Last Updated : 09 Aug, 2018 10:20 AM

 

Published : 09 Aug 2018 10:20 AM
Last Updated : 09 Aug 2018 10:20 AM

ஒன்றில் இரண்டு 10: புத்தரின் புன்னகையுடன் திருமால்

உலகின் மிகப் பெரிய ஆலயம் மகாபாரதத்தில் காம்போஜம் என்று அழைக்கப்படும் கம்போடியாவில் உள்ளது. அங்குள்ள அங்கோர்வாட் ஆலயம் திருமாலுக்கானது. கம்போடியாவின் கொடியில்கூட அந்த ஆலயம் இடம் பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு அது மதிக்கப்படுகிறது. இந்த ஆலயம் உள்ள நகரத்தின் பெயர் அங்கோர்.

அங்கோர் அகழியால் சூழப்பட்ட நகரம். அங்கோர் டோம் என்றும் இந்த நகரைக் குறிக்கிறார்கள். கட்டணம் செலுத்திவிட்டுத் தான் இந்த நகருக்குள் நுழைய முடியும். இரவில் அங்கே தங்க முடியாது. மாலை ஆனவுடன் நகரத்திலிருந்து வெளியேறி அடுத்த நாள் காலையில் நுழைவுச் சீட்டைக் காண்பித்துவிட்டு உள்ளே செல்லலாம்.

அங்கோரில் பல ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் பிரமிக்க வைக்கிறது. அதன் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மிகப் பெரிய ஐந்து தலை நாகத்தின் சிற்பம் இருக்கிறது. அங்கோர்வாட் உட்பட பல இடங்களில் இந்த பாம்பு உருவம் காணப்படுகிறது.

ஜெயசிந்து என்னும் அகழி

கம்போடிய மக்கள் தங்களை நாக இனத்தவர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஒரு காலத்தில் பசிபிக் கடல் பகுதியில் நாகர்களின் சாம்ராஜ்யம் பரந்து, விரிந்திருந்ததாம். நாகராஜனின் மகளை காம்போஜ மன்னர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர்களின் வழியில் தோன்றியவர்கள்தாம் கம்போடிய மக்கள். இந்து மதப் புராணத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு கோட்டைபோல அகழிகளுக்கு நடுவே இருக்கிறது பிரம்மாண்டமான அங்கோர். நகரைச் சுற்றிலும் உள்ள சுவரை ஜெயகிரி என்கிறார்கள். அகழியை ஜெயசிந்து என்கிறார்கள்.

நகரின் ஒவ்வொரு நுழைவு வாயிலின் மேற்பகுதியிலும் போதி சத்துவ அவலோகிதேஸ்வரர் உருவம் காட்சியளிக்கிறது. புத்தர் என்பவரை, இளவரசன் சித்தார்த்தர் நகரைப் பிரிந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்றவர், என்றே நாம் நினைக்கிறோம். ஆனால், புத்தர் என்றால் ஞானம் பெற்றவர் என்று பொருள். போதிசத்துவர் என்றால் ஞானம் அடைவதற்குச் சற்று முந்தைய நிலையில் உள்ளவர் என்று பொருள். அவலோகிதேஸ்வரர் என்றால் ‘’கீழ்நோக்கி பார்வையை செலுத்திக்கொண்டிருக்கும் தேவன்’ என்ற அர்த்தம். புத்த மதத்தில் மிகவும் பரவலாக வழிபடப்படுபவர் போதி சத்துவ அவலோகிதேஸ்வரர்.

பசுமைக் கம்பளம் விரித்ததுபோல அழகாகக் காட்சிதரும் அங்கோர் நகரில் பேயான் ஆலயம், பஃபுவான் ஆலயம், டகியோ ஆலயம் என்று பல ஆலயங்கள் உள்ளன. கம்போடிய மக்கள் எழுப்பிய ஆலயங்கள் வெகு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கின்றன. எனினும், மன்னர்கள் வசித்த அரண்மனைகள் அழிந்துவிட்டன. காரணம் ஆலயங்களைச் சிறந்த கட்டுமானத்தோடு கற்களில் எழுப்பிய கம்போடிய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளை மரத்தில் எழுப்பிக்கொண்டனர். இறைவனோடு ஒப்பிடும்போது தாங்கள் சாமானியர்கள், ஆடம்பரம் கூடாது என்னும் உணர்வே காரணம்.

முழுமை பெறாத வசீகரம்

கம்போடியாவில் நீண்டகாலமாக வசிப்பவர்கள் கெமர் இனத்தவர். இரண்டாம் ஜெயவர்மன் மன்னன் ஆனபோது விவசாயத்துக்கான அடிப்படை வசதிகளை மிக அதிக அளவில் செய்தார். பின்னர், இந்திரவர்மன் ஆட்சியில் அங்கோர் நகரத்தில் அற்புதமான கட்டுமானங்கள் உருவாயின. கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் அங்குள்ள கட்டிடங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன. இந்திரவர்மனின் மகன் யசோவர்மன் ஆட்சியில் அங்கோர், கெமர் சாம்ராஜ்யத்தின் தலைநகரானது.

ஒரு வியப்பான உண்மை என்னவென்றால் இந்த மிகப் பிரம்மாண்டமான ஆலயத்தின் பெயர் என்ன என்பதற்கான வரலாற்று ஆவணம் இதுவரை எங்குமே கிடைக்கவில்லை. கடந்த கால வரலாற்று ஆய்வாளர்கள்கூட இந்த ஆலயத்தின் சிறப்புகளை விவரித்திருக்கிறார்களே தவிர, இந்த ஆலயத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.

அங்கோர்வாட் ஆலயம் மன்னன் யசோ வர்மன் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. எனினும், மன்னன் இரண்டாம் சூரியவர்மன்தான் அங்கோர்வாட் ஆலயத்தை எழுப்பினான். இந்த ஆலயத்தைத் திருமாலுக்காக அர்ப்பணித்தான். ஏனென்றால் இந்துமதம்தான் மன்னர்களின் மதமாக அப்போது விளங்கியது. முக்கிய சன்னிதியில் திருமாலின் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், பதினான்காம் நூற்றாண்டில் கம்போடியாவில் தேராவாத பௌத்தம் செல்வாக்கு பெற்றது. எனவே, கோயிலின் முக்கிய தெய்வம் புத்தர் என்று மாற்றம் செய்யப்பட்டது.

அங்கோர்வாட் ஆலயத்தின் பல பகுதிகள் முழுமையாகக் கட்டப்படவில்லை. இரண்டாம் சூரியவர்மன் இறந்தவுடன் கட்டுமானம் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஆங்காங்கே முழுமை அமையாமல் இருப்பதேகூட இந்த ஆலயத்துக்குத் தனியொரு ‘புதிரான அழகை’ அளிப்பதாக நமக்குப்படுகிறது.

ஆலயத்தின் வெளிச்சுவர் 1,025 மீட்டர் நீளமும், 800 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது. இதைக் கட்டி முடிக்க 3,000 பணியாளர்களும், 6,000 யானைகளும் தேவைப்பட்டிருக்கின்றன(ர்).

அங்கோர் வாட் ஆலயத்தின் அழகு வெளிப்புறச் சுவரின் பிரம்மாண்டத்தால் மட்டுமல்ல; அதில் காணப்படும் அழகிய சுதைச் சிற்பங்களாலும்தான்.

 தென் கிழக்குப் பகுதியில் உள்ள சுவரில் மகாபாரதக் காட்சிகள் விரிகின்றன. குருட்சேத்திரப் போர் விளக்கமாகவே சித்தரிக்கப்படுகிறது. பீஷ்மரின் அம்புப் படுக்கைக் காட்சியிலிருந்து கர்ணனின் மரணக் காட்சிவரை அருமையாக வடித்திருக்கிறார்கள். தென்மேற்கு மூலையில் உள்ள சிற்பங்கள் ராமாயணம் தொடர்பானவை.

 சொர்க்கத்தில் கிடைக்கக்கூடிய குதூகலங்கள், நரகத்தில் கிடைக்கக்கூடிய தண்டனைகள் ஆகியவற்றை விவரிக்கும் சுதைச் சிற்பங்களும் ரசிக்க வைக்கின்றன.எருமைமீது அமர்ந்தபடி காட்சி தருகிறார் பதினெட்டு கைகள் கொண்ட யமதர்மன்.

ஆலயத்தின் ஒருபுறத்தில் படிக்கட்டுகள் இல்லாத உயரப் பகுதி ஒன்றும் உள்ளது. யானையில் வரும் மன்னர்கள் அங்கு யானையை மண்டியிட வைத்து அந்தப் பகுதியில் இறங்கி ஆலயத்துக்குள் வருவார்களாம்.

ondril 3jpg

கோயிலைச் சுற்றிப் பிரம்மாண்டமான நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்கோர் நகரிலுள்ள பல கோயில்களுக்கு முன்பு இதுபோன்று நூலகங்கள் காணப்படுகின்றன.

ஆலயத்துக்குள் நுழையும்போதே பூச்சிகளின் சத்தம் இனிமையாகவும், அதிக அளவிலும் ஒலிக்கிறது. சில்வண்டுகள் எழுப்பும் ஒலி அது.

முக்கிய நுழைவுவாயிலில் நுழைந்தவுடன் அதன் வலது புறத்தில் பெரிய அளவில் 3¼ மீட்டர் உயரத்துடன் காட்சிதரும் தெய்வ உருவத்தைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது புத்தர் என்றே நினைக்கத் தோன்றியது. காரணம் அவரது சிகை. ஆனால் அங்கிருக்கும் ஒரு குறிப்பு இந்த உருவத்தை திருமால் என்றது. உற்றுப் பார்த்த பிறகே வேறுபாடுகள் புலப்படுகின்றன. அது ஒரே பாறையில் உருவாக்கப்பட்ட சிலை. எட்டுக் கைகள் கொண்ட உருவம். ஒவ்வொரு கையிலும் ஓர் ஆயுதம்.

ஆலயச் சுவர்களில் எங்கே பார்த்தாலும் அப்சரஸ்களின் உருவங்கள். அதாவது மூவாயிரத்துக்கும் அதிகமான தேவ கன்னிகைகள். அவர்களின் சிகை அலங்காரங்கள் அவ்வளவு எழிலாகவும் ஒன்றுக்கொன்று அவ்வளவு வித்தியாசமாகவும் உள்ளன.

மேல்தளத்தில் இருக்கிறது கருவறை. அதை அடைய நிறையப் படிக்கட்டுகள் ஏற வேண்டும். செங்குத்தான படிகள். இதைப் பார்த்துத் திகைத்தவர்களுக்கு அங்கிருந்த ஒரு வழிகாட்டி வேறொரு தகவலைக் கூறிக்கொண்டிருந்தார்.

இந்தப் பிரகாரத்தின் மத்திய இடத்தில் மேலும் செங்குத்தான படிகள் உண்டு. முன்பெல்லாம் அதைத்தான் பயன்படுத்தினார்கள். கஷ்டப்பட்டு அதில் ஏறுபவர்கள் பலர் இறங்க முடியாமல் போய்விட்டது. இவர்களுக்கு உதவவே சில உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கீழே விழுந்து அடிபட்டுக் கொள்பவர்களும் உண்டு. அதனால்தான் அந்தப் படிகளை இப்போது அடைத்து விட்டார்கள்.

கருவறைக்குச் சற்றே முன்னே உள்ள மைய சன்னிதியில் புத்தரின் உருவம் சயனக் கோலத்தில் காட்சி தருகிறது.

எப்படியோ ஒரே கருவறையில் இரண்டு வித்தியாசமான தெய்வ உருவங்கள் இடம் பெற்ற வரலாற்று விந்தையை கம்போடியா படைத்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x