Published : 11 Oct 2018 09:52 AM
Last Updated : 11 Oct 2018 09:52 AM

ஒரு கொத்துப் புல்

பூமியிலிருந்து சுமார் 12 ஆயிரத்து 500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட் என்ற ஸ்தலத்திலிருந்து 14 கிலோமீட்டர் மட்டக் குதிரையின் மேல் ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந்தது . அந்த அனுபவ அவஸ்தையில் உடம்பும் மனசும் ஒரு வித்யாசமான வெளியில் பரபரத்துக் கொண்டிருந்தது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களுக்குக் குதிரை சவாரியை நினைத்துக் கொண்டபோது திடீர் திடீரென்று சிரிப்பு வந்தது. முன்னும் பின்னுமாகவும் பக்க வாட்டிலும் எதிர்பாராத விதமாக ஆடிக் குலுங்கிக்கொண்டு வந்த அந்த வித்யாசமான பயணம் எங்களுக்குள் ஒரு குழந்தையின் சந்தோஷத்தை மலர்த்திக் கொண்டிருந்தது.

“இருந்தாலும் அந்தக் குதிரையை நெனைச்சா ரொம்ப பரிதாபமா இருக்கு அப்பா” என்றாள் மகள்.

“ஆமாம்….குதிரைகளுக்குக் கூட, ஏன் எல்லா ஜீவராசிகளுக்குமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்குன்னு நினைக்கிறேன். ஒவ்வொன்றும் அது பொறக்கற இடத்தைப் பொறுத்துதான் வாழ்க்கை சுகமாகவோ துக்ககரமாகவோ அமைகிறது” என்றேன்.

“நினைத்துக் கொண்டால் நம்ப முடியாமல் இருக்கிறது. பார்ப்பதற்கு குட்டையாக பெரிய ஆகிருதி இல்லாமல் இருக்கிற குதிரை நம்ப பாரத்தை அனாயசமாகத் தூக்கிக் கொண்டு கல்லும் கரடும் வழுக்கலுமாக இருக்கிற மேட்டுப் பாதையில் ஒரு இடத்தில்கூட கால் இடறாமல் ஒரு பொறுப்புள்ள சிநேகிதன் போல் உச்சிவரை ஏற்றி வந்து பத்திரமாக இறக்கி விடுகிறதே. அந்த ஜீவனுக்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன் படவேண்டும்!” என்றாள் மகள் உணர்ச்சிவசப்பட்டு.

“நிச்சயமாக” என்றேன்.

எங்களுக்கு எதிரே ஒரு கிழவர் தனியாக உட்கார்ந்து கொண்டு டீ அருந்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று அந்தக் கிழவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மூச்சுவிட முடியாமல் வாயை அகலமாகத் திறந்துகொண்டு ஏதோ ஒருவிதமாகக் குரல் எழுப்பினார். நான் பதறிப்போய் எழுந்து நின்றேன். அங்கே சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த பணியாள் அவர் அவஸ்தைப்படுவதைக் கண்டவுடன் ஓடிவந்து தாங்கிப் பிடித்தான்.

ஐந்து நிமிஷத்துக்குள் ஒரு டாக்டர் கையில் மருத்துவ சாதனங்களுடன் முதல் உதவிக்கு ஓடிவந்தார். நாடித்துடிப்பையும் இதயத்தையும் சோதனை செய்துவிட்டு கிழவரின் நரம்பில் ஊசிபோட்டார். ஆக்ஸிஜன் சாதனத்தை இணைத்தார். இப்போது கிழவர் மெதுவாக சகஜ நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தக் கிழவரின் உடன் வந்திருந்த வயதான மனைவி அங்கே வந்து சேர்ந்தாள். அவள் அற்பசங்கைக்குப் போயிருந்தாள் என்று தெரிந்தது. அவளுக்கு உடம்பெல்லாம் பதறியது.

கிழவருக்கு வைத்தியம் செய்து முடித்துவிட்டு அந்த டாக்டர் எங்கள் மேஜைக்கு அருகில் கடந்துபோய்க் கொண்டிருந்தார். நான் தேங்க் யூ டாக்டர் என்றேன்.

“ஸார் நீங்களும் வயதானவரா இருக்கீங்க…எதுக்கும் உங்களையும் சோதனை பண்ணிப் பாத்துடறேன்” என்றார்.

“அட்டா…உங்களுக்கு ஆஸ்துமா உண்டா? உங்க நுரையீரல்ல காத்து சராசரி அளவுக்கும் கம்மியாதா இப்போ போய்க்கிட்டிருக்கும். மூச்சுத் திணறல் எப்ப வேணா வரலாம். என்னுடைய மருத்துவ அறை இதே வளாகத்திலே தான் இருக்கு. உடனே அங்கே வந்துடுங்க”.

அன்று இரவு முழுவதும் நான் மருத்துவக் கட்டிலில் மூக்கில் பிளாஸ்டிக் முகமூடியைப் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.

எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. ஊசி மருந்தின் வேலையாக இருக்கலாம். இருதயம் லப்டப் என்று குதிரை ஓட்டிக்கொண்டிருந்தது. எனக்கு எங்களை ஏற்றிக்கொண்டு வந்த குதிரையின் ஞாபகம் வந்தது. அந்த மாதிரிப் பிராணிகள் பெரிய ஆத்மாக்களாக இருக்க வேண்டும்.

l l l

அடுத்த நாள் காலை அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இன்னும் தூங்கிக் கொண்டிருந்த என் மனைவியையும் மகளையும் எழுப்பிக் கேதார்நாதரை தரிசனம் செய்வதற்கு அவசரப்படுத்தினேன். தரிசனம் முடிந்த கையோடு கீழே இறங்க வேண்டும்.

கேதார்நாத்துக்குப் போய் சிவனின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டுமென்று எங்கள் லட்சியம் பூர்த்தியாயிற்று.

நாங்கள் மீண்டும் குதிரை ஏறினோம். எங்களை ஏற்றிவந்த அதே குதிரைகள் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. ஏறுவதைவிட இறங்குவதுதான் கடினமானதென்றும் குதிரைகளுக்கு அதிக எச்சரிக்கை தேவை இருக்குமென்றும் அங்கொருவர் சொன்னார்.

குதிரை எச்சரிக்கையுடன்தான் இறங்கிக்கொண்டிருந்தது. பாதி மலை இறங்கியபோது, எங்களுக்குக் கீழேயிருந்து சில தகவல்கள் வந்தன. இறங்கும் பாதைகளில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு கிடப்பதாகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியது.

குதிரைக்காரப் பையன் பத்திரமாகத்தான் குதிரையை வழிநடத்திச் சென்றான். கீழே அடிவாரத்தில் குதிரையை நிறுத்தி எங்களை இறக்கிவிட்டான். குதிரையோடு சேர்ந்து நாங்களும் பெருமூச்சு விட்டோம். இறங்கி மேலும் நடந்துவந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் பாறைகளின் ஓரமாக ஒரு கூட்டம் கூடி இருந்தது.

நாங்கள் பரபரப்புடன் நெருங்கிப் போய் என்னவென்று பார்த்தோம். பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றுப் போனோம். ஒரு குதிரையின் பின்னங்கால்களில் ஒரு பாறை விழுந்து கிடந்தது. அதன் நுரையீரல் புடைத்துப் போய் முன்னங்கால்கள் வானைப் பார்த்துக்கொண்டிருந்தன.

மல்லாந்து விழுந்து கிடந்த அந்தக் குதிரையின் வாயில் இன்னும் தின்னப்படாமல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கொத்துப்புல் எனக்கு வாழ்க்கையின் தீராத பற்றைச் சொல்லிக்கொண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x