Last Updated : 01 Feb, 2018 04:01 PM

 

Published : 01 Feb 2018 04:01 PM
Last Updated : 01 Feb 2018 04:01 PM

தாயே நீயே துணை! 2: குபேரனுக்கு அருளிய காளிகாம்பாள்!

அம்மன் அற்புதங்கள்... தலங்கள்!

இன்றைக்கு சென்னை பாரிமுனையில், காளிகாம்பாள் எனும் திருநாமத்துடன் குடிகொண்டு அருள்பாலிகிறாள் அம்பிகை. அகில உலகத்துக்கே மகாராணியாகத் திகழ்பவள்தான் இவள். ஆனாலும் ஒருகாலத்தில், இவளுக்கு கோட்டையம்மன் என்று திருநாமம் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதாவது கோட்டையில், கோட்டைப் பகுதியில் இருந்தாளாம் இந்த அம்மன்.

கோட்டைப் பகுதி என்பது கடற்கரையையொட்டிய பகுதி. கடற்கரைப் பகுதியில், இன்றைக்கும் வாழ்ந்துகொண்டவர்கள் செம்படவர்கள். இவர்களுக்கு கடலன்னையும் கோட்டையம்மனும்தான் துணை. அப்போது சென்னியம்மன் என்றொரு பெயரும் இருந்ததாம்! ஆகவே, கோட்டையம்மன் என்றும் சென்னியம்மன் என்றும் பக்தர்கள் அழைத்து வணங்கினார்கள்.

மீனவர்களுக்கு, கடலன்னையும் கோட்டையம்மனும் இரண்டு கண்கள். கோட்டையம்மனை வணங்கிவிட்டுத்தான், கடலுக்குச் செல்வார்கள். கரையில் இருந்தபடி கடலன்னையை வேண்டிக் கொண்டுதான், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். வலையையும் படகுத் துடுப்பையும் கோட்டையம்மனிடம் வைத்துவிட்டு, அம்மன் சந்நிதியில் மனதார வேண்டிக் கொண்டு, அவளிடம் இருந்து குங்குமத்தை பெற்றுக்கொண்டு, அந்தக் குங்குமத்தை தங்கள் மனைவியின் நெற்றியில் இடுவார்கள். மீதமுள்ள குங்குமத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் ,கடலுக்குள் செல்வார்களாம்!

இன்னொன்றும் சொல்வார்கள்.

அதாவது அம்மனுக்கு செந்தூரம் வைத்து வழிபடுகிற வழக்கம் இருந்திருக்கிறது. இதனால் சென்னம்மன் என்றும் சென்னியம்மன் என்றும் பெயர்கள் அமைந்ததாகவும் சொல்கிறார்கள். மேலும் சென்னைப்பட்டினத்தில் இருந்த அம்மன் என்பதால், இந்தப் பெயர் அமைந்ததாகவும் சொல்கிறார்கள். எந்தப் பேராக இருந்தால் என்ன... வழிபாடும் பலனுமே பிரதானம்!

அப்படி வழிபட்டுச் சென்றால், கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கு எந்தக் குறைவும் இல்லாமல், உடல் உபத்திரவமும் இல்லாமல் காத்தருள்வாள் கோட்டையம்மன். அதாவது இன்றைய காளிகாம்பாள்.

இன்றைக்கும், தன்னுடைய சந்நிதிக்கு வந்து நிற்கும் பெண்களுக்கு மாங்கல்யத்துக்கு பலம் சேர்த்து அருள்கிறாள் காளிகாம்பாள் என்று போற்றுகின்றனர், பெண்கள். செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் காளிகாம்பாள் சந்நிதியில், மெய்யுருகி, கண்ணீர் மல்க வேண்டிக் கொள்ளும் பெண்களைப் பார்க்கலாம். கண்ணீர்... சோகம்தான். துக்கம்தான். வேதனைதான். மிகுந்த வலி கொண்டதுதான். ஆனால், அந்தக் கண்ணீரையெல்லாம் ஆனந்தக்கண்ணீராக்கி விடும் வித்தைக்காரி, காளிகாம்பாள்!

ஒருகாலத்தில் பரதபுரி என்றும் ஸ்வர்ணபுரி என்றும் பெயர்கொண்டதாக இருந்ததாம் இந்தப் பகுதி. இந்திரன் வழிபட்டு அம்பிகையின் அருள் பெற்ற தலம் என்கிறது ஸ்தல புராணம். அதேபோல், வியாசர் இந்தத் தலத்துக்கு வந்து இன்னும் ஞானத்தைப் பெற்றார் என்கிறார்கள்.

வருண பகவானும் பராசரரும் இங்கே தவமிருந்து வணங்கி மகாசக்தியை ஆராதனை செய்திருக்கிறார்கள். அகத்திய மாமுனிவர், இங்கே கடும் தவம் புரிந்து, அன்னை பராசக்தியின் பேரருளைப் பெற்றிருக்கிறார் என்கிறது ஸ்தல புராணம்.

அதனால்தான், ஒவ்வொரு முறை நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இந்தக் கோயிலின் சண்முக சிவாச்சார்யர், 108 அல்லது 1008 என சிதறுகாய் உடைக்கச் செய்வார். அதாவது, கோயில் வாசலில் மூடைமூடையாக தேங்காய் வாங்கி வைத்திருப்பார் சண்முக சிவாச்சார்யர். பக்தர்களிடம், ‘ஆளுக்கொரு சிதறுகாய் உடைத்துச் செல்லுங்கள். அப்படியே மழை பெய்ய வேண்டும் என்று அம்பாளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்’ என்பார்.

‘’நானோ நீங்களோ மட்டும் பிரார்த்தனை செய்வது ஒருபக்கம். ஆனால் கூட்டுப் பிரார்த்தனைக்கு இருக்கிற வலிமை மிக மிக சக்திவாய்ந்தது. எல்லோரும் ஒத்த குரலில், ஒரே கோரிக்கையை அம்பாளிடம் வைக்கும் போது, அந்த கூட்டுப் பிரார்த்தனை அதிக வீரியத்துடன் செயல்படும். விரைவிலேயே நல்ல மழை பொழிந்து, பூமியைக் குளிரச் செய்வாள் காளிகாம்பாள்’ என்கிறார் சண்முக சிவாச்சார்யர்.

இத்தனை பெருமை மிகுந்த தலத்தில், குபேரன் வழிபட்டு அருள்பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அதனால்தான் இந்தப் பகுதியின் வியாபாரிகள் தினமும் காளிகாம்பாளைத் தரிசித்துவிட்டு, கடையைத் திறக்கிறார்கள் போலும்!

அதுமட்டுமா?

மொத்த விற்பனை செய்யும் இடமாகத் திகழ்கிறது சென்னை பாரிமுனை. கல்யாணப் பத்திரிகைக்கான கார்டு தொடங்கி, பிளாஸ்டிக், பேப்பர் கப்புகள், தட்டுகள், அலங்காரப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான மோட்டார் சாதனங்கள், பூஜைக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் என மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது. இங்கிருந்து வாங்கிக் கொண்டு, நங்கநல்லூர், கோடம்பாக்கம், வேளச்சேரி, கொளத்தூர், தாம்பரம், அம்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு என சென்னையைச் சுற்றியுள்ள ஏகப்பட்ட ஊர்களில், பகுதிகளில் வியாபாரம் செய்கிறார்கள். எனவே, பாரிமுனைப் பகுதியில் காளிகாம்பாள் கோயிலைச் சுற்றியுள்ள மொத்த வியாபாரம் செய்யும் வணிகர்கள், காலையில் வந்து அம்பாளைத் தரிசித்து, கடைசாவியை அம்பாளின் சந்நிதியில் வைத்து, வேண்டிக் கொண்டு, பிறகு கடை திறக்கிறார்கள்.

தவிர, இங்கே உள்ள கடைகளில் வருடந்தோறும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காலண்டர் தருவார்கள்தானே. அந்தக் காலண்டரில் பெரும்பாலும் காளிகாம்பாளே நிறைந்திருப்பாள். தங்களுக்குக் கிடைத்த வளமும் நலமும் சுபிட்சமும் ஐஸ்வரியமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கட்டும் என காலண்டரில் அம்பாள் திருமுகம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள், இந்தப் பகுதி கடைக்காரர்கள்.

குபேரன் வழிபட்ட அம்பாள், குபேரனுக்கு அருளிய அம்பாள், குபேரனுக்கு மட்டுமா அருள்வாள். நம்மையும் காத்தருளும் கருணைக்கடல் அல்லவா அவள். நம்பிக்கையுடன் அவள் கோயிலுக்கு வந்து, அவளின் சந்நிதியில் மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கடனையெல்லாம் தீர்க்க வழிவகைகள் செய்வாள் காளிகாம்பாள்.

உங்கள் கண்ணீர், காளிகாம்பாளின் சந்நிதியில் விழுவதை ஒருபோதும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டாள், அந்த மகாசக்தி!

- தரிசனம் தொடரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x