Last Updated : 20 Sep, 2018 11:20 AM

 

Published : 20 Sep 2018 11:20 AM
Last Updated : 20 Sep 2018 11:20 AM

ஆன்மா என்னும் புத்தகம் 20: வெற்றியின் பின்னால் ஓடத் தேவையில்லை

உலகின் முன்னணி தலைமைப்பண்பு நிபுணர்களில் ஒருவராக அறியப்படுபவர் ராபின் ஷர்மா. 1998-ம் ஆண்டு வெளியான இவரது ‘தனது பொக்கிஷத்தை விற்ற துறவி’ (The Monk Who Sold His Ferrari) புத்தகம், இன்றளவும் தன்னிறைவான வாழ்க்கைக்கான வழிகாட்டியாகத் திகழ்கிறது. இன்றைய அவசரகதியான வாழ்க்கைமுறையில் இலக்குகளை அடைவதற்காகவும் பணத்தைத் தேடியும் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

இதனால், நம்மில் பெரும்பாலானோர் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, தன்னிறைவுடன் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்குகூட முயல்வதில்லை. அப்படி ஓய்வில்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப் பவர்களை மனத்தில்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

ஜூலியன் மேன்டில் என்ற வெற்றிகரமான வழக்கறிஞரின் ஆன்மிகத் தேடலின் பயணக்கதையாக இந்தப் புத்தகம் விரிகிறது. அந்த வழக்கறிஞரிடம் வெற்றி, அளவற்ற பணம், பெரிய வீடு, தனி விமானம், பலரின் கனவு வாகனமான சிவப்பு வண்ண ஃபெராரி என அனைத்தும் இருக்கின்றன. வெற்றி, வெற்றி என வெற்றிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் அவரின் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

கடிவாளமில்லாத வாழ்க்கைமுறையில் சிக்கித்த விக்கும் ஜூலியனுக்கு ஒருநாள் நீதிமன்றத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு விழுந்துவிடுகிறார். அதுவரை, பணிவாழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த அவர், ஆரோக்கியத்தில் தோல்வியடைந்துவிட்டதை முதன்முறையாக உணர்கிறார். 53 வயதிலேயே 70 வயது தோற்றத்தைப் பெற்றுவிடுகிகறார் அவர். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவர், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவரையும் சந்திக்கமறுத்துவிடுகிறார்.

அதற்குப் பிறகு, சில நாட்களில் தன் பணிவாழ்க்கையை விட்டு விலகி, தன் சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்றுவிடுகிறார் அவர். ஜூலியனின் இந்தக் கதையை அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞரான ஜான் விளக்குகிறார். மூன்று ஆண்டுகள் ஓடிவிட்ட பிறகும், ஜூலியனிடமிருந்து யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஒருநாள், திடீரென்று ஜானை அவரது அலுவலகத்தில் சந்திக்க வருகிறார் ஜூலியன்.

ஆனால், முப்பது வயதுத் தோற்றத்துடன் தன்னை சந்திக்க வந்திருக்கும் ஜூலியனை முதலில் ஜானால் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. ஆரோக்கியமான, ஆன்மிகத் தெளிவுடன் திரும்பிவந்திருக்கும் ஜூலியனைப் பார்த்து ஜான் ஆச்சர்யமடைகிறார். அவருக்குத் தன் ஆன்மிகப் பயணத்தை விளக்குகிறார் ஜூலியன்.

ஏழு நற்பண்புகள்

தன் சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு, வாழ்க்கையில் நிம்மதியைத் தேடி இந்தியாவுக்குப் பயணம் சென்றதாகச் சொல்கிறார் ஜூலியன். அங்கே, இமயமலையில் வாழும் துறவிகளிடம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, தன்னிறைவுடன் வாழ்வதற்கான ரகசியங்களைக் கற்றுகொண்டதாகச் சொல்கிறார் அவர். தான் கற்றுவந்த வாழ்வின் ரகசியங்களை ஜானுடன் பகிர்ந்துகொள்கிறார் அவர். அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்கும்படி ஜானிடம் கேட்டுக் கொள்கிறார் அவர்.

உள்ளார்ந்த அமைதி, மகிழ்ச்சி, ஆன்மிக நிறைவுடன் வாழ்வதற்கு ஏழு நற்பண்புகள் தேவை என்று விளக்குகிறார் ஜூலியன். மனம், நோக்கம், நிலையான மேம்பாடு, ஒழுக்கம், நேரம், சேவை, இக்கணத்தை ஏற்றுக்கொள்வது ஆகிய ஏழு நற்பண்புகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார் அவர். இந்தப் பண்புகளை வளர்த்துகொள்ளும்போது தன்னிறைவான வாழ்க்கை சாத்தியப்படும் என்று அவர் விளக்குகிறார்.

தன்னை அறிதலுக்கான உத்திகள்

மனதை ஒருநிலைப் படுத்துவதற்கான பல்வேறு எளிமையான உத்திகளை இந்தப் புத்தகம் விளக்குகிறது. ரோஜாவின் இதயத்தைக் கவனிப்பது, ஓடும் நதியைக் கவனிப்பது, கனவுப் புத்தகம் எழுதுவது, எந்தப் பயிற்சியையும் 21 நாட்கள் செய்து அதைப் பழக்கமாக மாற்றிக்கொள்வது என்பது போன்ற பல்வேறு உத்திகளை யதார்த்தமான முறையில் இந்தப் புத்தகம் விளக்குகிறது.

தன்னை அறிந்துகொள்வதுதான் அமைதியான வாழ்க்கைக்கான முதல் வழி என்பதை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. “சாதனைகள் புரிவதற்காக மகிழ்ச்சியைத் தொலைக்கத் தேவையில்லை. இந்தக் கணத்தில் வாழ்வதிலேயே வாழ்வின் ரகசியம் அடங்கியிருக்கிறது” என்ற கருத்தை இந்தப் புத்தகம் உதாரணங்களுடன் பதிவுசெய்கிறது.

ராபின் ஷர்மா

இவர் கனடாவின் டொராண்டோ நகரில் 1965-ம் ஆண்டு பிறந்தார். டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த இவர், தன் பணிவாழ்க்கையை நிறுவன விவகாரங்களுக்கான வழக்கறிஞராகத் தொடங்கினார்.

பின்னர், வாழ்வின் அமைதி, மகிழ்ச்சிக்கான தேடல் பயணத்தில் வழக்கறிஞர் பணியை விட்டுவிலகி, ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக, தலைமைப்பண்புத்துவ நிபுணராகத் தன் பாதையை அமைத்துகொண்டார். தனிநபர் வளர்ச்சிக்கான பல்வேறு வெற்றிகரமான வழிமுறைகளை தன் புத்தகங்களில் முன்வைத்திருக்கிறார்.

இவரது புத்தகங்கள் 96க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கின்றன. ‘யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்’ (Who Will Cry When you Die?), ‘பெருவாழ்வு’ (Megaliving), ‘ரகசியக் கடிதங்கள்’ (The Secret Letters), ‘The Leader Who had no Title’, ‘The Greatness Guide’ போன்றவை இவரது பிரபலமான படைப்புகளில் சில.


கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x