Last Updated : 25 Apr, 2019 11:01 AM

 

Published : 25 Apr 2019 11:01 AM
Last Updated : 25 Apr 2019 11:01 AM

விவிலிய மாந்தர்கள்: அரசனின் கனவைக் கண்டுபிடித்தவர்!

எருசலேமைத் தலைநகராகக் கொண்டு யூதேயா தேசத்தை யோயாக்கீம் என்ற அரசன் ஆட்சி செய்துவந்தான். அப்போது பாபிலோன் தேசத்தை ஆண்டுவந்த பேரரசன் நேபுகாத்நேச்சார், யூதேயா மீது படையெடுத்து அதைப் பிடித்துக்கொண்டான். தலைநகரைக் கொள்ளையடித்ததோடு, எருசலேம் தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொக்கிஷங்களையும் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட்டுவந்த பல பட்டயங்களையும் எடுத்துச் சென்றான்.

பொன், பொருள், ஆவணங்களோடு அழகிலும் அறிவிலும் சிறந்த பல யூத இளைஞர்களையும் போர்க் கைதிகளாக அழைத்துச் சென்றான். அப்படி அழைத்துச் சென்றவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களது அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப தனது அரச நிர்வாகத்தில் ஊதியமற்ற பணியாட்களாக அமர்த்திக்கொண்டான்.

அவ்வாறு எருசலேமிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவர், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தானியேல். பாபிலோனில் அரசக் கைதியாக வாழ்ந்தபோதும் அங்கே இருந்த தெய்வங்களை வழிபடச் சொல்லி வற்புறுத்தப்பட்டபோது, உறுதியாக மறுத்து உலகைப் படைத்த ஒரே கடவுளாகிய பரலோகத் தந்தையை வணங்கி, அவர் தந்த திருச்சட்டங்களின்படி வாழ்ந்தும் வந்தார்.

மந்திரவாதிகளைக் கொன்ற அரசன்

ஒருநாள் இரவுத் தூக்கத்தில் அரசன் நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான். கனவு முடிந்த கையுடன் கண்விழித்து எழுந்த அவன் மிகவும் குழம்பிப் போனான். காரணம், அந்தக் கனவு அவனை எச்சரிக்கை செய்வதுபோல் இருந்தது. அதேபோல் அந்தக் கனவுக்கான அர்த்தத்தை அவனால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதனால் தனது அவையிலிருந்த மந்திரவாதிகளிடமும் அறிஞர்களிடமும் தான் கண்ட கனவுக்கு சரியான அர்த்தம் கூறும்படிக் கேட்டான்.

உடனே அவர்கள், ‘நீங்கள் கண்ட கனவை எங்களுக்கு விவரித்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். ஆனால் ,அந்தக் கனவைக் கூற மறுத்த அரசன், ‘நான் கண்ட கனவைக் கூறிவிட்டால், அதற்கு விதவிதமான அர்த்தத்தை இட்டுக்கட்டிக் கூறி என்னைக் குழப்பிவிடுவீர்கள்; அதனால் நான் என்ன கனவு கண்டேன் என்பதையும் நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

அப்போதுதான் கனவுக்கு நீங்கள் கூறும் அர்த்தத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். நான் என்ன கனவு கண்டேன் என்பதை எனக்கு கண்டுபிடித்துக் கூறாவிட்டால் உங்கள் அனைவரையும் கொன்று குவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று மிரட்டினான்.

அரசன் இப்படிக் கூறியதைக் கேட்டு, அவனது அவையிலும் அவனது தேசத்திலும் இருந்த மந்திரவாதிகளும் அறிஞர்களும் நடுங்கினார்கள். சிலர் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு அரசனிடம் போய் ‘ உங்கள் எண்ணம் ஈடேறாது. கண்ட கனவை வெளிப்படையாகக் கூறாதவரை அதற்கான அர்த்தத்தைக் கண்டறிய எந்த மனிதனாலும் முடியாது’ என்று துணிவுடன் கூறினார்கள்.

நேபுகாத்நேச்சாருக்கு கோபம் தலைக்கேறியது. அதனால் தேசத்திலிருந்த எல்லா மந்திரவாதிகளையும் அறிஞர்களையும் கொன்றுபோடும்படி தனது வீரர்களுக்கு உத்தரவு போட்டான். மந்திரவாதிகள் பலரை வரிசையாகக் கொலை செய்துகொண்டே வந்த அரசனின் வீரர்கள் அடுத்து அறிஞர்களைக் கொலை செய்யத் தயாரானார்கள். முதலில் அவர்கள் தானியேல் வீட்டுக்கு வந்தார்கள்.

அப்போது தானியேல், ‘அரசனின் கனவையும் அதற்கான விளக்கத்தையும் கண்டுபிடித்துக் கூற சில நாட்கள் அவகாசம் வேண்டும் என நான் கேட்டதாக அரசனிடம் கூறுங்கள்’ என்றார். அதை ஏற்று வீரர்கள் திரும்பிச் சென்று அரசனிடம் சொன்னார்கள். அரசன் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினான்.

தானியேலின் பிரார்த்தனை

தானியேல், தன்னுடன் பிடித்து வரப்பட்டு பாபிலோனில் நல்ல செல்வாக்குடன் விளங்கிய அனனியா, மீஷாவேல், அசரியா ஆகிய மூன்று நண்பர்களுடன் கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் தனிமையில் பிரார்த்தனை செய்து உதவி கேட்டார். கடவுள், அரசன் கண்ட கனவை, தானியேலின் கனவில் தோன்றச் செய்து, அதற்கான அர்த்தத்தையும் கூறினார். தானியேல் அடுத்த நாளே அரசனின் தலைமை அதிகாரியிடம் சென்று ‘அறிஞர்கள் யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசனின் கனவை என்னால் சொல்ல முடியும்’ என்றார்.

 ‘அரசன் உனக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார்’ என்று கூறி தானியேலை அரசனின் முன்பாக அழைத்துக் கொண்டுபோய் நிறுத்தினார். அரசன் நேபுகாத்நேச்சார் விடை தெரியாத கேள்விகளோடு தானியேலின் முகத்தை நோக்கினான். தானியேல் கூறத் தொடங்கினார். ‘அரசே! எதிர்காலத்தில் உங்கள் தேசத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதையே நீங்கள் கண்ட கனவின் வழியாக பரலோகத் தந்தையாகிய கடவுள் உங்களுக்குக் காட்டியிருக்கிறார். நீங்கள் கண்ட கனவு இதுதான். ஒரு பெரிய சிலையைக் கண்டீர்கள்.

அதன் தலை தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அதன் மார்பும் கைகளும் வெள்ளியாலும் வயிறும் தொடையும் செம்பினாலும் கால்கள் இரும்பாலும் பாதங்கள் பாதி இரும்பாலும் பாதி களிமண் கொண்டும் செய்யப்பட்டிருந்தன. பிறகு, மலையிலிருந்து உடைபட்டு உருண்டுவந்த ஒரு பெரிய கல் அந்தச் சிலையின் பாதத்தில் வந்து மோதியபோது அந்தச் சிலை தூள் தூளாக நொறுங்கி காற்றோடு கலந்து போய்விட்டது. பிறகு, அந்தக் கல் பெரிய மலையாக உருப்பெற்று பூமியை நிரப்பியது’ என்று அரசன் கண்ட கனவை அப்படியே சொன்னார்.

கனவுக்கான விளக்கம்

தானியேல் தனது கனவை அப்படியே கூறிவிட்டதைக் கண்டு தனது முகத்தில் வியப்பைக் காட்டிக்கொள்ளாமல், தனது அதிகாரத் தோரணையைக் குறைத்து ‘அறிஞர் தானியேலே.. எனது கனவின் அர்த்தத்தையும் கூறிவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று சற்றே பணிவு காட்டினான். உடன் தானியேல், ‘அரசே.. உங்கள் ராஜ்யம்தான் தங்கத்தாலான அந்தச் சிலையின் தலை. உங்களுக்கு அடுத்து வரப்போகும் ராஜ்யம்தான் வெள்ளி. அதற்குப் பின்னர் செம்பைப் போன்ற ஒரு ராஜ்யம் வரும். அது முழு பூமியையும் ஆட்சி செய்யும்.

அடுத்த ராஜ்யம் இரும்பைப் போல் உறுதியானதாக இருக்கும். இறுதியில் வரும் ராஜ்யத்தின் சில பகுதிகள் இரும்பு போல உறுதியாகவும் சில பகுதிகள் களிமண்போல உறுதியற்றும் இருக்கும். மலையாக மாறிய அந்தக் கல்தான் கடவுளுடைய அரசாங்கம். அது இந்த ராஜ்யங்களை எல்லாம் நொறுக்கிவிட்டு என்றென்றும் அழியாமல் இருக்கும். இதுதான் கனவின் அர்த்தம்’ என்று சொன்னார்.

உடனே, அரசன் தானியேலுக்கு முன்பாக விழுந்து வணங்கினான். அவன் தானியேலிடம், ‘உங்கள் கடவுள்தான் இந்தக் கனவை உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். அவரைப் போன்ற கடவுள் யாரும் இல்லை என்று உணர்ந்துகொண்டேன். அவரைப் பணிகிறேன்’ என்றான்.

அதன்பின் தானியேலை மட்டுமல்ல, எந்த அறிஞரையும் அவன் கொல்லவில்லை. மாறாக, தானியேலை எல்லா அறிஞர்களுக்கும் தலைமை அறிஞராக அறிவித்தான். அத்துடன் பாபிலோன் நகரத்தின் அதிபதியாகவும் ஆக்கி அவரைச் சிறப்பித்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x