Published : 05 Dec 2018 07:27 PM
Last Updated : 05 Dec 2018 07:27 PM

இறைவனை எப்படி அழைப்பது?

சமீபத்தில் திவ்யதேசமான ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருந்தேன் அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, “இந்த தலத்தில் எத்தனையோ ஆழ்வார்கள் பெருமாளின் மீது பாடி அருளி இருக்கிறார்கள். எனக்கு அதில் ஒன்று கூட தெரியாது. அதனால் நான் கூப்பிட்டால் பெருமாள் காதில் அது விழுமோ விழாதோ தெரியலியே” என மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் உண்மையான உள்ளன்போடு கூடிய பக்தியை மட்டுமே. இந்த ஸ்லோகங்களையும், இந்த பாசுரங்களையும் சொன்னால் மட்டுமே நான் உனக்கு அனுக்ரஹம் செய்வேன் என்று என்றேனும், யாரிடமாவது தெய்வம் சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறோமா? ஆழ்வார்களின் பாசுரங்களைத் தெரிந்துகொண்டு பக்தியோடு இறைவனைக் கொண்டாடுவது மிகவும் நல்லதுதான்.

அவற்றைத் தெரியாதவர்கள் எளிதான இறை நாமங்களை கொண்டே இறைவனை அழைக்கலாமே? அவன் பக்த வத்சலன்..பக்தர்களின் மீது அலாதியான வாத்சல்யத்தையும், கருணையையும் காட்ட கூடியவன்…

திருமலையில் இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் எப்போதுமே ஒரு புன்னகை தவழும் முகத்தோடு தான் நம்மை வரவேற்பார். அவனது அந்த ஆனந்தமான நிலைக்குக் காரணம், அங்கே பக்தர்கள் இடைவிடாமல் எழுப்பும் “கோவிந்தா” எனும் கோஷம்தானோ என்னவோ? என் பக்தன் என்னை “கோவிந்தா” என்றே அழைக்கிறான்.

ஆஹா இந்த கோவிந்த கோஷம் கேட்பதற்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது என்று சந்தோஷத்தின் அருள் புன்னகையை சிந்துகிறான். ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் நின்றபடி நாம் எழுப்பும் கோவிந்த கோஷத்தை சந்தோஷமாக ரசித்தபடி, நமக்கு நிலையான ஆனந்தத்தை அள்ளி தந்து கொண்டேயிருக்கிறான் திருமலையப்பன்.

யானையின் குரல் கேட்ட பெருமாள்

கஜேந்திரன் எனும் யானையின் காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டு ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல, கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள் யானையின் காலை விடாமல் பிடித்துக்கொண்டே இருந்தது. தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றக் கூடியவர்கள் என எண்ணி கொண்டு யானை கூப்பிட்டது தன்னுடைய உறவினர்களையும் நண்பர்களையும் தான்.

ஆனால், யாராலும் தன்னை காப்பாற்ற முடியாது… தன்னை காப்பாற்ற கூடியவன் அந்த எம்பெருமான் ஒருவன் மட்டுமே என்பதை இறுதியாக, உறுதியாக நம்பிக் கடைசியாக இறைவனை “ஆதி மூலமே” என்று தான் கூப்பிட்டது.

ஆதி மூலம் என்கிற நாமத்தால் இறைவனை கஜேந்திரன் கூப்பிட்டதால், “ஆதி மூலமே” என்கிற நாமத்தை கேட்கும் போதெல்லாம் இந்த கஜேந்திரனின் சரித்திரம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. நமக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் “ஆதி மூலமே, அனாத ரக்‌ஷகா” என்று உள்ளம் உருக நாம் எம்பெருமானை நோக்கி அழைத்தால் நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து அவன் நம்மை காப்பான்.

கண்ணனின் இடுப்பில் தாம்புக்கயிறு

கண்ணனை பல திரு நாமங்கள் கொண்டு அழைப்போம். அதில் தாமோதரன் என்று கண்ணனை அழைப்பதற்கு ஒரு விசேஷமான அர்த்தம் இருக்கிறது. கண்ணன் செய்த குறும்புகளை ரசித்தபடியே, அவனது தாயான யசோதை, “நீ சிறிது நேரமாவது ஒரு இடத்தில் பொருந்தி உட்காரவோ நிற்கவோ செய்ய மாட்டாயா கண்ணா” எனக் கூறிக்கொண்டே ஒரு தாம்புக் கயிற்றை கொண்டு அவனது இடுப்பில் கட்டி விட்டாளாம்.

அந்தத் தாம்பு கயிற்றின் தழும்பை இன்றளவும் கூட அவனது இடுப்பில் நாம் பார்க்கலாம். தாமல் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள தாமோதரப் பெருமானின் விக்ரகத்தில் அந்த தாம்புக் கயிற்றின் அடையாளத்தைச் சில சமயங்களில் கண்கூடாகக் கண்டதாக பெரியவர்கள் கூறுவார்கள்.

‘தாமோதரா’ என்ற திரு நாமம் கொண்டு அவனை அழைக்கும் போதெல்லாம், யசோதையின் அன்புக்குக் கட்டுப்பட்டு அந்தத் தாம்பு கயிற்றுக்கு கட்டுண்டவன்போல இருந்தாயே என எண்ணிக்கொண்டே அவனை அந்த திரு நாமத்தைக் கொண்டு அழைக்கலாம்.  “தாம்பே கொண்டார்த்த தழும்பு” என்று முதல் திருவந்தாதியில் பொய்கையாழ்வார் சாதித்திருக்கிறார்.

ரத்னாகரன் என்ற கொள்ளையனாக இருந்து நாரதரால் ராம நாமத்தை சொல்ல சொல்லி கேட்டும், அந்த ராம நாமத்தை கூட சரி வர சொல்ல வராமல் “மரா மரா மரா” என்றே உச்சரித்து மரா என்ற சப்தமே ராம நாமமாக மாற, இறைவனின் பரிபூரண அருளுக்கு ராம நாமத்தால் பாத்திரமானவர் அன்றோ வால்மீகி… எதுவுமே தெரியவில்லையா? ராம நாமத்தையே இடைவிடாது சொல்லுவோம். இறைவனை நாம் உள்ளன்போடு அழைப்போம்.

- நளினி சம்பத்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x