Published : 17 Jan 2019 10:24 AM
Last Updated : 17 Jan 2019 10:24 AM

தெய்வத்தின் குரல்: அன்னையரின் தியாகமே குழந்தைகளின் வாழ்வு

நளனுடைய சரித்திரத்தைத் தமிழில் அழகான வெண்பாக்களில் புகழேந்திப் புலவர் பாடியிருக்கிறார் இதற்கு மூலமாக மகாபாரதத்தில் நளோபாக்கியாயானம் இருக்கிறது.

ஸ்ரீஹர்ஷர் என்ற ஸம்ஸ்கிருதக் கவி ‘நைஷதம்’ என்ற அற்புதமான காவியமாக இதையே எழுதியிருக்கிறார்.  நிஷத நாட்டு மன்னனான நளனின் கதையைச் சொல்வதால் அதற்கு நைஷதம் என்று பெயர். இந்தக் காவியம் பண்டிதர்களுக்கெல்லாம் அருமருந்து போன்றது என்பதால் “நைஷதம் வித்வத் ஒளஷதம்” என்பார்கள்.

வித்வான்களுக்கு ஒளஷதம் என்பதிலேயே இன்னொரு அபிப்ராயத்தையும் சொல்லாமல் சொன்னதாகிறது. அதாவது சாதாரண வாசகர்கள் அந்தக் காவியத்தை சுலபத்தில் புரிந்துகொள்ள முடியாது. அது ‘புலவர் நடை’ என்கிறார்களே, அப்படிப்பட்டதில் ஆனது.

தமயந்தி மண்டபத்தில் நிற்கட்டும்

தமயந்தி ஸ்வயம்வர மண்டபத்தில் நின்றபடி நிற்கட்டும். இப்போது ஸ்ரீஹர்ஷரின் கதையைக் கொஞ்சம் சொல்கிறேன். அவருடைய தகப்பனார் ஒரு ராஜ சதஸில் வித்வானாக இருந்தவர். ஒரு சமயம் வேறொரு ராஜ்யத்திலிருந்து ஒரு கவி இந்தச் சபைக்கு வந்தார். இருவருக்கும் வாதப் போட்டி நடந்தது. ஸ்ரீஹர்ஷரின் தகப்பனார் தோற்றுவிட்டார். மிகவும் மனமுடைந்து அவமானத்துடன் அவர் வீட்டுக்கு வந்தார். தோல்வி அடைந்த ஏக்கத்திலேயே காலமாகிவிட்டார்.

அப்போது ஸ்ரீஹர்ஷர் சிறு குழந்தை. தாயார் மாமல்லதேவிதான் குழந்தையை வளர்த்தாள். தன்னுடைய பதி வித்வத் சபையில் தோற்றுப் போனதற்குப் பரிகாரமாகப் புத்திரனை மகாபண்டிதனாக்க வேண்டும் என்று அவள் கங்கணம் கட்டிக் கொண்டாள். அவளுக்கு அவளுடைய பதி சிந்தாமணி என்கிற மந்திரத்தை உபதேசித்திருந்தார். அதை முறைப்படி ஜபித்து சித்தி பெற்றால் அமோகமான சரஸ்வதி கடாக்ஷம் உண்டாகும்.

இப்போது அவள் தன்னுடைய அறியாக் குழந்தை ஸ்ரீஹர்ஷருக்குச் சிந்தாமணி மந்திரத்தை உபதேசித்தாள். எப்போது பார்த்தாலும் அதை அந்தக் குழந்தை ஜபித்து வருமாறு பழக்கினாள். குழந்தையானதால் அதுவும் எல்லா வேளைகளிலும் – விளையாடுகிறபோதுகூட – அந்த மந்திரத்தை உருப்போட்டுக் கொண்டேயிருந்தது.

ஆனாலும் மாமல்லதேவிக்கோ எப்போது குழந்தைக்கு மந்த்ர ஸித்தி உண்டாகுமோ என்று கவலையாகவே இருந்தது. திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.

மயான ஜெபம்

குழந்தையின் பெருமைக்காக எந்த மகாத்தியாகத்தையும் செய்யக்கூடிய மாதா ஒருத்திக்குத்தான் அப்படிப்பட்ட யோசனை தோன்ற முடியும். அது என்ன யோசனை? சில மந்திரங்களை உக்கிரமான முறையில் அப்பியாசம் செய்வதுண்டு. இதன்படி பிரேதத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு ஜபித்தால் விரைவில் ஸித்தி உண்டாகும். இதனால்தான் இப்போதுகூடச் சில மந்திரோபாஸகர்கள் மசானத்துக்குப் போய் ஜபம் செய்கிறார்கள்.

சிறு குழந்தையான ஸ்ரீஹர்ஷர் மாமல்லதேவி படுத்துக் கொண்டிருக்கும்போது அவள் மீது உட்கார்ந்து கொண்டுகூடப் பழக்க விசேஷத்தால் சிந்தாமணி மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பதுண்டு. இதையொட்டித்தான் அவளுக்குப் பரமத் தியாகமான யோசனை உண்டாயிற்று. ஒருநாள் அவள் படுத்திருக்கையில் அவள் உடலின் மேலேறி விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை.

அப்போதும் மந்திர ஜபத்தை அது விடவில்லை. தன் யோசனைப்படி அந்தச் சந்தர்ப்பத்தை விடாமல் மாமல்லதேவி அப்போதே கழுத்தை நெரித்துக்கொண்டு பிராணத் தியாகம் செய்து கொண்டுவிட்டாள். ‘எப்படியாவது நம் பிள்ளை அபிவிருத்தியடைந்து சமானமில்லாத வித்யாஸித்தி பெற்றால் போதும்; நம் உயிர் போனாலும் போகட்டும்’ என்று எண்ணி இப்படிச் செய்துவிட்டாள்.

அவள் நினைத்தபடியே குழந்தை அவள் தூங்குவதாக எண்ணி அவளுடைய சவத்தின் மீதிருந்தபடி மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தது. அவள் செய்த தியாக விசேஷத்தால் அந்தக் குழந்தைக்கு சரஸ்வதியின் பூரண அநுக்கிரகமும் கிடைத்து விட்டது! நமக்குக் கொடூரமாகத் தோன்றினாலும்கூட இந்தக் கதையில் ஒரு தாயாரின் தியாகமே முக்கியமானது!

கோச்செங்கட் சோழன் பிறந்த கதை

குழந்தையின் மேன்மைக்காகத் தாயார் எந்தத் தியாகமும் செய்வாள். தமிழ் நாட்டில் கோச்செங்கட்சோழன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அவனுக்குக் கண்கள் செக்கச் செவேல் என்று இருக்கும். அதனால்தான் செங்கட்சோழன் எனப் பெயர் வந்தது. இதற்குக் காரணம் ஒரு தாயின் தியாகம்தான்.

இவனுடைய தாயாருக்குப் பிரசவ வேதனை உண்டானபோது, ஆஸ்தான ஜோதிஷர் இன்னும் ஒரு முகூர்த்தத்துக்குப் பிறகு மிகவும் உத்தமமான லக்னம் உண்டாவதாகவும் அப்போது பிள்ளை பிறந்தால் அது சக்கரவர்த்தியாகப் பிரக்யாதியுடன் விளங்கும் என்று சொன்னார். எங்கே அந்த லக்னம் வருமுன்பே குழந்தை பிறந்துவிடுமோ என்று ராணிக்குக் கவலை உண்டாயிற்று.

பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டு எப்போது பிள்ளை பிறந்து வேதனை தீரும் என்று எதிர்பார்ப்பதற்குப் பதில் இவளோ, தன் வேதனை நீண்டாலும் பரவாயில்லை, பிள்ளை அடுத்த லக்னத்திலேயே பிறக்க வேண்டும் என்று நினைத்தாள். நினைத்தது மட்டுமில்லை. தன்னையே தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் சொன்னாள் – அப்படிச் செய்வதால் சிசு ஜனிப்பதில் காலதாமதம் உண்டாகும் என்பதால்! அவ்விதமே செய்தார்கள்.

சகிக்க முடியாத கஷ்டத்தை அந்தத் தாயார் பிள்ளையின் மேன்மையை வேண்டித் தானாக ஏற்றுக் கொண்டாள். அவள் விரும்பியபடியே பிரஸவமும் தாமதமாயிற்று. நல்ல லக்னத்தில் குழந்தை பிறந்தது. இவளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டதால் குழந்தை முகமெல்லாம் ரத்தம் குப்பென்று ஏறியிருந்தது.

குறிப்பாகக் கண்களில் ரத்தம் கட்டிச் செக்கச் செவேல் என்றாகி விட்டது. அதனால்தான் அவனுக்கு ‘கோச்செங்கண்’ என்றே பேர் வைத்தார்கள். அவனும் ஜோதிஷர் சொன்னபடியே பிற்காலத்தில் புகழ்பெற்ற மாமன்னனாக விளங்கினான்….

(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x