Published : 20 Jul 2018 11:20 AM
Last Updated : 20 Jul 2018 11:20 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 40: அடியேன் நடுவில் இருவரும்

இனிப்பு என்பது ஒரு சுவையுணர்ச்சி. அதைக் கடலை மிட்டாயின் வாயிலாகவும் பெறலாம்; கருப்பட்டியின் வாயிலாகவும் பெறலாம்; பலாப்பழப் பாயசத்தின் வாயிலாகவும் பெறலாம்; பாதாம் கீரின் வாயிலாகவும் பெறலாம். அவ்வாறு பெறும் முயற்சியில் அனுபவித்தது கடலை மிட்டாயை, கருப்பட்டியை, பலாப்பழப் பாயசத்தை, பாதாம் கீரை. சுவைத்து உணர்ந்ததோ இனிப்பை. அனுபவப் பொருட்கள் மாறும்; அனுபவங்கள் மாறும்; ஆனால், இந்த அனுபவங்களின் வழியாகச் சென்றடையும் ஆதாரச் சுவை உணர்ச்சி மாறுவதில்லை.

ராமகிஷ்ண பரமஹம்சர் பல்வேறு அனுபவங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டவர். கடவுளைப் பல தினுசாகச் சொல்கிறார்கள் அடைவதற்குப் பல வழிமுறைகளைக் காட்டுகிறார்கள். என்றால் ஒவ்வோர் அனுபவத்திலும் கிடைக்கப்பெறும் கடவுள் ஒன்றுதானா இல்லை வேறு வேறா என்று கண்டுகொள்ள விரும்பியவர்.

கிறித்துவை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது, ஒரு தீவிரக் கிறித்தவனைப் போலக் கிறித்தவத்தில் தோய்ந்து மாதாவையும் மைந்தனையும் கண்டுகொண்டார். இஸ்லாத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது ஒரு தீவிர இஸ்லாமியனைப் போல இஸ்லாத்தில் தோய்ந்து ஒரு சூஃபி மெய்யுணர்வாளரைப் போல இறைமையைச் சுவைத்துணர்ந்தார்.

நல்லது. இறைமையை ஆணும் பெண்ணும் என்று சொல்கிறார்கள். அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டுமென்றால் என்னவாக இருந்து சுவைக்க வேண்டும்? ஆணாக இருந்தா? அல்லது பெண்ணாகியா?

இறைவன் என்பவன் ஆண்மட்டுமே; ஆண் என்பவன் இறைவன்மட்டுமே என்று கொண்டது வைணவம். இறைவனை, ‘மாலாய்ப் பிறந்த நம்பி; மாலே செய்யும் மணாளன்’—‘கருப்பாய்ப் பிறந்தவன்; மயக்கம் செய்யும் மணாளன்’ என்கிறாள் ஆண்டாள் (நாலாயிரம் 639); ஆணாக இருக்கிற இறைவனைப் பெண்ணாக இருந்து பார்க்கிற ஆண்டாளுக்குச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், ஆணாக இருக்கிற இறைவனை ஆணாகவே இருக்கிறவர்கள் பார்த்தால் எப்படிப் பார்ப்பது என்ற அடையாளச் சிக்கல் வருகிறது. ஆண்கள் தங்களைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பார்க்கலாம் என்று தீர்வு சொன்னது பக்தி மரபு.

தன்னைக் கண்ணன்மேல் மையல் கொண்ட ஒரு பெண்ணாக, பராங்குச நாயகியாகப் பாவித்துக்கொள்கிறார் நம்மாழ்வார். காம மயக்கத்தால் பித்தேறித் திரியும் பராங்குச நாயகியின் சேட்டைகளை அவளுடைய தாய் பாடுவதுபோலத் தானே பாடுகிறார்:

கோமள வான்கன்றைப் புல்கிக்

கோவிந்தன் மேய்த்தன என்னும்;

போம்இள நாகத்தின் பின்போய்,

அவன்கிடக் கைஈது என்னும்;

ஆம்அளவு ஒன்றும் அறியேன்;

அருவினை யாட்டியேன் பெற்ற

கோமள வல்லியை மாயோன்

மால்செய்து செய்கின்ற கூத்தே.

(நாலா.தி.பிரபந்தம், 3268)

கொழுகொழுத்த இளம் பசுங்கன்று ஒன்றைப் பிடித்து, ‘இது என் கோவிந்தன் மேய்த்த கன்று’ என்று அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்; கால்மேல் ஏறி நெளிந்து ஓடிய ஓர் இளநாகப் பாம்பைப் பிடித்து வருடி, ‘இது என் கோவிந்தன் படுத்த படுக்கை’ என்று செல்லங் கொஞ்சினாள். ஐயோ என் செல்ல மகள் அந்தக் கோவிந்தக் களவாணி மேல் கிறுக்குப் பிடித்து அலைகிறாளே, என்ன செய்வேன்? கிறுக்குக்கும் ஓர் அளவில்லையா?

இறைவனை ஆண்மட்டுமே என்று வைணவம் வைத்திருக்க, இறைவனை ‘ஆணாகிப் பெண்ணாகி அலியாகி’ எல்லாமாகவும் நிற்பவன் என்று வைக்கிறது சைவம். ஆனாலும் கூட இறைவனை ஆணாகவே இருந்து உணராமல் பெண்ணாகி உணரத் தலைப்படுகிறார் அப்பர்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;

பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை;

தன்னை மறந்தாள்; தன்நாமம் கெட்டாள்;

தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே.

(தேவாரம், 6:25:7)

முதலில் அவனுடைய பெயரைத் தான் கேட்டாள். பிறகு அவன் எப்படி இருப்பான் என்று கேட்டாள். மெல்ல எந்த ஊர் என்று கேட்டாள். அப்பனையும் அம்மையையும் கைவிட்டாள். அவனைச் சேரக் கிளம்பிவிட்டாள். ‘ஐயோ, கடல் போன்று காமம் கலக்கினாலும் ஆணைப் பெண்ணே தேடிப்போய்ப் பெறுவது மரபில்லையே’ என்றார்கள். ‘அது நீங்கள் கற்பித்துக்கொண்ட உலக ஆச்சாரம்; நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்; என்னை அது கட்டுப்படுத்தாது’ என்று போய்விட்டாள் நங்கை. தன்னை மறந்தாள்; தன் பெயரை மறந்தாள். கிறுக்கச்சிக்குத் தலைவனின் திருவடிகளைத் தவிர வேறு நினைவே இப்போது இல்லை. வைணவத்துக்காக நம்மாழ்வார் பாடிய அதே பாவனையில் சைவத்துக்காகப் பாடுகிறார் அப்பர்.

இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்துப் பார்க்கும் இந்தப் பாவனைக்கு நாயக-நாயகி பாவனை, மதுர பாவனை என்றெல்லாம் பக்தி மரபில் பெயர். 

உண்மையில் உயிருக்குப் பாலின அடையாளம் கிடையாது. உயிர் என்பது ஆணும் அன்று; பெண்ணும் அன்று. உடல்தான் ஆணாகவும், பெண்ணாகவும், அதுவாகவும், பால் பிரிந்து மூன்றாக வகைப்படுகிறது. ‘அவன், அவள், அது எனும் அவை’ என்று சிவஞானபோதம் சுட்டும். உலகமாகிய இந்தச் சபை, அவன் என்ற ஆண்பால், அவள் என்கிற பெண்பால் ஆகிய உயர்திணைகளாலும், அது என்ற அஃறிணையாலும் கூட்டப்பட்டது.

பாலினம் என்பது உடம்பில் மட்டுமே உயிர்த்திருப்பது. உயிரை அறிய விரும்புகிறவர்கள் பாலின அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. தக்க வைத்துக்கொண்டால் அது முரண். எனவே, ஆணாகப் பிறந்துவிட்ட நிலையில் ஆண் உணர்வைத் தூக்கி எறிய வேண்டும். ஆண் உணர்வைத் தூக்கி எறிய வேண்டுமானால் முதலில் எதிர் உணர்வைப் பெற்று, ஆணாக இருக்கிற அடையாளங்கள் அனைத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் அதைச் செய்யும் முயற்சியில் தன்னைப் பெண்ணாகவே உருவகித்துக் கொண்டார். பெண்ணைப் போல உடுத்தினார்; பெண்ணைப் போலப் பேசினார்; பெண்ணைப் போலவே வாழ்ந்தார். தான் ஓர் ஆண் என்ற உணர்வை உள்ளம் விடும்வரையில், பாலின அடையாளங்களைத் தன் உயிர் முற்றாகத் துறக்கிறவரையில் அந்தப் பாவனையைப் பயின்றார்.

பெண்தான் ஆதாரம்

சரி, ஆண் தன்னுடைய பாலின உணர்ச்சியைத் தாண்டத் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொள்ளலாம்; பெண் தன்னுடைய பாலின உணர்ச்சியைத் தாண்டத் தன்னை ஆணாகப் பாவித்துக்கொள்ள வேண்டுமா? தேவையில்லை. ஏனென்றால் உண்மையில் பெண்தான் எல்லாவற் றுக்கும் ஆதாரம் என்கிறார் திருமூலர். 

ஆதாரம், ஆதேயம் என்று இரண்டு பேசுகிறார் திருமூலர். ஆதாரம் என்பது தாங்குவது; ஆதேயம் என்பது ஆதாரத்தால் தாங்கப்படுவது. பெண்தான் ஆதாரம்; எல்லாவற்றையும் தாங்குகிறவள். ஆண் சும்மா அவளில் தங்குகிறவன். அவளிலிருந்தே வெளிப்படுகிறவன்.

பெண்ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை;

பெண்இடை ஆணும் பிறந்து கிடந்தது;

பெண்இடை ஆண்என் பிறப்புஅறிந்து ஈர்க்கின்ற

பெண்ணுடை ஆண்இடைப் பேச்சுஅற்ற வாறே. (திருமந்திரம், 1159)

ஆதியிலே பெண் இருந்தாள்; பெண் மட்டு்ந்தான் இருந்தாள்; எல்லாவற்றையும் பிறப்பித்த பெண். அவளுக்குள்ளிருந்துதான் ஆண் பிறந்தான். ஆணுக்கு உரிய அடையாளங்களோடு பிறந்தாலும், ஆண் கலவாமல் பிறந்ததனால் அவனும் பெண்ணே அல்லவா—பிராய்லர் கோழி முட்டைபோல? ஆண் பெண்ணைக் கலக்கிறான் என்கிறார்கள்; இதென்ன பேதைமை? ஆணும் பெண்ணின் கூறுதான் என்றால், பெண்ணேயல்லவா பெண்ணைக் கலக்கிறாள்? எண்ணிப் பார்த்தால், பெண்ணுக்கு நடுவில் ஆண்; அவள் ஈர்க்கும்போது ராணித் தேனீயால் ஈர்க்கப்பட்ட வேலைக்காரத் தேனீபோலப் பெண்ணுக்கு உரியவன் ஆண். முற்றிவிட்டபிறகு இனிப் பேச்சென்ன வேண்டியிருக்கிறது?

மாணிக்கவாசகர், ‘உடையாள் உன்தன் நடு இருக்கும்; உடையாள் நடுவுள் நீ இருத்தி. அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பீர்கள்’ என்று திருவாசகம் பாடுகிறார்.

(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x