Published : 11 Oct 2018 10:38 AM
Last Updated : 11 Oct 2018 10:38 AM

தெய்வத்தின் குரல்: பொது சேவையில் கவனிக்க வேண்டியது

அவர்களுக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டுவிட்டது? அவர்கள் வீட்டுப் பிள்ளை, பிரம்மசாரிப் பையன், வேலையிலிருக்கிறவன், என் பரோபகார உபதேசங்களைப் படித்துவிட்டு அதிலேயே ஓவராக ஈடுபட்டு விட்டானாம். தன் காரியம், வீட்டுக் காரியம் எதையும் கவனிப்பதில்லையாம். ஆபீஸ் காரியம்கூட சிரத்தையாகப் பண்ணுகிறானோ இல்லையோ என்று பயமாயிருக்கிறதாம். எப்போது பார்த்தாலும் பிடி அரிசி கலெக்‌ஷன், மாடுகளுக்காகக் காய்கறித் தோல் கலெக்‌ஷன், இப்படி ஒரு பக்கம் கலெக்‌ஷன், இன்னொரு பக்கம் டிஸ்ட்ரிப்யூஷன் ஆஸ்பத்திரியில் பிரசாத டிஸ்ட்ரிப்யூஷன் மாதிரி, என்றிப்படி ஓயாமல் ஒழியாமல் அலைந்து கொண்டிருக்கிறானாம்.

“தான் கட்டிக்கொண்ட துணியைக்கூடத் தோய்க்கிறதில்லை; இவள்தான் தோய்த்துப்போட வேண்டியிருக்கு” என்று அந்த மனுஷர் புகார் செய்தார்.

பெற்ற மனம்

உடனே அவர் சார்பில் அந்த அம்மாள் பரிந்துகொண்டு, “வீட்டுக்கு ஒரு சாமான், காய்கறி பார்த்து வாங்கிப் போடுகிறதில்லை. சொன்னால்கூடக் காதில் போட்டுக்கொள்வதில்லை இத்தனை வயசுக்கு இவரேதான் பண்ணும்படி இருக்கிறது” என்று சொன்னாள். “ஊர் வெயில் மழை எல்லாம் அவன் மேலேதான். உடம்பு வீணாய்ப் போயிடுத்து. கையை விட்டுச் செலவும் நிறையப் பண்ணுகிறான். நாங்கள் கேட்கிறோமென்பதால் எரிச்சல், கோபம். ஏதோ கொஞ்சம் அகத்தில் தலைகாட்டுவதையும் நிறுத்திவிடப் போகிறானே என்று முடிந்த மட்டும் நாங்களும் வாயைத் திறப்பதில்லை. இருந்தாலும் மனுஷர்கள்தானே? சொல்லாமலேயும் இருக்க முடியவில்லை. நீங்கள்தான் அவனுக்கு நல்ல புத்தி வரப்பண்ணணும்” என்று சொன்னார்கள். பெற்ற மனசு!

நான் சொல்லும் நிபந்தனை

அவர்கள் அப்படிப் பிரார்த்தனை பண்ணிக்கொண்ட போதிலும், “இந்தக் கஷ்டம் உண்டாக நீதானே ஜவாப்தாரி? நீதான் இதை சரி பண்ணணும்”என்று அவர்கள் இடித்துக் காட்டினதாகவே நான் நினைத்துக்கொள்கிறேன். ஆனாலும் இப்போதுதான் என்னைப் பார்க்க வருகிறவர்களும், அட்வைஸ் கேட்கிறவர்களும் ஜாஸ்தியாகிக்கொண்டு வருகிறார்கள். அதனால் இனிமேல் பிரசங்கம் பண்ணாவிட்டாலும், என்னிடம் வருகிறவர்களிடம் பேசுகிறபோது, நல்லதைச் சொல்கிறபோது, ஒவ்வொருவனும் பொதுத்தொண்டு ஏதேனும் அத்யாவசியமாகப் பண்ணித்தானாக வேண்டும் என்று சொல்லும்போதே, ‘தன் கார்யம், குடும்பக் கடமைகளைக் கொஞ்சங்கூட விடாமல்’ என்றும் போடவேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்பாடு இது சமயத்தில் நினைவு வந்து சொல்வேனோ மாட்டேனோ, அந்த [பரோபகார] சப்ஜெக்டே என்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்னவோ, எப்படியானாலும், இன்றைக்கேனும் அந்தத் தாயார் தகப்பனார் படுகிற கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படிச் சொல்கிற ஞானம் எனக்கு உண்டாயிருக்கிறது.

“தான் அவிழ்த்துப்போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்; வயசுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்” என்று விட்டு விட்டு ஒருத்தன் சோசியல் சர்வீஸுக்குக் கிளம்பணும் என்று நான் நினைத்ததேயில்லை. நினைக்காவிட்டாலும், இதை வாய்விட்டு நான் சொல்லாதது தப்புத்தான். இதனால், இன்றைக்கு இங்கே வந்து போனவர்கள் மாதிரி இன்னும் எத்தனை பேர் வீட்டில் அனர்த்தத்தை உண்டாக்கியிருக்கிறேனோ? எல்லாருக்கும் என்னிடத்தில் வந்து சொல்லிக்கொள்ள முடியுமா? “சொல்லிக்கொள்வதே ‘பெரியவா’ மேலே குறை சொல்கிற மாதிரித்தானே ஆகும்? அப்படிப் பண்ணலாமா?” என்றே பலர், பாவம், வாயை மூடிக்கொண்டு என்னால் ஏற்பட்ட கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.

நாம் மறக்கக் கூடாதது

இன்றைக்கு வந்தவர்கள் எனக்கு என்ன உபதேசம் பண்ணியிருக்கிறார்கள்? தன் சமாசாரங்களில் ஒருத்தன் அதிகமாக ஈடுபட்டுப் பொதுக் காரியங்களைக் கவனிக்காமலிருப்பதுதான் ‘ஜெனரல் ரூல்’ என்றாலும், எதிர்த்திசையில் சிலர் அத்தியாவசியமான சொந்தக் காரியம், கடமைகளையும் விட்டு விட்டுப் பொதுக் காரியம் என்று பறந்துகொண்டு, வீட்டு மனுஷர்களுக்கு சிரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக் கூடாது. அதனால், “சொந்தக் காரியம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் சமுத்திர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் காரியங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது” என்று நான் அட்வைஸ் பண்ணும்போதே, அதை திட்டவட்டமாக்கி, “அதற்காக, அத்யாவசியமான சொந்த வேலைகளை, அகத்துக் கடமைகளை ஒருநாளும் விடக் கூடாது” என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x