Last Updated : 17 Jan, 2019 10:24 AM

 

Published : 17 Jan 2019 10:24 AM
Last Updated : 17 Jan 2019 10:24 AM

விவிலிய மாந்தர்கள்: பாடம் கற்றுக்கொண்ட யோனா!

இயேசுவின் 12 சீடர்களில் கலிலேயாவைச் சேர்ந்த மீனவரான சீமோன் மூத்தவரும் முதன்மையானவருமாகக் கருதப்படுகிறார். ஏனெனில் இவரையே இயேசு தனது முதல் சீடராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். மேலும் யோனாவின் மகனாகிய சீமோன் என்ற அவரது பெயரை மாற்றி பேதுரு என்ற சிறப்புப் பெயரை இயேசு வழங்கினார்.

நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தில், பேதுரு தலைகீழாகச் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இவரது கல்லறையின் மீதுதான் வாடிகன் நகரத்தில் உள்ள தூய பேதுரு தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவர் இயேசுவின் வாழ்க்கையை நற்செய்தியாகப் பரப்பி வந்த காலத்தில், சக நற்செய்தியாளர்களுக்கும் மனம் திரும்பாமல் பாவத்தில் வாழ்ந்துவந்த மக்களுக்கும் பல கடிதங்களை எழுதினார்.

அவை விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நூலில் பேதுரு என்ற தலைப்பிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பேதுரு அத்தியாயம் 2-ல் 8 முதல் 10 வரையிலான வசனங்கள், இயேசுவின் காலத்துக்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசி யோனாவின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

“அன்பானவர்களே.. கடவுளுக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷங்கள் போலவும் ஆயிரம் வருஷங்கள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.  கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றத் தாமதிப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தாமதிப்பதில்லை.

ஒருவரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார். ஆனாலும் கடவுளின் நாள் திருடன் வருவதுபோல் வரும். அப்போது, வானம் பயங்கரச் சத்தத்தோடு மடமடவென்று ஒழிந்து போய்விடும். கடும் வெப்பத்தில் மூலப்பொருள்கள் அழிந்துவிடும், பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் எரிந்து நாசமாகும்.” என்ற எச்சரிக்கையை பேதுரு தருகிறார்.

நினிவே நகரின் வாழ்க்கை

அசீரியாவில் நினிவே என்ற கோட்டை நகரம் இருந்தது. அங்கே வாழ்ந்து வந்த மக்கள் மிக மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசனும் அவர்களைப்போலவே முறையற்ற வாழ்க்கையையே வாழந்துகொண்டிருந்தான். முக்கியமாக ‘பாகால்’ என்ற கற்பனைக் கடவுளை வணங்கி வந்தார்கள். அவர்கள் மனம் திருந்தி, உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்பினார்.

அதற்காக அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு ஒன்றை வழங்க முடிவு செய்தார். தன்னுடைய பற்றாளனும் தீர்க்கதரிசியுமான யோனாவிடம் “ நீ அந்த நகரத்துக்குச் சென்று மனம் திருந்தி நேர்மையான புதிய வாழ்க்கை வாழும்படி கூறு. இல்லாவிட்டால் 40 நாட்களில் நகரம் முழுவதையும் நான் அழித்துவிடுவேன் எனச் சொல்” என்று கூறினார். ஆனால், யோனா நினிவேக்குப் போகாமல், அந்த நகரத்தின் எதிர் திசையில் பயணித்து, தர்ஷ் நகரத்துக்குச் செல்கிற ஒரு கப்பலில் ஏறினார்.

அந்தக் கப்பல் கடல் நடுவே போய்க்கொண்டிருந்தபோது கடும் புயல் வீசியது. கப்பலில் பயணித்த அனைவரும் பயந்து நடுங்கிக் கடவுளிடம், “எந்தத் தவறும் செய்யவில்லையே” என்று வேண்டினார்கள். அப்போது மனசாட்சியின் உறுத்தலால் வாய்திறந்த யோனா அவர்களிடம், “என்னால்தான் இப்படி நடக்கிறது. கடவுள் எனக்குக் கூறியதைச் செய்யாமல் நான் ஓடிவந்துவிட்டேன். என்னைத் தூக்கி கடலில் போடுங்கள். அப்போது, கடவுளின் கோபம் தணிந்து புயல் நின்றுவிடும்” என்று சொன்னார்.

ஆனால் அவர் கூறியபடி யோனாவைக் கடலில் தூக்கிப் போட அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் விரைந்து தன்னைக் கடலில் தூக்கிப் போடும்படி புலம்பிக்கொண்டே இருந்ததைக் கண்ட பயணிகள், புயலும் அதிகரித்துக்கொண்டே செல்வதைக் கண்டு அஞ்சி, அவர் கூறியபடியே யோனாவை கடலில் தூக்கிப்போட்டார்கள். அப்படிச் செய்த அடுத்த நிமிடமே  புயல் நின்றுவிட்டது. அந்த அதிசயத்தைக் கண்டு கப்பலில் இருந்தவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.

மீனின் வயிற்றில் மூன்று நாட்கள்

கடலில் விழுந்த யோனாவோ கதை முடிந்துவிட்டதென்று நினைத்தார். ஆனால் அவர் கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி மூச்சு நின்றுவிடும் என்ற நிலை வருவதற்குமுன் கடவுள் ஒரு மீனை அனுப்பினார். அது யோனா ஓடிப்போக நினைத்த அந்தக் கப்பலைவிடப் பெரிதாக இருந்தது. அந்த மீன் யோனாவை விழுங்கியது. ஆனால் அவர் சாகவில்லை.

அந்த மீனின் வயிற்றுக்குள் நன்கு சுவாசித்தபடி பாதுகாப்பாக பஞ்சுமெத்தையில் படுத்திருப்பதைப்போல உணர்ந்தார். “இனி எப்போதும் உங்கள் உத்தரவைப் பின்பற்றுவேன்” என்று உறுதிகூறிப் பிரார்த்தனை செய்த யோனாவை, மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் கடவுள் பத்திரமாகப் பாதுகாத்தார். பிறகு, அந்த மீன் அவரைத் கரையில் துப்பிச்செல்லும்படிச் செய்தார்.

பொறுமை இல்லாத யோனா

உடனடியாக நினிவே நகரத்துக்குச் சென்று அங்கு வசித்துவந்த மக்கள் மத்தியில் கடவுளின் எச்சரிக்கையைப் பரப்புரை செய்தார் யோனா. “இன்னும் 40 நாட்களில் இந்த நகரம் அழிந்துவிடும். இது கடவுளின் எச்சரிக்கை” என்றார். கடவுளின் வார்த்தைகளைக் கேட்கமாட்டார்கள், அவர்கள் அழிந்துபோவதைக் கண்முன்னால் பார்க்கப்போகிறேன் என்று யோனா நினைத்தார். ஆனால் நினிவே நகரத்தின் அரசன், தன் மக்களிடம், “நீங்கள் கடவுளிடம் அழுது கேளுங்கள்.

திருந்தி வாழுங்கள். நாம் நல்ல பாதைக்குத் திரும்பிவிட்டால் ஒருவேளை, கடவுள் நம்மை அழிக்காமல் விட்டுவிடலாம்” என்று சொன்னார்.  ஆச்சரியம்! மக்கள் திருந்தினார்கள். அதைக் கண்ட கடவுள் நினிவேயை அழிக்கவில்லை. அதனால் யோனா கோபப்பட்டார்.

தன் பேச்சைக் கேட்காமல் ஓடிய யோனாவிடம் கடவுள் பொறுமையாக இருந்தார், அவருக்கு இரக்கம் காட்டி அவரது உயிரைக் காப்பாற்றினார். ஆனால் யோனாவோ தீர்க்கதரிசியாக இருந்தும் நினிவே நகர மக்களுக்கு இரக்கம் காட்ட விரும்பவில்லை. கடவுள் நினிவேயை அழிக்காத வருத்தத்தில் அந்த நகரத்துக்கு வெளியே இருந்த ஒருபெரிய சுரைக்காய்க் கொடியின் நிழலில் போய் ஆதங்கத்துடன் உட்கார்ந்தார். அவர் உட்கார்ந்த சில நிமிடங்களில் அந்தக் கொடி பட்டுப்போய்விட்டது.

தன்னால் அந்தக் கொடி பட்டுபோய்விட்டதாக கவலைப்பட்டார். அதனால் யோனாவுக்குக் கோபமும் எரிச்சலும் அதிகமானது. அப்போது யோனாவிடம் பேசிய கடவுள், “நினிவே மக்களுக்காகக் கவலைப்படாமல் இந்தக் கொடிக்காகக் கவலைப்படுகிறாய். நான் அவர்களுக்கு இரக்கம் காட்டினேன், அதனால் அவர்களை அழிக்கவில்லை” என்றார். செடி, கொடிகளைவிட மனம் திரும்பும் மனிதர்களுக்கு வாழ்க்கை உண்டு என்பதை கடவுள் யோனாவுக்குப் புரிய வைத்தார். யோனாவின் பொறுமையின்மைக்கு பாடம் கற்றுக்கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x