Published : 16 Aug 2018 10:53 AM
Last Updated : 16 Aug 2018 10:53 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 44: ஞான விளக்கைத் தேடிப்போவோம்

அறிவூட்டுகிற பேச்சுகளையும் அவற்றைப் பேசும் ஆட்களையும் எப்போதும் அரசாங்கங்கள் விரும்புவதில்லை. முன் ஆடு போன தடத்திலேயே போகும் பிற ஆடுகளைப் போலவும், வானத்தை நோக்கிச் சுட்டால்கூடத் தன்னைத்தான் சுட்டுவிட்டதாகவும் தான் செத்துவிட்டதாகவும் நினைத்து நெஞ்சடைத்து விழுந்துவிடுகிற வாத்துக்களைப் போலவும் மக்கள் இருப்பதுதான் ஆள்வதற்கு வசதியானது என்று அவை கருதுகின்றன. ஆகவே, அறிவூட்டும் வேலையை அரசாங்கங்கள் செய்வதில்லை என்பதோடு அந்த வேலையைச் செய்கிறவர்களைத் தடைப்படுத்தியும் தளைப்படுத்தியும் தேவைப்பட்டால் இல்லாமலே செய்தும் வந்திருக்கின்றன. சான்று கிரேக்க மெய்யியல் அறிஞன் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ் சில கேள்விகள் கேட்டான்:

‘உங்களுடைய செருப்பைச் செப்பனிட வேண்டுமென்றால் யாரிடம் போவீர்கள்?’ ‘இதென்ன கேள்வி? ஒரு தொழிலில் எவர் தேர்ச்சியுடையவரோ அவரிடந்தான் போவோம்; செருப்பைச் செப்பனிடுவதில் தேர்ச்சியுடையவர் செருப்புத் தைக்கிறவர்; அவரிடந்தான் போக வேண்டும்.’

‘உங்களுடைய மர நாற்காலி பழுதடைந்துவிட்டதென்றால், யாரிடம் போவீர்கள்?’

‘தச்சரிடந்தான். அவர்தானே மர வேலைகளில் தேர்ச்சி மிக்கவர்?’

‘உங்களுடைய பொன்நகை இற்றுப் போய்விட்டதென்றால் பற்ற வைத்துக்கொள்வதற்கு யாரிடம் போவீர்கள்?’

‘ஐயமென்ன? பொற்கொல்லரிடம்!’

‘நல்லது. உங்களுடைய அரசாங்கம் பாழ்பட்டுப் போய்விட்டதென்றால், அதைச் சீர்செய்ய யாரிடம் போவீர்கள்?’

எளிய காரியங்களுக்கெல்லாம் அவற்றில் தேர்ச்சியுள்ளவர்களிடம் தெளிவாகப் போகிறவர்கள், வலிய காரியமாகிய அரசு நடத்துதலுக்கும் அதேபோலத் தேர்ச்சியுள்ளவர்களிடம், அறிவுள்ளவர்களிடம் போக வேண்டாமா? ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்பது அரசியற் சமூகத்தில் வாழ்கிற ஒரு மனிதனின் கருத்தாக இருக்கலாமா?

மக்களுக்கு அறிவுகொடுக்க முயன்ற இந்தக் கேள்விதான் சாக்ரடீஸுக்கு நஞ்சைக் கொடுத்தது: சாக்ரடீஸ் ஒரு தேசத் துரோகி; தீமையின் கனியைச் சுவைக்கும் சாத்தான்; வேண்டாதவற்றை வேண்டுகிறவன்; பூமிக்கு அடியிலேயும் வானத்துக்கு அப்பாலேயும் இருப்பவற்றை ஆராய்கிற அறிவீனன்; சிறந்ததையெல்லாம் மோசமான தாகவும், மோசமானதை யெல்லாம் சிறந்ததாகவும் ஆக்கிக்காட்ட முனைகிறவன்;

அவற்றையெல்லாம் மற்றவர்களுக்கும் போதித்து அவர்களையும் பேதைப் படுத்துகிறவன்; அரசாங்கம் கும்பிடச் சொல்கிற தெய்வங்களைக் கும்பிடாமல் புதிய கருத்துநிலைத் தெய்வங்களைக் கற்பிக்கிறவன்; அவ்வாறு கற்பிப்பதன்மூலம் இளைஞர்களின் மூளைகளைக் குற்றப்படுத்துகிறவன்—என்றெல்லாம் சாக்ரடீஸைக் குற்றம் சாட்டினார்கள். சாக்ரடீஸ் மன்னிப்புக் கேட்டால் எளிய தண்டனையோடு விட்டுவிடுவதாகச் சொன்னார்கள்.

பிளேட்டோவின் குகை

மரணத்துக்கு அஞ்சி மன்னிப்புக் கேட்பது அறிவுடைமை ஆகாது; மரணத்தைப் பார்த்து ஏன் அஞ்ச வேண்டும்? மரணம் நல்லதாகக்கூட இருக்கலாம்; அது கனவுகளற்ற உறக்கம் ஆகலாம்; நல்லதுதானே? பரவலாக நம்பப்படுவதைப் போல என்னை அது மறுஉலகுக்குக் கொண்டு போகலாம்; ஏற்கெனவே மரணமடைந்து, மறு உலகில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிற ஆர்பியசையும் எசியோதையும் ஓமரையும் கண்டு அளவளாவும் வாய்ப்பை உண்டாக்கித் தரலாம்; நல்லதுதானே? எ

னவே மன்னிப்புக் கேட்டு, என்மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு மறைமுக ஒப்புதல் வழங்கி வாழ்வைப் பெறுவதைவிட, மரணத்தையே அடைந்துகொள்கிறேன் என்றான் சாக்ரடீஸ். நஞ்சைக் கொடுத்தார்கள். வாங்கிக் குடித்தான்; செத்தான்.

சாக்ரட்டீஸின் மாணவன் பிளேட்டோ. அறிவுக் கனியைப் பறித்துத் தின்னச் சொன்னவனுக்கு சாவா பரிசு என நொந்தான். உருவகக் கதை ஒன்று செய்தான். பிளேட்டோவின் குகை உருவகக் கதை என்று அது புகழ் பெற்றது.

ஓர் இருட்குகை. குகையின் வாயிலுக்கும் உட்சுவருக்கும் நடுவில் ஒரு கட்டைச் சுவர். அந்தக் கட்டைச் சுவரில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சில மனிதர்கள். பிறந்த நாள் முதலே அவர்கள் அந்த இருட்குகையின் கட்டைச் சுவரில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் குகையின் வாயிலை, புற உலக நிகழ்வுகளைப் பார்க்க முடியாது. பக்கத்தில் கட்டப்பட்டி ருக்கிற மனிதரைக்கூடப் பார்க்க முடியாது. தங்களைத் தாங்களேகூடப் பார்த்துக்கொள்ள முடியாது. அவர்களால் பார்க்க முடிந்ததெல்லாம் தங்களுக்கு எதிரில் தெரிகிற குகையின் உட்சுவரை மட்டுமே.

இந்த மனிதர்களைக் கட்டி வைத்திருக்கிற கட்டைச் சுவருக்குப் பின்னால் வெளிச்சத்துக்காக ஒரு தீக்குண்டம். அந்தத் தீக்குண்டத்துக்கும் கட்டைச் சுவருக்கும் நடுவில் ஒரு நடைபாதை. அந்த நடைபாதையில் சில மனிதர்கள் போகிறார்கள், வருகிறார்கள். சில நேரத்தில் கழுதைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் பொம்மைகளை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். இவர்களுடைய நிழல்கள் குகையின் உட்சுவரில் பூதாகரமாக விழுகின்றன. கட்டுண்ட மனிதர்கள் அவற்றைப் பார்க்கிறார்கள். இந்தப் பூதாகரமான நிழல்களையே உண்மை என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் பிறந்தது முதல் அவர்கள் நிழல்களைத் தவிர வேறு எதையும் கண்டறிந்தவர்கள் இல்லை.

பின்னால் தலை திருப்பிப் பார்க்கிற வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. பார்ப்பதற்கு நிழலன்றி ஏதும் அற்றவர்கள் அவர்கள். பாதையில் மனிதர்கள் பேசிக்கொண்டே நடக்கும்போது ஒலிகள் எழுகின்றன. அந்த ஒலிகள் குகையில் எதிரொலித்துத் தெளிவற்ற கூவொலியாகக் கேட்கின்றன. அந்தக் கூவொலிகள் எல்லாம் பூதாகரமான நிழல்கள் எழுப்புகிற ஓசைகள் என்று கட்டுண்ட மனிதர்கள் நம்புகிறார்கள்.

விடுதலை வெளிச்சம்

இந்த நிலையில் கட்டுண்டு கிடந்த மனிதர்களில் ஒருவன் எப்படியோ தப்பித்து விடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன நிகழும்? விடுவித்துக்கொண்டவன் அங்குமிங்கும் அலைவான். கட்டைச் சுவரின் பின்னால் உள்ள குண்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீயைப் பார்ப்பான். வெளிச்சத்தை நேராகப் பார்த்துப் பழக்கமில்லாததால் அவனுடைய கண்கள் கூசும். மெல்லப் பார்வையைச் சரி செய்வான். தீயை நேராகப் பார்க்கும் திறன் பெறுவான். தீயின் வெளிச்சத்தில் குகையின் பரிமாணங்களை அளந்து அறிவான். குகையின் வாயிலைக் காண்பான். வெளியேறுவான்.

வெளியில் சூரியன் தகித்துக்கொண்டிருக்கும். அவ்வளவு வெளிச்சத்துக்கு அவன் கண்கள் பழகியதேயில்லை. தடுமாறிக் கண்களைச் சுருக்கிக்கொள்வான். மேலே பார்க்காமல் கீழே பார்ப்பான். புறப் பொருட்களின் நிழல்கள் தெரியும். பின் மெல்லத் தலைநிமிர்த்தி புறப்பொருள்களையே நேரடியாகப் பார்ப்பான். பிறகு இன்னும் தலை நிமிர்த்தி இவற்றையெல்லாம் காட்டுகின்ற ஒளி எது என்று பார்ப்பான். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று கூத்தாடிப் போய்விடுவானா? பொறுப்புள்ளவன் போக மாட்டான்.

மீண்டும் குகைக்குத் திரும்புவான். வெளிச்சத்திலிருந்து இருளுக்கு வந்ததால் கண் தெரியாமல் தடுமாறுவான். கட்டப்பட்டிருப்பவர்களோ, கடவுளின் கட்டளையை மீறி வெளியே போனதால் அவன் கண்களை இழந்துவிட்டதாக இகழ்வார்கள். நிழல்களையே பார்த்துப் புத்தி பேதலித்துக் கிடக்கும் அவர்களுக்கு இவன் உண்மையைச் சொல்வான். அவர்களை விடுவிக்க முயல்வான். அவர்களோ இவனைப் பைத்தியம் என்று சொல்லி அடித்துக் கொல்வார்கள். அம்மணர்களின் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

வேண்டாத உண்மையறிவு

அறிவைப் பெறுவதும் அதை அடையாளம் காட்டுவதும் முயல்கிறவர்களுக்கு அரியதாகவும் அரசாங்கத்துக்கும் மற்றவர்களுக்கும் வேண்டாததாகவும் இருக்கிறது. திருமூலர் சொல்கிறார்:

மாய விளக்குஅது நின்று மறைந்திடும்;

தூய விளக்குஅது நின்று சுடர்விடும்;

காய விளக்குஅது நின்று கனன்றிடும்;

சேய விளக்கினைத் தேடுகின் றேனே. (திருமந்திரம் 2367)

அறியாமை என்ற இருட்குகையில் அகப்பட்டவர்களுக்கு நிழல்களைக் காட்டி மறைகின்றன சில விளக்குகள். நின்றெரியும் தூங்காமணி விளக்குகளோ நிலையாகக் காட்டினாலும்கூட, நிழல்களையே காட்டுகின்றன. உடம்பு அகலுக்குள் அறிவு விளக்கு ஏற்றினால் அது மெய் காட்டும். அதற்குத் தீயைத் தூண்டிவிடும் ஞான விளக்கைத் தேடிப் போங்கள். அறிவைத் தேடுவது ஏன் அவ்வளவு முதன்மையானது என்றால்,

அறிவுஉடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது;

அறிவுஉடை யார்நெஞ்சு அருமருந்து ஆவது;

அறிவுஉடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்

அறிவுஉடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. (திருமந்திரம் 2364)

பொருளா சொல்லவேண்டும்?

(அறிவைப் பற்றுவோம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x