Last Updated : 11 Oct, 2018 10:16 AM

 

Published : 11 Oct 2018 10:16 AM
Last Updated : 11 Oct 2018 10:16 AM

விவிலிய மாந்தர்கள் 6: மன்னிப்பை கிரீடமாய் அணிந்தவர்!

பொறுமை ஒரு விலைமதிக்க முடியாத அணிகலன். அதை அணிந்துகொண்டு தன் உழைப்பாலும் கடவுளின் மீதான விசுவாசத்தைக் கைவிடாமலும் வாழ்வில் உயர்ந்துகாட்டிய உத்தமர் யோசேப்பு. அண்ணன்களால் வெறுக்கப்பட்டு, உடைமையாக விற்கப்பட்டவர். அதற்காக அவர் அண்ணன்களை சபிக்கவில்லை.

எகிப்து தேசத்தில் மாமன்னன் பாரவோனின் முதன்மை அதிகாரியாக இருந்த போத்திபார், யோசேப்பை விலை கொடுத்து வாங்கினான். அந்த விற்பனையை மதித்து, தன் எஜமானனுக்காக தனது 17 வயது முதல் 20 வயதுவரை மாடாய் உழைத்தார். அவரது உழைப்பைக் கண்ட போத்திபார், தன் அரண்மனையின் தலைமைப் பணியாளனாக யோசேப்பை நியமித்தான். இருபது வயது என்பது இளமையின் உச்சம். போத்திபாரின் மனைவி, யோசேப்பை அடைய முயன்றபோது துள்ளி விலகினார். ஆன்மிகப் பசியே அவருக்கு அதிகம் இருந்தது. தன் மீது போத்திபாரின் மனைவி அபாண்டமாக குற்றம் சாட்டியபோது யோசேப்பு கதறவும் இல்லை, கெஞ்சவும் இல்லை. கனவுகளுக்கு விளக்கம் தரும் அபூர்வ அருள் அடையாளத்தைத் தனக்குக் கொடுத்த கடவுள் தன்னை வழிநடத்துவார் என்று உறுதியாக நம்பிச் சிறைக்குச் சென்றார்.

மதுக்குவளை ஏந்தியவன் மறந்தான்

சிறையிலும் தனது உழைப்பைத் தொடர்ந்தார் யோசேப்பு. அவரது திறனைக் கண்ட சிறைச்சாலை அதிகாரி, யோசேப்பு நல்லவன் என்பதைக் கண்டு எல்லாக் கைதிகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவனுக்குக் கொடுத்தார். அப்போது கடவுள் யோசேப்புவுக்கான விடுதலையின் சாவியைக் கொடுக்கிறார். மாமன்னனுக்கு பிரத்யேக மதுக்குவளை ஏந்துபவனும் அவருக்கு ரொட்டி சுடுகிறவனும் அவனது கோபத்தைச் சம்பாதித்துக்கொண்டு சிறையில் வாடியபோது அவர்கள் இருவரும் கண்ட கனவுகளுக்கு யோசேப்பு சொன்ன விளக்கம் அப்படியே பலித்தது. ஆனால் மதுக்குவளை ஏந்துகிறவன், யோசேப்பைக் குறித்து மன்னனிடம் எடுத்துக்கூறி விடுதலைக்கு உதவுவதாக வாக்களித்துச் சென்றவன் திரும்பவும் யோசேப்பு கூறியதுபோலவே பணியில் சேர்ந்ததும் மறந்துபோனான். சிறையில் இரண்டு வருடங்கள் உருண்டோட யோசேப்பு பொறுமை காத்தார்.

மன்னனின் கனவுகள்

இந்தச் சமயத்தில் கடவுள் யோசேப்புக்கு கைகொடுத்தார். பாரவோன் மன்னன் இரண்டு கனவுகளைக் கண்டான். அவற்றின் பொருள் புரியாமல் தன் அவையில் உள்ள சான்றோர்களிடம் கேட்கிறான். அவர்களால் மன்னனின் கனவுகளை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அப்போது மதுக்குவளை ஏந்துகிறவனுக்குச் சிறையில் சந்தித்த யோசேப்பின் நினைவு வர, உடனே மன்னனிடம் கூறுகிறான். உடனடியாக யோசேப்பை அழைத்துவர உத்தரவிட்டான். யோசேப்பு விடுதலையானார். நம்பிக்கையுடன் மன்னன் அருகில் வந்தபோது, யோசேப்பின் முகத்தில் ஜொலித்த ஒளியைக் கண்டு, இவர் நிச்சயம் நம் கனவுகளுக்கு விளக்கம் தருவார் என்று நினைத்துக்கொண்டு தான் கண்ட கனவுகளைச் சொன்னான் மன்னன். “எனது முதல் கனவில் ஏழு கொழுத்த அழகிய பசுக்களைக் கண்டேன். பின்னர், எலும்பும் தோலுமாக மெலிந்துபோயிருந்த ஏழு பசுக்களைக் கண்டேன். இந்த மெலிந்த ஏழு பசுக்களும், கொழுத்த அந்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன. இரண்டாவது கனவு இன்னும் பயங்கரமாக இருந்தது. செழுமையாய் முற்றிப்போய் அறுவடைக்குத் தயாராக தலைகுனிந்திருந்த ஏழு தானியக் கதிர்களை ஒரே செடியில் கண்டேன். பின்னர் காய்ந்து போயிருந்த ஏழு தானியக் கதிர்களைக் கண்டேன். காய்ந்து போயிருந்த தானியக் கதிர்கள், அறுவடைக்குத் தயாராக இருந்த அந்த ஏழு பசுந்தானியக் கதிர்களை விழுங்கின.” என்று கவலையுடன் கூறினான்.

மன்னனுக்கு அடுத்து

கனவுகளைக் கேட்டபின் யோசேப்பு மன்னனிடம், “இந்த இரண்டு கனவுகளும் இந்த தேசம் எதிர்கொள்ளவிருக்கும் ஒரே விஷயத்தைத்தான் கூறுகின்றன. அந்த ஏழு கொழுத்தப் பசுக்கள், ஏழு செழுமையான பசுந்தானியக் கதிர்கள் ஆகிய இரண்டும், அடுத்துவரும் ஏழு ஆண்டுகள் எகிப்தில் விளைச்சலும் அறுவடையும் கொழிக்கும் என்பதைக் குறிக்கின்றன. ஆனால் அந்த ஏழு மெலிந்த பசுக்களும் ஏழு காய்ந்த தானியக் கதிர்களும் அதற்கு அடுத்து இந்த தேசம் எதிர்கொள்ளப்போகும் கடுமையான வறட்சியையும் அதனால் வரப்போகும் கொடும் பஞ்சத்தையும் குறிக்கின்றன. எனவே, விளைச்சல் கொழிக்கவிருக்கும் ஏழு ஆண்டுகளின் அறுவடையைச் சேமித்து வைக்கும் பொறுப்பை புத்தியுள்ள ஒரு நல்ல ஊழியனிடம் கொடுத்தால், உமது மக்கள் ஏழு ஆண்டுகள் பஞ்சத்தின்போது வாடமாட்டார்கள்” என்று ஆலோசனை கூறினார். யோசேப்பு கனவுகளுக்கு கொடுத்த விளக்கமும் ஆலோசனையும் மன்னனுக்குப் பிடித்துப்போனதால் அவனையே களஞ்சியத்தின் பொறுப்பாளர் ஆக்கினான். இந்தப் பதவி, அரசனுக்கு அடுத்த நிலையில் இருப்பதாகும்.

அண்ணன்களுக்கு மன்னிப்பு

யோசேப்பு கூறியதைப் போலவே, விளைச்சல் கொழித்த ஏழாம் ஆண்டுக்குப்பின் வந்த எட்டாம் வருடத்தில் உணவுப் பஞ்சம் தாக்கியது. எகிப்தைச் சுற்றியிருந்த எந்த நாடும் இந்தப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. யோசேப்பின் பெற்றோரும் அண்ணன்களும் வசித்துவந்த கானானிலும் கடும் பஞ்சம். எகிப்தில் தானியங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வாங்கிச்செல்ல யோசேப்பின் 10 அண்ணன்மார்களும் எகிப்துக்கு வருகிறார்கள். வந்து அவர்கள் முன்பாக மண்டியிட்டு வணங்குகிறார்கள். 30 வயதுக்காரராக ஆகிவிட்டிருந்த தங்களது தம்பி யோசேப்பின் அடையாளம் அவர்களுக்கு தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் களஞ்சியக் காப்பாளருக்கான விலைமதிப்புமிக்க ஆடையை யோசேப்பு ஒரு மன்னனுக்கு இணையாக அணிந்திருந்தார். ஆனால் வந்திருப்பது தனது அண்ணன்கள் என்பதை யோசேப்பு அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் கொந்தளிக்கும் பாசத்தையும் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டார்.

தனது அண்ணன்கள் இன்னமும் அற்பர்களாகத்தான் இருக்கிறார்களா என்பதை அறிய யோசேப்பு விரும்பினார். எனவே அவர்களிடம், “ நீங்கள் எகிப்தை வேவு பார்க்க வந்த ஒற்றர்கள்” என்கிறார். ஆனால் அண்ணன்களோ, அழுது கதறி “அய்யா.. நாங்கள் ஒற்றர்கள் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர். ஆனால், ஒரு தம்பி தொலைந்து போய்விட்டான். கடைசி தம்பி, வீட்டில் எங்கள் அப்பாவோடு இருக்கிறான்|” என்று யென்மீனைப் பற்றிக் கூறினார்கள். இதை நம்பாததுபோல் காட்டிக்கொண்ட யோசேப்பு, தனது அண்ணன்மார்களுக்கு பல்வேறு சோதனைகள் வைத்ததோடு தனது தம்பி, யென்மீனையும் அழைத்து வரச் செய்தார். அவர் வைத்த எல்லா சோதனைகளின் முடிவிலும், மூத்த அண்ணன் யூதா உட்பட அவர்கள் அனைவரும் தற்போது மனந்திருந்திப் பெற்றோருக்கு ஏற்ற பிள்ளைகளாக மாறியிருப்பதை அறிந்ததும் யோசேப்புவால் தன் பாச உணர்ச்சிகளுக்கு அணைபோட முடியவில்லை.

தனது எல்லா ஊழியர்களையும் தனது அறையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு கதறி அழத் தொடங்கினார். இந்த தேசத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் இந்த அதிகாரி ஏன் இப்படி அழுகிறார் என்று அண்ணன்கள் ஆச்சரியப்பட்டார்கள். அப்போது யோசேப்பு “ என்னைத் தெரியவில்லையா; உங்களின் தம்பி யோசேப்பு” என்று கூறி ஒவ்வொருவராகக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார். தனது தம்பியை வாரி அணைத்துகொண்டார். மன்னிப்பு என்னும் மகத்தான கிரீடத்தை அணிந்திருந்த யோசேப்பு, தனது அண்ணன்களை அனுப்பி, குடும்பம் மொத்தத்தையும் எகிப்துக்கு அழைத்துவரச் செய்தார். அதன்பின் யாக்கோபு தன் முழுக்குடும்பத்துடனும் எகிப்தில் குடியேறினார். இறந்துவிட்டதாக நினைத்த தன் செல்லமகன் நாட்டின் அதிகாரியாக இருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். எகிப்தில் இவர்கள் அனைவரும் பல்கிப் பெருகினார்கள். எகிப்தியர்களால் இவர்கள் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டார்கள். ஏனென்றால் கடவுள், யோசேப்பின் தந்தையாகிய யாக்கோபின் பெயரை கடவுள் இஸ்ரவேல் என்று மாற்றியிருந்தார்.

(யோசேப்பின் கதை முற்றும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x