எதற்கு வீட்டுக்கு வந்ததும் ஓய்வு? மென்மையானவர்கள் என்று இந்த சமூகம் சொல்லும் பெண்கள் மட்டும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் எதற்கு வீட்டு வேலை செய்ய வேண்டும்?

ஆண், பெண் பாலினப் பாகுபாடுதான் இதற்குக் காரணம். அதைக் களைந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை வேரறுக்க முடியும்.

- தனசீலி திவ்யநாதன், திருச்சி.

பெண்களை அடக்கியாள்வதில் மேல்தட்டு, கீழ்த்தட்டு என்பதெல்லாம் இல்லை. மொத்த பெண் இனத்தின் நிலைமையும் இதுதான்.

ஆண்களின் சுமையைக் குறைக்கிறேன் என்று களம் இறங்கிய பெண்கள், தங்கள் சுமையை இரட்டிப்பாக்கிக் கொண்டார்கள். பெரும்பாலான ஆண் பிரபலங்கள், “என் வெற்றிக்குக் காரணம் என் மனைவிதான். குடும்பப் பொறுப்புகளை அவள் கவனித்துக் கொண்டதால் என்னால் தொழிலை முழுமையாகக் கவனிக்க முடிந்தது. அதேபோல பிறந்த நாள், திருமண நாளை நான் மறந்துவிடுவேன். என் மனைவிதான் எனக்கு நினைவுபடுத்துவார்” என்று பெருமை பொங்கச் சொல்வார்கள். இப்படி எந்த வெற்றி பெற்ற பெண்ணாவது சொல்லியிருக்கிறாரா? அப்படிச் சொல்லத்தான் இந்தச் சமூகம் வழிவிடுமா?

பெண்களோ, “நான் என் குடும்பத்தையும் வேலையையும் திட்டமிட்டு நிர்வகித்தேன்” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

- ச. சாய்சுதா, நெய்வேலி.

காலம்காலமாய் ‘வினையே ஆடவர்க்கு உயிர்' என்று கற்பிக்கப்பட்டு வந்த ஒரு சமுதாயத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்படுமளவு ஒரு பெண்ணின் முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதைப் பெருமையுடன் சொல்லலாம். அதே சமயம், ஒரு ஆணின் பரிபூரண சுதந்திரத்தை அடைய இன்னும் பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஆமோதிக்கவே வேண்டியிருக்கிறது.

இரவுப் பணிக்குச் சென்று காலை ஏழு மணிக்கு மேல் பத்து கிலோமீட்டர் பயணித்து வீடு வரும் எனது கணவரை, நான் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாக்கெட் பால் வாங்கி வரப் பணித்திருக்கிறேன். தன் பதவியையோ அந்தஸ்தையோ கெளரவத்தையோ மனதில் கொள்ளாமல், அவரும் வாங்கி வருவது சர்வசாதாரணமாகவே நடப்பது.

ஒரு பெண்ணானவள் எந்நிலையிலும் அகந்தையோ கர்வமோ கொள்வது அவளது இயல்பு வாழ்வைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற கண்ணோட்டத்தில், ஒரு தாயாக மகளுக்கு கொடுக்கும் உபதேசமே ‘உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே'.

எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது! குடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணைவிட பெண் அதிக பளுவை தாங்கத்தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள்தான் பெண்.

- நிலாமகள், நெய்வேலி.

என்னதான் படித்துப் பட்டம் வாங்கி, உயர் பதவியிலிருந்து கைநிறைய சம்பாதித்தாலும், இல்லத்தில் தாய்க்கு மகளாக, குழந்தைகளுக்கு அன்புத் தாயாக, கணவனுக்கு அன்பு மனைவியாக வாழவேண்டியது தொன்றுதொட்டு தொடரும் மரபு.

இந்த நவீன காலத்தில், அந்தப் பண்பு பெண்களிடமிருந்து மாறிவந்தாலும், சகோதரி இந்திரா போன்றவர்கள் மனநிலை இப்படி இருப்பதில் வியப்பில்லை. பெண்ணியம் பற்றி மேடைகளில் முழங்கும் துணிச்சல் மிக்க பெண்கள்கூட குடும்பத்தில் தமது கடமைகளை, பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி வருகின்றனர் என்பதை சகோதரி இந்திராவும், மற்ற பெண்களும் உணரட்டும்.

- கிரிஜா நந்தகோபால், திருச்சி.

இன்றையப் பொருளாதாரச் சூழலில் பெண்கள் பணிக்குப் போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆண்களும் பெண் பார்க்கும்போதே வேலை செய்யும் பெண்களாக இருந்தால், தங்கள் சூழலை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படிப் பணிக்குச் செல்லும் பெண்களின் நிலை, ‘நாட்டுக்குத்தான் ராணியப்பா, வீட்டுக்கு அவ மனைவியப்பா...’ என்ற பிம்பத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்டமைப்பாகவே இருக்கிறது இச்சமூகம்.

ஓய்ந்துபோய் வீடு திரும்பும் ஆண் அக்கடா என்று அமரவோ, படுக்கவோ முடியும். ஆனால், பேருந்தில் சிக்கி இடிபாடுகளில் ஊடாடி வரும் பெண் வீடு நுழைந்ததும் அடுக்களைக்குப் போனால் மட்டுமே சிறந்த பெண்ணாகக் கருதப்படுகிறாள். குழந்தைகள், பெரியவர்கள், கணவன் என்று எல்லோருமே அவள் மீது மேலதிகமான எதிர்பார்ப்பை வைத்திருப்பதால் அதற்கு ஈடுகொடுக்க, நற்பெயர் வாங்க அவள் தன் உடல்நலத்தைக்கூட நிராகரித்து குடும்பத் தேவைகளை நிறைவேற்றுகிறாள். கொடுமை என்னவென்றால், வெளியில் புலியாக இருக்கும் பெண்கள்கூட, வீட்டில் எலியாக இருப்பதையே இச்சமூகம் விரும்புகிறது.

சமூகத்தின் சிந்தனையோட்டம் பெண்ணை சம உயிராக, சக உயிராக மதிக்காதவரையில் பெண்கள் கம்பீரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வது கேள்விக்குறியே.

- சாருமா, காஞ்சிபுரம்.

வெளியில் உள்ளவரைதான் அங்கீகாரம் எனும் கிரீடம் பெண்களுக்கு சொந்தம். வீட்டுக்குள் கால் வைத்துவிட்டாலே பெண் சுயமுகவரியற்ற நடைபிணம் போலத்தான் நடத்தப்படுகிறாள். இன்றையப் பெண்கள் கல்வியில் சிறந்து திறமைகளை வெளிக்காட்டி தன் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை சம்பாதித்தாலும், வீட்டிலுள்ள ஆணின் கட்டளைக்கோ அல்லது தனக்கு மேல் உள்ள பெரியவர்களின் தேவைகளுக்கோ அடிபணிந்தே செல்லவேண்டி உள்ளது. எங்கோ சில பெண்கள் இக்கட்டுப்பாட்டை எதிர்த்துக் கேட்டால், அப்பெண் திமிர்பிடித்தவளாகச் சமூகத்தினரால் சித்தரிக்கப்படுகிறாள். குடும்பம், வேலை என எல்லாவற்றையும் தன் முதுகில் தூக்கி சுமக்கும் பெண்களே இங்கு கொண்டாடப்படுகிறார்கள். மற்றவர்களின் பாடு என்றும் திண்டாட்டம்தான்!

- சுபா தியாகராஜன், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x