Last Updated : 20 Sep, 2018 11:21 AM

 

Published : 20 Sep 2018 11:21 AM
Last Updated : 20 Sep 2018 11:21 AM

புரட்டாசி மாதம் விரத வழிபாடு!

வழிபாடுகள், விரதங்கள் எல்லாம் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் ஐதீகம்தான். ஆனால், குறிப்பிட்ட நாளிலோ மாதத்திலோ தெய்வத்தை மனதில் நிறுத்தி விரதங்கள் மேற்கொள்ளும்போது  உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் கிடைப்பதோ அருமருந்து. ஏராளமான விரத வழிபாடுகள் நடைமுறையில் இருந்தாலும், புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு  தனித்துவமிக்கது. 

புரட்டாசி விரத மாதத்தை ‘பெருமாள் மாதம்’ என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. இந்த மாதம் விஷ்ணுவுக்குரிய வழிபாடுகளையும் விரதங்களையும் மேற்கொள்ள உகந்தது. இந்த மாதம் முழுவதுமே அனைத்து பெருமாள் கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்கள், 108 திவ்ய தேசங்களிலும் புரட்டாசி சனி வழிபாடு வெகு விமரிசையாகக் களைகட்டும்.

பொதுவாக இந்துக்கள் ஆண்டு முழுவதுமே சனிக்கிழமைகளில் விரத வழிப்பாடு மேற்கொள்வது உண்டு. அப்படி ஆண்டு முழுவதும் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பார்கள். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என அழைக்கிறார்கள். 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருப்பதியில் இந்த மாதத்தில்தான் பிரம்மோற்சவம் நடைபெறும். இதேபோல பிற பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். இந்தக் காலகட்டம் பெருமாளுக்கு காணிக்கை, நேர்த்திக் கடன்களை செலுத்த உகந்தது. குறிப்பாக முடி இறக்குதலை நிறைவேற்ற ஏற்ற மாதம் புரட்டாசிதான்.

கோயில்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் புரட்டாசி விரத வழிபாடு சனிக்கிழமைகளில் முதன்மையாக இருக்கும். புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம். புரட்டாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது.

புரட்டாசி சனிக்கிழமை அன்று கையில் உண்டியல் ஏந்தி “வெங்கட் ராமா கோவிந்தா... நாராயணா...” என கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானத்தை பெறும் வழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது. உண்டியலில் காசோ பணமோ கிடைத்தால், அதை திருப்பதி ஏழுமலையானுக்கோ அல்லது அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திலோ காணிக்கையாகச் செலுத்திவிடுவார்கள். தானமாகக் கிடைத்த அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து, பெருமாளுக்கு அதை படைத்து அதைப் பகிர்ந்து உண்பதும் இந்த மாத விரத வழிபாட்டில் பிரசித்திப் பெற்றது.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அறுசுவை உணவுடன் வடை, பாயாசம், சர்க்கரை பொங்கலை படைத்து எம்பெருமானை வழிபடுவர். அப்போது ‘கோவிந்தா.... கோவிந்தா...’ என குடும்ப உறுப்பினர்கள் முழுங்கி பெருமாளை வணங்குவார்கள். மாலை வேளையில் அருகே உள்ள பெருமாள் அல்லது ஆஞ்சநேயர் ஆலயங்களுக்குச் சென்று மனம் உருக வழிபாடு செய்வார்கள்.

பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. ஆகவேதான் புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும். இந்த மாதத்தின் வளர்பிறையில்தான் நவராத்திரி எனப்படும் தசராவையும் கொண்டாடுகிறோம் என்பதும் புரட்டாசிக்குரிய சிறப்புதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x