Last Updated : 30 Aug, 2018 10:40 AM

 

Published : 30 Aug 2018 10:40 AM
Last Updated : 30 Aug 2018 10:40 AM

ஒன்றில் இரண்டு 13: கண்ணகி காப்பாற்றிய செல்லியம்மன்

சுற்றிலும் குன்றுகள், ஏரி, பசுமையான விளைநிலங்கள் என்று காணப்படும் சிறுவாச்சூர் கிராமத்தில் இந்த அழகான ஆலயம் உள்ளது. பெரம்பலூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில்தான் மதுரகாளியம்மன் உறைகிறார். இந்த அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் பல மாநிலங்களிலும் பல நாடுகளிலும் வசித்து வருகிறார்கள். இந்தியா வரும்போதெல்லாம் தங்கள் குலதெய்வத்தைத் தரிசிக்க இவர்கள் தவறுவதில்லை.

திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோவில் இது. அந்த நாட்களில் சிறுவாச்சூர் கிராமமே நிரம்பி வழிகிறது. மற்றபடி விதிவிலக்காகச் சில நாட்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கிறது.

சித்திரையில் அமாவாசைக்கு அடுத்த செவ்வாயன்று தொடங்குகிறது பூச்சொரிதல் விழா. பதிமூன்று நாட்களுக்கு இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது மாலைவழிபாடு உண்டு. தமிழ்ப் புத்தாண்டு நாள், ஆங்கிலப் புத்தாண்டு நாள், ஆடிப் பெருக்கு, தீபாவளி, கார்த்திகைத் தீப நாள், வைகுண்ட ஏகாதசி, தைப் பொங்கல் திருநாள், சிவராத்திரி ஆகிய நாட்களிலும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.

சோழன் புதுப்பித்த ஆலயம்

இந்த ஆலயத்தை குலோத்துங்கச் சோழன் புதுப்பித்தார். அந்தக் கிராமம் அமைந்துள்ள ஒட்டுமொத்தப் பகுதிக்கும் சக்திவாய்ந்த தெய்வமாக அருள்புரிகிறார் மதுரகாளியம்மன். காக்கும் தெய்வமாக ஐயனார் காட்சி தருகிறார்.

மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும் அங்கப்பிரதட்சிணம் செய்வதும் இங்கு முக்கிய நேர்த்திக் கடன்களாகக் கருதப்படுகின்றன. இந்த மாவிளக்கின் இன்னொரு தனித்துவம் என்னவென்றால் இதற்கான மாவை பக்தர்கள் கடைகளில் வாங்குவதில்லை. வீட்டில் தயாரித்தும் இங்கு கொண்டு வருவதில்லை. அவரவர் வீட்டிலிருந்து அரிசியைக் கொண்டு வருகிறார்கள். அதை இங்கு தண்ணீரில் ஊறவைக்கிறார்கள். அதற்கென்றே வைக்கப்பட்டுள்ள உரல்களில் இடிக்கிறார்கள். மாவிடிக்க முடியாத நிலையிலுள்ளவர்களுக்கு உதவுவதற்கென்றே ஆட்களும் இருக்கின்றனர்.

தேவியைக் காத்த கண்ணகி

கண்ணகிக்கும் இந்த ஆலயத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறது ஒரு கர்ண பரம்பரைக் கதை.

குற்றமற்ற கண்ணகியின் கணவன் கோவலனைப் பொற்கொல்லனின் வஞ்சக வார்த்தையை நம்பி பாண்டிய மன்னன் கொன்றுவிட்டான். அதற்கு நீதிகேட்டு அரசவைக்குச் சென்ற கண்ணகி தன் சிலம்பை உடைத்து உண்மையை உணர வைத்தாள். அப்போதும் உக்கிரம் தாங்காமல் தன் சாபத்தால் மதுரையைத் தீக்கிரையாக்கினாள். பின்னர் திருச்சியை நோக்கி வந்தபோது அங்குள்ள செல்லியம்மன் ஆலயத்தைக் கண்டு அதில் அன்றிரவு தங்கத் தீர்மானித்தாள்.

அப்போது சிறுவாச்சூரின் காவல் தெய்வமாக இருந்தது செல்லியம்மன்தான்.

கண்ணகி அந்த ஆலயத்தில் அன்றிரவு தங்கியபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. செல்லியம்மன் தன் கருவறையிலிருந்து வெளிப்பட்டு,  “பெண்ணே நீ இங்கு தங்கக் கூடாது” என்றார். கண்ணகி காரணம் கேட்டாள். "நான் ஒரு சக்திமிக்க தேவிதான். என்றாலும் குரூரமான ஒரு மந்திரவாதியின் பிடியில் அகப்பட்டிருக்கிறேன். தனது பக்தியால் என் மூலம் பல வரங்களை அவன் பெற்றுவிட்டான். ஒரு கட்டத்தில் அந்த மந்திரங்கள் மூலம் என்னையே அவனுக்கு அடிமையாக்கிக் கொண்டுவிட்டான்.

என் வரமே எனக்கு எதிராகிவிட்டது. தனது அழிவுச் செயல்களுக்கு அவன் என்னைப் பயன்படுத்தத் துடிக்கிறான். இந்த நிலையில் நீ இங்கு இருப்பதை அவன் பார்த்துவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவான். எனவேதான் உன்னைப் போகச் சொல்கிறேன்’’ என்றார்.

செல்லியம்மனின் நிலையைக் கண்டு கண்ணகியின் மனம் நொந்தது. சற்று நேரத்தில் செல்லியம்மன் சன்னிதிக்கு வந்த மந்திரவாதி, செல்லியம்மனை வெளியே வரச் சொல்லி அழைத்தான். அவன் எதிர்பாராத விதத்தில் கண்ணகி வெளியே வந்தாள். அவள் கையில் ஒரு வாள். மிகவும் விசையுடன் அந்த மந்திரவாதியின் கழுத்தைத் துண்டித்தாள்.

‘வந்தது கண்ணகியல்ல, அவள் உருவத்தில் குடியேறிய காளியம்மன்தான்’ என்பதைப் புரிந்துகொண்ட மந்திரவாதி அவளிடம் இறுதியாக ஒரு வரத்தை வேண்டினான்.  “இந்த ஆலயத்தில் எனக்கு ஒரு சமாதி அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் எல்லாம் அதன்மீது கால் வைத்துவிட்டு உன்னை தரிசிக்க வர வேண்டும். நான் செய்த பாவங்களுக்கு இதுவே பரிகாரம்.”

கண்ணகி உருவில் இருந்த காளியம்மனும் இதற்கு ஒத்துக்கொண்டாள். செல்லியம்மன் மனம் நெகிழ்ந்தார். கண்ணகியின் உதவியைப் போற்றும் வண்ணம், “இனி இந்த சிறுவாச்சூர் உனக்கானது. மதுரகாளியம்மனாக நீயே இங்கு எழுந்தருள்வாயாக. பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எதற்கும் இங்கு இனி இடம் கிடையாது. சூனியங்கள் இங்கு நடைபெறாது. நான் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பெரியசாமிக் குன்றுக்குச் செல்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்’’ என்று கூறி மறைந்தாள்.

கண்ணகியின் கண்கள் நிறைந்தன. எனினும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தான் சிறுவாச்சூரில் இருப்பதாக வாக்களித்தாள்.

பூஜையின்போது மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி அதை செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமிக் குன்றின் திசையை நோக்கிக் காட்டிவிட்டு பிறகே மதுரகாளியம்மனின் திருவுருவத்துக்குக் காட்டுகிறார்.

முன்பு செல்லியைக் காப்பாற்றிய மதுரகாளியம்மன் இன்று செல்லியம்மனையும் தன்னகத்தே வைத்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கருவறையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகள் நிறுவிய ஸ்ரீசக்ர யந்திரமும் உள்ளது. மதுரகாளியம்மன் திருவுருவம் வடதிசையைப் பார்த்து உள்ளது. நான்கு அடி உயரத்தில் உள்ள சிலை. அம்மன் என்றால் ஆயுதங்கள் இல்லாமலா? கூடவே அமுதசுரபி ஒன்றும் அவர் கையில் உள்ளது.

சிங்கத்தின்மீது, ஒரு காலை மடித்தபடி அமர்ந்து காட்சி தருகிறார் மதுரகாளியம்மன். திரிசூலம் எடுப்பாக இருக்கிறது. ஆனால், அம்மனின் காலடியில் (பொதுவாக காளியின் உருவத்தோடு காணப்படும்) அரக்கனின் உருவம் எதுவும் தென்படக் காணோம். கலியுகப் பக்தர்களுக்குக் கருணையையும் உணர்த்துகிறாள் போலும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x