Published : 20 Sep 2018 11:20 AM
Last Updated : 20 Sep 2018 11:20 AM

தெய்வத்தின் குரல்: இயற்கை நெறி மனநெறி

மனுஷ்யனின் மனநெறி நன்றாயிருந்து விட்டால் அதன் சக்தி சாமானியமானதில்லை. அது இவனுடைய ‘நேச்சர்’ என்னும் இந்திரிய வேகங்களை அடக்கியாள்வது மட்டுமில்லை; வெளி ‘நேச்சரை’யே அடக்கியாண்டு விடுகிறது. பிராமணன் அத்யயன ஆசாரத்தை அனுஷ்டித்தால் அதற்காகவே மும்மாரிகளில் ஒன்று பெய்கிறது என்பது தமிழ் மூதுரை; வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை.

இப்படியே பதிவிரதைகளின் கற்பு நெறியினால் இயற்கை இன்னொரு மழையைப் பெய்கிறது என்று சொல்கிறது: மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை.

இதையே இப்போது பகுத்தறிவாளர்களும் கொண்டாடும் திருக்குறளும் சொல்கிறது:

தெய்வம் தொழாள் கொழுநற்  றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

ராஜா நீதி நெறிப்படி ஆட்சி பண்ணுவதும் ஒரு மழையை வரவழைத்துவிடும் :

நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை

இதற்கு மறுதிசையில், இவர்கள் நெறி தப்பினால் இயற்கையும் கன்னா பின்னா என்று பண்ண ஆரம்பிக்கும்.

வள்ளுவரே சொல்கிறார்: ராஜா நீதிமுறை தப்பினால் பிராமணனும் தன் ஆசாரமான அத்யயனத்தை மறந்துவிடுவான் — அறுதொழிலோர் நூல் மறப்பர். ஒருத்தன் முறை தப்பினால் மற்றவர்களும் முறை தப்பிப் போய்விடுவார்களென்று எச்சரிக்கிறார். இப்படி மனுஷ்யனுக்கு மனுஷ்யன் மனநெறி கெட்டுப்போவதால் பாதகமான பலன் தொடர்ந்து போவது மட்டுமில்லை. ராஜா தன் ஆசாரத்தை விட்டால் பால் வளமும் குன்றிவிடும்: ஆ பயன் குன்றும் என்று ‘தெய்வப்புலவர்’ என்னும் திருவள்ளுவர் சொல்கிறார். இதற்குப் பகுத்தறிவு பதில் சொல்ல முடியாது.

மனநெறிக்கு அடங்கியவை

மாற்ற முடியாதவை என்கிற இயற்கைச் சக்திகளும் மனுஷ்யனின் மனநெறிக்கு அடங்கியவைதான்.

ஒரே ஈஸ்வரனின் தர்ம ஸ்வரூபந்தான் [வெளி] இயற்கையில் இருக்கிற மகத்தான ஒழுங்குக் கட்டுப்பாடு, மனுஷ்ய மனசின் தர்மக் கட்டுப்பாடு இரண்டாகவும் ஆகியிருப்பது. இதிலே மனுஷ்யன்தான் மனமறிந்து மனசின் தர்மத்தை உண்டாக்கிக்கொண்டு, அதில் ஈஸ்வர சாந்நித்யத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். அந்த திவ்ய சக்தியால்தான் [வெளி] இயற்கையும் இவன் கட்டியாள முடிவது.

நெறிதான் சூரியனை, சந்திரனை, வாயுவை, ஈர்ப்பு விசையை ஒழுங்கில் நிறுத்தி வைத்திருக்கிறது. ‘ஃபிசிக்ஸ்’ மட்டுமில்லை. மனசு நன்றாயிருந்தால்தான் இவை லோகானுகூலமாக நன்றாயிருக்கும். ஜனங்கள் மனம் கெட்டுப் போனால் இயற்கையிலும் உத்பாதங்கள் ஜாஸ்தியாகும் என்று ‘சரக ஸம்ஹிதை’ என்ற ஆயுர்வேத சாஸ்திரம் சொல்கிறது.

ஞான சம்பந்தர் செய்த அற்புதம்

நெறியில் சிறந்தவர்கள் என்னென்ன அற்புதங்கள் பண்ணினார்கள் என்று கதை புராணங்களில் எத்தனையோ பார்க்கிறோம். ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்கிற மாதிரியே ‘பாய் எனப் பாயும் அக்கினி’யைப் பற்றி கண்ணகி கதை சொல்கிறது. அதே மதுரையில் ஞானசம்பந்தரும் அவர் தங்கியிருந்த மடத்திற்கு வைக்கப்பட்ட நெருப்பு, வைத்தவர்களை ஆதரித்த பாண்டிய ராஜாவையே (இறுதியில் அவன் நல்வழிப்படுவதற்கு ஆரம்ப தண்டனையாக) தாக்கவேண்டும் என்று ஈஸ்வரனைப் பிரார்த்தித்தவுடன் அவனிடம் வெப்பு நோய் உருவில் போய்ச் சேர்ந்தது.

செயலும் பிரதிச் செயலும் சமசக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவுமிருக்கும் என்ற ‘நியூட்டன் லா’ எல்லாக் காரியங்களையும் பற்றின ‘கர்மா தியரி’யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை; எண்ணத்தின் பிரதிபலனையும், மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி ‘நேச்சுரல் ஃபோர்ஸஸ்’ மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.

Mental plane, metaphysical plane, physical plane [மன மட்டம், பௌதிகாதீதமான ஆத்மிய மட்டம், பௌதிக மட்டம்] மூன்றையும் கோத்து நம் மதத்தில் சொன்னதை physical plane-ல் [பெளதிக மட்டத்தில்] மட்டும் சொல்வதே நியூட்டன் லா. ‘ரியாக்ஷன் ஆப்போஸிட்’டானது [பிரதிச் செயல் எதிரிடையானது] என்று அவர் சொன்னது நல்லதற்கு எதிர் விளைவாகக் கெட்டதும், புண்யத்துக்குப் பிரதியாகப் பாபமும் உண்டாகும் என்று அர்த்தம் கொடுக்காது.

பின்னே ‘ஆப்போஸிட்’ என்று ஏன் சொன்னாரென்றால், ஒரு பந்தைச் சுவர் மேல் எறிந்தால் அது அதே விசையுடன் ‘ஆப்போஸிட் டைரக்ஷ’னில் [எதிர் திசையில்] திரும்பி வருகிறாற்போலத்தான் physical plane-ல் எல்லா ரியாக்ஷனும் இருப்பதாலேயே! நாம் செய்த நல்லது (புண்ணியம்) எப்படி வெளியிலே பரவுகிறதோ அப்படியே வெளியிலிருந்து நமக்கு நல்லது (புண்ணியம்) திரும்புகிறது; கெட்டதும் (பாவமும்) இப்படியே என்றுதான் அதற்கு அர்த்தம்.

ஆதிகாரணம் ஈஸ்வர சக்தி

வெறும் physical plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால் சூர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று சயன்டிஸ்டுகளே சொல்கி றார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக் கொண்டேயிருக்கிறது என்று சொல்லி, இதன் காரணத்தைப் பலவிதமாக யூகம் செய்கிறார்கள்.

ஆதி காரணம் ஈஸ்வர சக்திதான். அதுதான் இந்த பிரபஞ்ச தர்மத்துக்காக, லோகங்களின் நெறியான போக்குக்காகவும் வாழ்க்கைக்காகவும் சூர்யனில் குறையாத உஷ்ண சக்தியை ஊட்டிக் கொண்டேயிருக்கிறது. மனுஷ்ய மனநெறி, மனித வாழ்வின் ஒழுங்கு ஆகியனவும் அதே சக்தியுடைய தர்மத்துக்கு இன்னொரு ரூபம்தானாகையால், மனநெறியே இயற்கையையும் சாதகமாகவோ பாதகமாகவோ ஆக்குகிறது.

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் ‘பல ச்ருதி’யில் பகவானை நேச்சர் என்கிற ஜடப் பிரபஞ்ச தர்மம், மனுஷ்ய மனநெறியை உண்டாக்கும் மதாசார தர்மம் ஆகிய இரண்டுக்கும் மூலமாக ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறது.

ஜீவப் பிரபஞ்சத்தின் ஆசார வழியாய் உண்டாகும் தர்ம நெறியை யும் ஜடப் பிரபஞ்சத்தின் சீரான ஒழுங்கையும் இப்படி இணைத்துக் கொடுத்திருக்கிறது. அதாவது நம்முடைய ஆசாரத்தால்தான் நம் சொந்த வாழ்க்கை, நம் சமூக வாழ்க்கை இவை மட்டுமின்றி லோக வாழ்க்கையே நல்ல முறையில் அமையும்.

இதை நவீன மனப்பான்மையுள்ளவர்கள் எல்லாரும் புரிந்துகொள்ளும்படி அந்த பகவான், வாசுதேவன், அச்யுதன் அருள் செய்ய வேண்டும். ஆசாரங்களிலேயே தர்மம் பிறப்பதால் தர்மத்தின் பிரபுவான பகவான் ஸதாசாரம் தழைக்கும்படியாக அனுக்ரஹிக்க வேண்டும்.

(தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x