Published : 05 Dec 2018 07:28 PM
Last Updated : 05 Dec 2018 07:28 PM

துங்கபத்திரையின் கரையில் புரந்தரதாசர்

காலை எட்டு மணிகூட ஆகியிருக்க வில்லையெனினும் ஹம்பி உஷ்ணத்தில் தகித்தது. விருபாக்ஷா கடைவீதியில் நாங்கள் நாற்பது பேரும் பேருந்திலிருந்து இறங்கிப் பாறை வழியில் மேலேறத் தொடங்கியிருந்தோம்.

கண்ணுக்கு இனிமையான துங்கபத்ரை நதியிலிருந்து எங்கள் பக்கம் வீசிய தென்றல் காற்று நாங்கள் உணர்ந்த உஷ்ணத்தைக் குறைப்பதாக இருந்தது. நாங்கள் யந்த்ரோதாரக ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தோம். அடித்து பாழ்படுத்தப்பட்ட ஒரு பெரும் பேரரசின் தலைநகரில் இன்னும் வழிபாடு நடக்கும் சில ஆலயங்களில் ஒன்று அது.

பாறையில் வெட்டப்பட்ட படிகளில் ஏறத் தொடங்கினோம். திடீர்த் திருப்பங்களுடன், இயற்கையாக அமைந்த பாறை வளைவுகளுக்குள் நடந்தோம். ஒரு வெட்டவெளிக்கு வந்து நின்றோம். பாறைகள் மேல் வளர்ந்திருந்த குத்துச்செடிகளுக்கு மத்தியில் பரிசல்கள் உலரவைக்கப்பட்டிருந்தன.

விஜயநகரப் பேரரசின் காலத்திலிருந்து மாறாத காட்சியாக இது இருக்க வேண்டும். கீழே, துங்கபத்ரை நதி, கூர்மையாக வளைந்துத் திரும்பி ஒரு வட்டம் போட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது. இந்த இடம் சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இன்னும் சில படிகள் நடந்தால் அனுமார் கோயில் வந்துவிடும்.

அந்தச் சிறிய கோயிலுக்குள் நாங்கள் கூட்டமாக நுழைந்தோம். காலை வழிபாட்டுக்காகப் பூசாரி தயாராகிக்கொண்டிருந்தார். இத்தலத்தில் அனுமன் புடைப்பு உருவமாக அமர்ந்த நிலையில் உள்ளார். நட்சத்திர வடிவில் யந்திரத் திருவாட்சி உள்ளது.

மத்வர்கள் வழியில் வந்த புகழ்பெற்ற துறவிகளில் ஒருவரான வியாசராயர் அமைத்த 732 ஆஞ்சநேயர்களில் இவரும் ஒருவர். கிருஷ்ண தேவராய மன்னருக்கு ஆச்சாரியராக இருந்த இவர்தான் விஜயநகரத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்தவர்.

வியாசராயரே இயற்றிய எட்டுப் பத்திகளைக் கொண்ட தோத்திரத்தைச் சொல்லிப் பூஜை தொடங்கப்பட்டது. எங்கள் குழுவிலிருந்த ஒருவரும் அந்தத் தோத்திரத்தைத் தொடர்ந்தனர். கற்பூரம் காட்டப்பட்டபோது, திருவாட்சியைச் சுற்றிக் குரங்குகளின் உருவங்களும் கல்லில் தெரிந்தன. அவை 12 குரங்குகளாம். யந்திரத்துக்குள் அனுமனை அடக்குவதற்காக 12 முறை வியாசராயர் முயன்றார் எனச் சொல்லப்படுகிறது. அனுமன் பறந்துகொண்டே இருந்தாராம்.

இந்த ஆலயத்துக்கு நாங்கள் குழுவினருடன் வருவதென்பது இரண்டாண்டுக் கனவாக இருந்தது. 2016-ம் ஆண்டு டிசம்பர் இசைப் பருவத்தில் ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடிய புரந்தரதாசரின் கீர்த்தனையான ‘ஸ்வாமி முக்ய ப்ராண’-வைக் கேட்டேன்.

ஆர்.கே. ஸ்ரீராம்குமாரால் யதுகுல காம்போதியில் அமைக்கப்பட்ட பாடல் அது. பம்பை நதியின் தீரத்திலுள்ள யந்த்ரோதாரக ஆஞ்சநேயரைப் புகழ்ந்து பாடப்பட்ட கீர்த்தனை அது. துங்கபத்திரை உள்ளூரில் பம்பை என்று அழைக்கப்படுகிறது.

ஹம்பியில் புரந்தரதாசர்

புரந்தரதாசர் பாடிய பாடல்களில் சிலவற்றை விஜயநகரத்திலுள்ள இந்த ஆலயத்துடன் நிச்சயமாக அடையாளம் காணமுடியும். அந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது. வழிபாடு முடிந்து குங்குமச் சிவப்பில் அட்சதை அரிசியைக் கொடுத்தார்கள். மாத்வர்களின் வழக்கம் அது.

ஆஞ்சநேயர் குறித்துப் பாடப்பட்ட ஒரு பாடலைப் பாட முடியுமா என்று தயக்கத்துடன் புரோகிதரைக் கேட்டோம். அவர் பரிவுடன் ஒப்புக்கொண்டார். நாங்கள் வெளி முற்றத்தில் உட்கார்ந்தோம். அவருடன் பாடகர் அஸ்வத் நாராயணனும் இணைய ‘ஸ்வாமி முக்ய ப்ராண’ பாடப்பட்டது.

விஜயநகரம் மீதான தாக்குதலில் யந்த்ரோதாரக ஆஞ்சநேயர் கோயில் தப்பிப் பிழைத்ததென்பது ஆச்சரியமானதுதான். சுற்றிப் பிரம்மாண்டமான கலை நுணுக்கங்களுடன் தெரியும் பிரம்மாண்ட கோயில்கள் மூலவர் சிலைகள்கூட இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன.

குழந்தைகளாக மாறினோம்

சூலூர் கடைவீதி முகப்பாக உள்ள அச்சுதராயர் ஆலயம் என்று அழைக்கப்படும் திருவெங்கலாதர் கோயிலும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. விஜயநகரத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு அனுமன் கோயிலும் கோதண்டராமர் கோயிலும் பெரிதாகத் தெரிந்திருக்காது போலும். இதற்கு முந்தைய தினம், நாங்கள் விருபாக்ஷா-பம்பாபதி கோயிலுக்குப் போயிருந்தோம்.

அங்கிருந்து ஹேமகுடா மலையில் ஏறினோம். கர்நாடக இசை பயிலத் தொடங்குபவர்கள் பாடும் ‘குந்த கவுர’ கீதத்தைப் பாடத் தொடங்கினோம். அது விருபாக்ஷா கோயிலுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கீதமாகும். எல்லோரும் சேர்ந்து பாடத் தொடங்க அந்தச் சூழல் ஒரே களேபரமாக மாறியது. இசை வகுப்பில் சேர்ந்து பாடும் குழந்தைகளாக மறுபடியும் மாறினோம். எங்களோடு அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் சேர்ந்து பாடத் தொடங்கியதுதான் அதிசயம்.

thunga-3jpgயந்த்ரோதாரக ஆஞ்சநேயர்

மெய்யாகவே, தொந்தரவற்ற உலகத்தில் இசை அமைதியைக் கொண்டுவருகிறது. இந்தச் சிறிய பாடலைப் பயிலத் தொடங்கும் எத்தனை குழந்தைகளுக்கு அதன் வரலாறு சொல்லப்பட்டிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

கர்நாடக இசையின் பிதாமகர்களில் ஒருவரான புரந்தரதாசருடன் ஆற்றின் ஓரத்தில் உள்ள மண்டபம் ஒன்றுக்கும் தொடர்பு இருக்கிறது. அது புரந்தர மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது. நதிக்கரையிலேயே கல் தூண்களைக் கொண்டு உயரம் குறைவான கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் இது.

இங்குள்ள தூண்களில் ஒன்றில் புரந்தரதாசரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இங்கே புரந்தரதாசர் தங்கித் தனது பாடல்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னும் மக்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ள இந்த மண்டபத்தின் அருகிலுள்ள விட்டல ஆலயமோ சிதைவுகளின் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.

வெள்ளப் பெருக்கின்போது, மண்டபத்துக்குள் புகும் நீர், புரந்தரதாசரையும் தழுவிச் செல்லும். அவர் இங்கே படைத்த தலைசிறந்த கீர்த்தனைகள் எவ்வளவு என்பதைச் சொர்க்கம் மட்டுமே அறியும். அந்த இடம் முழுவதிலும் ஒரு மோனம் பரவியிருந்தது. அது நம்மைப் பாடச் சொல்கிறது.

- வி. ஸ்ரீராம் ‘தி இந்து’ ஆங்கிலம் | (தமிழில் : ஷங்கர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x