Published : 05 Dec 2018 07:28 PM
Last Updated : 05 Dec 2018 07:28 PM

தவறு செய்வதில் தவறில்லை!

‘தவறிழைப்பது மனித இயல்பு; தவறை மன்னிப்பது தெய்விக சுபாவம்’ என்று தன்னுடைய கவிதை ஒன்றில் எழுதியவர் ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப். அவருடைய கூற்று இன்று நம்மிடையே சகஜமாகப் புழங்குகிறது. தவறு செய்வது சகஜம்தான்.

எல்லோருமே ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தவறு செய்துவிடுகிறோம். இப்படி நேர்ந்துவிடும் தவறுகளில் இரண்டு ரகம் உண்டு. முதலாவது, வெறுமனே ‘தவறு’. இரண்டாவது வகையறாவுக்குப் பெயர் ‘தவறு பிளஸ்’. முதல் விதமான தவறு எந்தப் படிப்பினையும் கற்றுத் தராது. ஆனால், ’தவறு பிளஸ்’ ஏகப்பட்ட விஷயங்களை நமக்கு அளித்துவிட்டுச் செல்லும். ஆரம்பத்தில் அது வெறும் தவறாகவே தோன்றினாலும் கடைசியில் அனுபவ மூட்டையாக நிறைவடையும்.

ஒருவர் தவறிழைக்கும்போது இரண்டு விதமான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். ஒன்று, தன்னுடைய தவறை எண்ணி அவர் வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படலாம். இதன் மூலம் அவர் மன அழுத்தத்துக்கு ஆட்படுவார். நாளடைவில் எதையும் துணிந்து செய்யும் தன்னம்பிக்கையை இழந்துவிடுவார். தவறிழைப்பதால் உண்டாகும் எதிர்மறையான விளைவு இது.

அசாதாரணன் ஆக!

இதுதவிர, தவறுக்கு நேர்மறை முகமும் இருக்கவே செய்கிறது.  தன்னைத்தானே சுயவிமர்சனத்துக்கும் மறுபரிசீலனைக்கும் உள்ளாக்குவதற்கான வாய்ப்பு அது. இந்தக் கோணத்தில் நாம் செய்யும் தப்பை அணுகினால் அவை ‘தவறு பிளஸ்’ ஆக உருமாறும். இதன் மூலம் நம்முடைய மனத்தை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும்.

அந்தக் கணத்தில் இயற்கை வழங்கிய கொடையாக நம்முடைய தவறே மாறும். படைப்பாற்றலையும் சிந்தனைத் திறனையும் பட்டை தீட்ட இத்தகைய தவறுகள் உந்தித்தள்ளும். உறைந்திருக்கும் மனத்தைத் தட்டியெழுப்பும். சாதாரணனை அசாதாரணன் ஆக உருமாற்றக்கூடியவை தவறுகளே!

ஜெர்மானிய உளவியலாளர் ஆல்பிரெட் ஆட்லர் சொன்னதுபோல, “மனிதர்களுக்கு வாய்க்கப்பெற்ற அற்புதமான குணாம்சங்களில் ஒன்று குறையை நிறையாக மாற்றுவதே”. ஆனால், இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்பதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி.

அதற்குப் பதில், ஒரு தவறைச் செய்த பிறகு அதனால் விளையக்கூடிய எதிர்மறை எண்ணங்களில் சிக்கிக்கொள்ளாமல், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவர் கற்றுக்கொண்டால் அதுவே அற்புதங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பாக அமையும்.

திறக்கும் ஞானத்தின் கதவு

இத்தகைய நிலையில்தாம் மறுபரிசீலனை செய்வதற்கான சூழல் உருவாகும். தனக்கு என்ன நேர்ந்தது, எங்கே சறுக்கினோம் என்பதை மனம் அலசி ஆராயத் தொடங்கும். முதல் முயற்சியில் தவறவிட்டதை இரண்டாவது முயற்சியில் பிடித்துவிடலாம் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனை உதிக்கும். அதன் தொடர்ச்சியாக ஞானத்தின் கதவு திறக்கும்.

தீர்மானிக்கும் திறனின் போதாமையினாலேதான் தவறு நேர்ந்துவிடுகிறது. நேர்மறையான மனப்பாங்கு இருக்கும்போது நாம் செய்த தவறுகளே அதற்கான காரணத்தையும் கண்டறிய நம்மை உந்தித்தள்ளும். ஆக, மறைமுகமாக வெற்றியை நோக்கிய உங்களுடைய பயணத்தில் ஏணிப்படியாக உங்களுடைய தவறுகளே உருமாறும்.

அதற்குத் தேவை, உங்களுடைய தவறுகளை நீங்கள் ஒருபோதும் முற்றுப்புள்ளியாகப் பாவித்துவிடக் கூடாது. அவை ‘கமா’ மட்டுமே. ஒரே தவறைப் பத்து முறை செய்தாலும் அதற்கு ‘கமா’ போட்டுக்கொண்டே செல்லுங்கள். அந்தத் தவறு, ‘தவறு பிளஸ்’ ஆகும்வரை முற்றுப்புள்ளி இடாதீர்கள். நம்மிடம் நேர்மறைச் சிந்தனை இருக்கும்வரை எத்தகைய தவறும் சாதனையின் கதவைச் சாத்த முடியாது.

thavaru-2jpg100 

குரங்கொன்று

நீரில் உள்ள நிலவை

எட்டிப் பிடிக்க முயல்கிறது.

மரணம் அதை முந்தும்வரை

அது தன் முயற்சியைக் கைவிடாது.

கிளையை விட்டுவிட்டு

குளத்தின் ஆழத்தில் மறைந்து போனால்

முழு உலகமும் ஜொலிக்கும் தூய்மையில்

பளபளக்கும்.

- ஹகுயின்

- மௌலானா வஹிதுதின் கான் | தமிழில்: ம. சுசித்ரா

(Leading A Spiritual Life, Maulana Wahiduddin Khan, GoodWord Publications,
தொடர்புக்கு: 9790853944, 9600105558)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x