Published : 13 Dec 2018 10:17 AM
Last Updated : 13 Dec 2018 10:17 AM

தெய்வத்தின் குரல்: பிள்ளைக் கறி புராணத்தின் உட்கிடைகள்

சிவத்தொண்டர்களிலெல்லாம் ரொம்பச் சின்னவன் என்ற விநய மனோ பாவத்தில் தன்னை ‘சிறுத்தொண்டன்’ என்றே சொல்லிக் கொண்டார். பரஞ்ஜோதி என்ற பேர் போய் சிறுத்தொண்டர் என்பதே அவர் பெயராக நிலைத்து விட்டது.

பெரிய பல்லவ ஸாம்ராஜ்யத்தின் ஸேநாதிபதியாக எந்தப் பெயரில் அவர் பிரஸித்தி பெற்றிருந்தாரோ, அந்தப் பெயரை மறந்து, சிவனடியார்களில் அடியார்கடியாராக அவர் தமக்கு வைத்துக் கொண்ட சிறுத்தொண்டர் என்ற பேரையே லோகம் எடுத்துக் கொண்டது என்பதிலிருந்து நம் ஜனங்கள் எப்படி லௌகிக ஸ்தானம், அந்தஸ்து எல்லாவற்றையும்விட தெய்வ ஸம்பந்தமாகப் பணி செய்வதைத்தான் பெரிஸாக மதித்திருக்கிறார்களென்று தெரிகிறது.

அவர் கதை ‘சிறுத் தொண்ட நாயனார் புராணம்’ என்றே பெரிய புராணத்தில் வருகிறது. செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் என்று ஸுந்தரமூர்த்தி ‘திருத்தொண்டத் தொகை’யில் சொல்லியிருக்கிறார். ஸுந்தரமூர்த்தி அறுபத்து மூன்று நாயன்மார்களையும் குறித்தே திருத்தொண்டத் தொகை பாடியதால், அவர் சிறுத்தொண்டரைச் சொன்னதில் விசேஷமில்லை.

விசேஷம் எதிலிருக்கிறதென்றால் ஞானஸம்பந்தரும் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடியிருப்பதில்தான். அவர் திருச்செங்காட்டாங்குடிக்குச் சிறுத்தொண்டர் இருந்த காலத்திலேயே வந்து, அவருடைய பாதத்தை இவர் மார்போடு கட்டியணைத்ததாகச் சொன்னேன். அவரும் இவரைக் கொண்டாடி, தான் பாடின தேவாரத்திலேயே இவரைச் சொல்லியிருக்கிறார்.

ஒரு பதிகத்தில் சிறுத்தொண்டரைப் ‘பொடி’ பூசிக் கொண்டிருக்கிறாரென்று அவருடைய விபூதி தாரணத்தை விசேஷமாகச் சொல்லியிருக்கிறார். [தோடுடைய செவியன் என்ற] முதல் பாட்டிலேயே ஸ்வாமியை “பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்” என்றவர் இங்கே இந்த சிவத்தொண்டரை அப்படிச் சொல்லி அவருக்கு அருள் பண்ணுவதற்காகவேதான் ஸ்வாமி அந்த ஊரிலே கோவில் கொண்டி ருக்கிறார் என்று பாடியிருக்கிறார்.

‘திருச்செங்காட்டாங் குடியிலிருக்கிற ஸ்வாமியே!’ என்று பாடியிருக்கிறார். ஒரு அடியில், அவருடைய பிள்ளை சீராளன் பேரையும் சேர்த்துச் “சீராளன் சிறுத்தொண்டன்” என்று சொல்லியிருக்கிறார்.

உள்ளே சிவோபாசனை வெளியே போர்

அவர் ஊரோடு வந்து சிவதர்மம் பண்ண ஆரம்பித்த அப்புறந்தான் அவருக்குப் பிள்ளை சீராளன் பிறந்ததே. அதுவரை தாம்பத்தியத்திலே மனஸ் போகாமல் உள்ளே சிவோபாஸனை, வெளியிலே கத்தியைச் சுழற்றிக் கொண்டு யுத்தம் என்றே இருந்திருக்கிறார்.

வயசுக் காலத்தில் பிறந்த அந்த அருமைப் பிள்ளையைத்தான் பைரவ யோகி வேஷத்தில் வந்த பரமசிவன் கேட்டவுடன் இவர் கொஞ்சங்கூட யோசிக்காமல் கறி சமைத்துப் போட்டது.

கேட்கிறதற்கே கொடூரமாயிருக்கிற தென்றாலும் இதில் அநேக சமாசாரங்கள் ஒன்றுக்கொன்று கோத்துக் கொண்டு போகின்றன. சிறுத்தொண்டர் ஜயித்த ஊர் வாதாபி. ஊருக்குப் பேர் தந்த அசுரனைக் கறி பண்ணிப் போட்டான் அவனுடைய அண்ணா. அது தம்பிக் கறி; இது பிள்ளைக் கறி! அந்தக் கறியை அகஸ்தியர் ஜெரித்துக் கொள்ள சக்தி கொடுத்தது ஒரு கரி-கரிமுகர்! அவர்தான் சிறுத்தொண்டரின் ஊர்க்கோவிலை கணபதீச்சரமாக்கியவர்.

சிறுத்தொண்டர் பரஞ்ஜோதியாக வாதாபியில் ரத்த வெள்ளம் ஓடப் பண்ணினாரென்றால் அந்தக் கரிமுகரோ இவருடைய பிறந்த ஊரில் அஸுரன் ரத்தத்தைப் பெருக்கெடுத்தோடப் பண்ணி அதைச் செங்காட்டாங்குடியாக்கித் தாமும் கபிலராக ஆகியிருக்கிறார்!

பைரவ யோகியாக வந்த ஸ்வாமிக்கு அந்தக் கோலத்திலேயே கணபதீச்சரத்தில் மூர்த்தம் இருக்கிறது. அவருக்கு ‘உத்தராபதீச்வரர்’ என்று பேர். சிறுத்தொண்டரிடம் அப்படித்தான் அவர் பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார். வடதேசத்தில் சக்ரவர்த்தியாக இருந்த ஹர்ஷவர்தனனுக்கு ‘உத்தராபதீச்வர’ப் பட்டமுண்டு.

அவனுடைய ஆட்சிக் காலத்தில்தான் புலகேசி தென் தேசத்தில் சக்ரவர்த்தியாக இருந்து அந்த ஹர்ஷனையும் பின்வாங்கப் பண்ணி ‘தக்ஷிணாபதீச்வர’னாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டு பெருமைப்பட்டது. புலிகேசியை த்வம்ஸம் பண்ணியவர் பரஞ்ஜோதி.

அப்புறம் அதை அவர் அடியோடு மறந்து சிவனடியாராக இருந்தபோது அவரைச் சோதித்து அவர் பெருமையை ப்ரகடனம் பண்ணவவந்த ஸ்வாமி தமக்கு உத்தராபதீச்வரப் பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்! சேநாதிபதியாக ஒரு தக்ஷிணாபதீச்வரனை ஜயித்தவர் பக்தராகி அந்த உத்தராபதீச்வரருக்கு யாரும் செய்ய முடியாத தொண்டு செய்து அருள் பெற்றிருக்கிறார்!……

பிறவாத்தானம் இறவாத்தானம்

சோள சீமையிலுள்ள திருச்செங்காட்டாங்குடியில் ‘உத்தராபதீச்வரர்’ என்ற ஹர்ஷனுடைய பட்டப் பெயர் இருக்கிறதென்றால், பல்லவ ராஜதானியான காஞ்சீபுரத்திலேயே அவனுடைய ராஜதானியை ஞாபகப் படுத்தும் இரண்டு சிவாலயங்கள் இருக்கின்றன. பிறவாத்தானம், இறவாத்தானம் என்று இரண்டு சிவாலயங்கள். அங்கேயுள்ள மூல மூர்த்திகளுக்குப் பிறவாத்தானேச்வர் என்றும் இறவாத்தானேச்வரர் என்றும் பெயர்.

ஹர்ஷவர்த்தனனின் ராஜதானிக்குத் ‘தானேசர்’ என்றே பெயர். ‘ஸ்தாண்வீச்வரம்’ என்பதன் கொச்சையே ‘தானேசர்’. பட்ட கட்டைக்கு ‘ஸ்தாணு’ என்று பெயர். பிறப்பு இறப்பும், எந்த அசைவும் இல்லாமலிருக்கும் ஈச்வரனுக்கும் ஸ்தாணு என்று பெயர். அந்த ஸ்தாணு ஈச்வரனையும் ஹர்ஷ ராஜதானியிலிருந்து பல்லவ ராஜதானி ஸ்வீகரித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது….

மூலத்தில் ப்ராம்மண ஜாதிக் காரரான பரஞ்ஜோதி யுத்தக்களத்தில் எத்தனைப் பேர் தலையைச் சீவியிருக்கிறார்! அதற்குப் பரிஹாரம் மாதிரிதான் அவர் ஸொந்தப் புத்திரனை ஹத்தி செய்யும்படி ஈச்வரன் மாயமாகக் கேட்டிருக்கிறார்! அர்ஜுனனுக்கு பகவான் சொல்ல வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே முதலில் பரஞ்ஜோதி ஸ்வதர்மத்திற்காக – ஸொந்த ஆசாபாசங்களுக்காக இல்லை;

மாமாத்ர ஜாதி என்று ஆகிவிட்ட பின் ஏற்பட்ட ஸ்வதர்மத்திற்காக – சத்ரு ஸைன்யத்தை ஹதம் பண்ணினார். அப்புறம் சிவனடியார் பணியே ஸ்வதர்மமாகிவிட்ட சிறுத்தொண்டரானபோது, சிவனே பைரவ யோகியாய் வந்தபோது கொஞ்சங்கூட ஸொந்தப் பாசமில்லாமல் ஏக புத்ரனையே அவருக்கு நைவைத்தியமாக்கினார். பைரவர் கேட்டது குறிப்பாக இவர் பிள்ளையை இல்லை. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாயுள்ள ஐந்து வயஸு நர பசு வேண்டுமென்றுதான் கேட்டார்.

சிறுத்தொண்டரேத்தான் அந்த நிபந்தனைக்கு ஏர்வையாயிருந்த [பொருத்தமாயிருந்த] தன் பிள்ளைச் சீராளனையே கறி சமைத்துப் போட்டார் – சொல்வதற்கே என்னவோ போல்தானிருக்கிறது. அப்படிப்பட்டதைக் கார்யத்திலேயே சொந்தத் தகப்பனாரும், அடியார் பணியில் அவருக்குக் கொஞ்சங்கூடப் பின்தங்காத தாயாரும் சேர்ந்து பண்ணினார்கள் என்னும் போதுதான் நிஜபக்தியின் ஸ்வரூபம் தெரிகிறது.

பைரவரின் பொய்க்கோபம்

புத்ரனின் மாம்ஸமென்று சொல்லாமலே பைரவருக்கு அவர்கள் பரிமாறினார்கள். அவரும் ஒன்றும் தெரியாத மாதிரி, “கூட உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதற்கு உம்ம பிள்ளையைக் கூப்பிடும்” என்றார். “அவன் இப்போது உதவான்” என்று மட்டும் அதற்குச் சிறுத்தொண்டர் பதில் சொன்னார். “அப்படியானால் நானும் இங்கே சாப்பிடாமல் போகிறேன். நான் சாப்பிட வேண்டுமானால், அவனைக் கூப்பிடும்” என்று பைரவர் பொய்க் கோபத்தோடு சொன்னார்; வேறே வழியில்லாமல் ஸதிபதிகள் வெளிப்பக்கம் போய்க் கூப்பிட்டார்கள்.

உடனே இத்தனை நாடகமும் ஆடின பரமேச்வரனின் அநுக்ரஹத்தால் அந்தப் பிள்ளை மேனி குலையாமல் நிஜமாகவே ஒடி வந்துவிட்டான்; பைரவர் மறைந்து ரிஷபாரூடராக, அம்பாளோடும் பாலஸுப்ரமண்யரோடும் ஸோமாஸ்கந்தராகக் காட்சி கொடுத்தார் – என்று கதை போகிறது.

ஸதிபதிகள் சேர்ந்து பிள்ளையை அரிந்து சமைத்துப் போடவேண்டுமென்று சொன்ன ஸ்வாமியும் முடிவிலே ஸதிபதிகளாக, பிள்ளையான குமார ஸ்வாமியையும் சேர்த்துக்கொண்டு வந்ததாகப் பெரிய புராணத்தில் இருக்கிறது.

மூத்த பிள்ளை விக்நேச்வரர் ப்ராயச்சித்தமாக சிவபூஜை பண்ணியதால்தான் ஸ்வாமி அந்த ஊரில் கோவில் கொண்டதே. இதைச் சொல்லும்போது இன்னொரு பொருத்தம்கூடத் தெரிகிறது. சிறுத்தொண்டர் சீராளனின் சிரஸைச் சீவின மாதிரியேதான் பூர்வத்தில் ஸ்வாமியும் அம்பாள் படைத்த பிள்ளையின் சிரஸைத் சீவியிருக்கிறார்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x