Published : 13 Sep 2018 10:34 AM
Last Updated : 13 Sep 2018 10:34 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 48: உள்ளம்தான் அறத்தின் நிகழ்களம்

‘இருக்கவா? இறக்கவா? அதுதான் கேள்வி இப்போது’ என்று தன் நெஞ்சொடு கிளக்கிறான் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் (Hamlet). கலந்துரையாட ஆளில்லாமல் ஒற்றையாகிப் போகும்போது, அல்லது தான் கருதும் கனத்த பொருளைத் தன்னோடு கலந்துரையாடித் தனக்கு விளக்கத் தகுதியான ஆள் அமையாதபோது, ‘நெஞ்சே நெஞ்சே’ என்று தம் நெஞ்சத்தோடு தாமே தமக்கு எட்டியவாறு மனிதர்கள் பேசிக்கொள்வது நெஞ்சொடு கிளத்தல் (soliloquy).

சில சமயங்களில் சிலவற்றைச் செய்தாக வேண்டிய அழுத்தம் மேலே விழுகிறது. அவற்றைச் செய்வதில் உள்ள அறம் சார்ந்த நெருக்கடி உணரப்பட்டு, நெஞ்சம் மறுகி நிற்கும்போது கேள்வி வருகிறது: ‘செய்து இருக்கவா? செய்யாமல் இறக்கவா?’

வேலையில் ஆட்களை நியமிப்பதற்குக் கையூட்டுப் பெற்றுத் தரவேண்டும் என்று ஓர் அதிகாரி கட்டாயப்படுத்தப்படுகிறார்; அவருக்கு விருப்பமில்லை; அறமில்லை என்று கருதுகிறார். பணிந்தால், உள்ளம் பழிக்கும். பணியாவிட்டால் வாழ்வியல் நெருக்கடிகள் வரும். நெருக்கப்பட்ட அதிகாரி, இந்தக் கேள்வியை எண்ணிப் பார்த்தோ என்னவோ, தொடர்வண்டிக்கு முன்னால் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்.

இல்லாத இருமை

இந்தக் கேள்வி முறையான கேள்வியா? பிழையான கேள்வியா? விடைகளைப் பிழை என்று சொல்லலாம்; கேள்விகளையே பிழை என்று சொல்லலாகுமோ? சொல்லலாகும். அப்பக்கம் இப்பக்கம் அசைய விடாமல், ‘இரண்டில் ஒன்று சொல்க’ என்று விடையை அடைத்து வைத்துக்கொண்டு கேட்கும் கேள்வி பிழையான கேள்வி இல்லையோ? ‘ஆம், இல்லை’ என்ற இரண்டு வாய்ப்புகளை மட்டுமே நம் முன் நிறுத்தும் கேள்வி பிழையான கேள்வி இல்லையோ? இவ்வகைக் கேள்விகள் பொய்-இருமைக் கேள்விகள் (false dilemma). இல்லாத இருமையைக் கட்டமைக்கின்றன இவை. இரண்டிலிருந்தும் விலகிய மூன்றாவது கூறு ஒன்று இருப்பதை அடியோடு மறைக்கின்றன இவை.

‘இருக்கவா? இறக்கவா?’ என்ற இக்கேள்வி, நெருக்கடிக்குப் பணிந்துகொடுத்து, இப்போதிருக்கும் அதே நிலையில் தொடர்ந்து இருக்கவா? அல்லது பணிய மறுத்து, இப்போதிருக்கும் அதே நிலையில் இறக்கவா என்ற இருமைகளைக் கட்டமைக்கிறது. உடைத்துப் பார்த்தால், கேள்வி இருத்தலையும் இறத்தலையும் பற்றியதில்லை; இப்போதிருக்கும் நிலையைப் பற்றியது; இல்லையா? அதைத் தக்கவைத்துக் கொள்வதா அல்லது அதிலிருந்து தள்ளப்படுவதா என்பதைப் பற்றியது; இல்லையா?

தக்கவைத்துக்கொள்ளப் போராடுவது அல்லது தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளிவிடப்படுவது என்ற இந்த இரண்டு வாய்ப்புகள்தாமா? வேறு இல்லையா என்றால், ஏன் இல்லை? தக்கவைக்கப் போராடாமல், தள்ளியும் விடப்படாமல், இப்போதிருக்கும் நிலையை நாமாகவே துறந்துவிட்டால்? துறந்து வெளியேறுதல் என்பது இந்த இருமைகளுக்கு இடையில் நிற்கும் மூன்றாவது வாய்ப்பில்லையா? அந்த வாய்ப்பைக் கண்டுகொள்ளத் தெரிந்திருந்தால், ‘இருக்கவா? இறக்கவா?’ என்ற கேள்வியே எழாதில்லையா? புத்தருக்கு எழவில்லையே?

‘இப்போதிருக்கும் நிலை பொருட்டே இல்லை; பிறக்கும்போது இந்த நிலையில் இல்லை; இறக்கும்போதும் இந்த நிலையில் இருக்கப்போவதில்லை; இடையில் வந்தது இடையிலேயே போகிறது; போகட்டும்’ என்று சிக்க வைக்கும் விவகாரத்திலிருந்து தன்னை விலகிக்கொள்ளத் தெரிந்தவர், நோகாமல் வாழ்வார் இல்லையா?

அறம் என்பது என்ன?

சரியான விடைகள் தேவையில்லை என்று கருதப்படும் இடங்களில் கேள்விகளே பிழையாக எழுப்பப்படு கின்றன. கேள்விகள் பிழையாக எழுப்பப்பட்டால் விடைகளும் பிழை யாகவே எழுகின்றன. கேள்விகள் திருத்தப்பட்டாலோ உண்மைகள் தாமாகவே கிளம்புகின்றன.

‘இருக்கவா? இறக்கவா?’ என்ற கேள்வியின் அடியாதாரம் அற உணர்ச்சியே அல்லவா? அப்படி என்றால், ‘அறத்தோடு இருக்கவா? அறம் இழந்து சிறக்கவா?’ என்று கேட்பது சரியாக இருக்கும் அல்லவா?

அறம் என்பதென்ன? இந்தக் கேள்வி எழுந்தபோது சாக்ரட்டீசின் நண்பர்கள் சில விடைகளைச் சொன்னார்கள். செபலசு என்பவன் சொன்னான்: அறம் என்பது உண்மை சொல்லுதலும் வாங்கியதைத் திருப்பிக்கொடுத்தலும். சாக்ரட்டீசு கேட்டான்: கத்தியைக் கடன் வாங்கினேன்; கடனைத் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது கொடுத்தவனின் மனம் பிறழ்ந்திருப்பதைக் கண்டேன். இப்போது எது அறம்? அவனது மனப் பிறழ்வைப் பொருட்படுத்தாமல் உண்மை சொல்லிக் கத்தியைத் திருப்பிக்கொடுப்பதா? அல்லது கமுக்கமாகத் திரும்பி வந்துவிடுவதா? கமுக்கமாகத் திரும்பி வந்துவிடுவதுதான். அப்படியென்றால் உண்மை சொல்வதும் வாங்கியதைத் திருப்பிக் கொடுப்பதும் எப்படி அறமாகும்? அறம் இடம் பொருள் ஏவல் சார்ந்ததில்லையா?

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின் (குறள் 292)

-குற்றமில்லாத நன்மை தரும் என்றால், பொய்யும் மெய்யை ஒத்ததுதான் என்று நமக்குப் பாடம் இ்ல்லையா?

பாலிமாக்கசு என்பவன் சொன்னான்: அறம் என்பது நண்பர்களுக்கு நல்லது செய்வதும் எதிரிகளுக்குத் தீங்கு செய்வதும். சாக்ரட்டீசு கேட்டான்: நண்பர்கள் என்று கருதப்படுகிறவர்கள் புறத்தில் நண்பர்களாகவும் அகத்தில் எதிரிகளாகவும் இருந்தால்? எந்தக் காரணமும் இல்லாமல், ஒருவன் எதிர்த் தரப்பினன் என்பதற்காகவே அவனுக்குத் தீங்கு செய்ய முடியுமா? செய்யலாம் என்றால் அது எப்படி அறமாகும்? முகத்துக்கு எதிராகவே முழங்கினாலும் தண்டித்து மகிழ்வது எப்படிச் சால்பாகும்?

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு (குறள் 987)

-தாம் விரும்பாததை ஒருவர் தனக்குச் செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவருக்கு நல்லதையே செய்யாவிட்டால் தாம் தலைமைப் பண்புள்ளவர் என்பதற்கு என்ன பொருள் என்று நமக்குப் பாடம் இல்லையா?

திரசீமாக்கசு என்பவன் சொன்னான்: வலிமையும் அதிகாரமும் உள்ளவன் என்ன சொல்கிறானோ அதுதான் அறம். சாக்ரட்டீசு சொன்னான்: அறம் என்பது அறிவின் விளைபொருள். அதிகாரம் என்பது அறிவீனத்தின் விளைபொருள். அறிவீனம் தன் வலிமையைப் பயன்படுத்தி அறிவை எப்போதும் ஆளமுடியாது. வலிமையும் அதிகாரமும் முரண்பாடுகளையும் பகைமைகளையும் உருவாக்கும்; இறுதியாக அவற்றிலேயே சிக்கி அழியும். அறம் என்பது அறிவினால் ஆளப்படும் உள்ள ஒழுங்கு.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் 293)

-தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் பிறர் அறியமாட்டார்கள் என்று பொய்யாகச் சொல்ல வேண்டாம்; சொன்னால் தன் நெஞ்சே அந்தப் பாவத்துக்குச் சான்றாக நின்று தன்னை வருத்தும் என்று நமக்குப் பாடம் இல்லையா?

கண்காணி இல்என்று கள்ளம் பலசெய்வார்

கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்;

கண்காணி யாகக் கலந்துஎங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவுஒழிந் தாரே. (திருமந்திரம் 2067)

கடவுள் பெயரைச் சொல்கிறவர்கள்கூடக் கண்காணிக்க ஆளில்லை என்று துணிந்து களவாணித்தனம் செய்கிறார்கள். கண்காணி இ்ல்லாத இடம் என்று ஒன்றா இருக்கிறது? கண்காணி எங்கும் கலந்து நின்றவன் இ்ல்லையா? கண்ணாகவே நின்று அனைத்தும் காட்டுகிற கண்காணி தன்னைக் காட்ட மாட்டானா? அவனைக் கண்டுகொண்டவர்கள் இனிக் கள்ளத்தனம் செய்வார்களா?

கண்காணி யாகவே கையகத் தேஎழும்;

கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்;

கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்;

கண்காணி ஆகிய காதலன் தானே. (திருமந்திரம் 2072)

கண்காணும் உருவமாக எழுந்து நிற்பான்; கண்காணிக்கிறவனாகக் கருத்துக்குள் உறைந்திருப்பான்; காணும் கண்ணாக நின்று காண்பிப்பான்; காவல் செய்யும் கண்காணி என்றாலும் அந்தக் காவல் என்மேல் கொண்ட காதல் அல்லவோ?

உள்ளந்தான் அறத்தின் நிகழ்களம். உள்ளத்தில் அவரவரை வைக்கும் வள்ளுவர் ‘தன் நெஞ்சு அறிவது பொய்யற்க’ என்கிறார். உள்ளத்தில் கடவுளை வைக்கும் திருமூலர் ‘கடவுள் அறிவது பொய்யற்க’ என்கிறார். சொற்கள்தாம் வேறு. இலக்கு ஒன்றுதான். பொய்யற்றுக் களவொழிந்து இறவாது இருந்திடுக.

(அறம் வளர்ப்போம்…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x