Last Updated : 01 Feb, 2018 01:42 PM

 

Published : 01 Feb 2018 01:42 PM
Last Updated : 01 Feb 2018 01:42 PM

எனையாளும் சாயிநாதா..! 12: ஓம் சாய்ராம்... ஜெய் சாய்ராம்..!

பாபாவின் அருள் சொல்லும் அற்புதத் தொடர்

புண்ணிய ஸ்தலமானது, ஒருகட்டத்தில் வணிக ஸ்தலமாக மாறிவிடும் என்பார்கள். இது ஒருவகையில் உண்மைதான். தமிழகத்தில் முக்கியமான வழிபாட்டு ஸ்தலங்களை எடுத்துக் கொண்டால், அந்த ஸ்தலங்களுக்கு வரும் கூட்டத்தை கருத்தில் கொண்டு, கூட்டத்தின் வரவைக் கொண்டே, வியாபாரம் மிகுந்த இடமாக மாறிவிடுவது இயல்புதான்.

அதேபோல், அந்த ஊருக்கு வாழ்வாதாரமாக விளங்குவதே கோயிலைச் சுற்றி நடக்கிற வியாபாரங்கள்தான். ஒரு சூடம், தேங்காய் முதல், தங்குவதற்கு அறை, உண்பதற்கான ஹோட்டல் என எல்லாமே, எல்லோருமே தலத்தை நம்பி இருப்பவர்களே! தமிழகம் என்றில்லாமல் நிறைய மாநிலங்களில் இதுவே நிலைமை.

சாயிபாபா எனும் மகானின் ஷீர்டிக்குப் போயிருக்கிறீர்களா. அங்கே, சாய்நகர் ரயில்நிலையத்தில் இருந்தோ பேருந்து நிலையத்தில் இருந்தோ வெளியே வந்ததும் ஆட்டோக்காரர்களே நம்மை வரவேற்பார்கள். இங்கே அது விஷயமில்லை. பெரும்பாலும் ஷீர்டியில் உள்ள ஆட்டோக்காரர்கள் எவரும் இஷ்டத்துக்கு கட்டணம் கேட்டு, நம்மிடம் பணம் பறிப்பதில்லை என ஷீர்டிக்குச் சென்று வந்த பக்தர்கள், தெரிவிக்கிறார்கள்.

ஆட்டோக்காரர்களுக்கு ஒரு வணக்கத்தைச் சொல்லிக் கொள்வோம்.

ஷீர்டியில், வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். வேண்டுதல் உள்ளவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், இந்த நாளைத் தேர்ந்தெடுத்து, பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

ஷீர்டிக்கு வருடத்துக்கு ஏழெட்டு முறை சென்று வரும் நண்பர் ஒருவர் சொன்னார்... கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஷீர்டிக்குச் சென்று தரிசித்து வருகிறேன். அப்போதெல்லாம் வட இந்தியக்காரர்களே அதிகம்பேர் வருவார்கள். இப்போது, அதாவது கடந்த ஐந்தாறு வருடங்களில், தென்னிந்தியாவில் இருந்து அதிக மக்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம்... எனக்குத் தெரிந்து இனப் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் சாயிபாபாவை தரிசிக்க வருகிறார்கள். அதேபோல், மத வித்தியாசமில்லாமல், பாபாவைத் தரிசிக்கிறார்கள்.

இத்தனை வருடங்களாகப் போய்வந்தாலும் நாங்கள் எந்தப் ப்ளானும் செய்தெல்லாம் சென்று வர முடியாது. ‘பகவானே... சாயிநாதா... உன்னைச் சரணடைந்த எங்களுக்கு தரிசனத்தைக் கொடு’ன்னு மனமுருகிக் கேக்கணும். அப்பதான் ஷீர்டிக்கு போகவே முடியும். பகவான்கிட்டேருந்து விசா மாதிரி, ஒரு அனுமதி கிடைக்கணும். அந்த அனுமதி வரணும்னா, உண்மையா, உண்மையானவனா, உண்மையான பக்தி கொண்டவனா நாம இருக்கணும் என்று நா தழுதழுக்கச் சொல்கிறார். அந்த நண்பர் மட்டுமின்றி, அவரைப் போல பலரும் இதே கருத்தைத்தான் சிலிர்க்கச் சிலிர்க்கச் சொல்கிறார்கள்.

இப்படித்தான் பெங்களூருவைச் சேர்ந்த அன்பர் ஷீர்டிக்குச் செல்லவேண்டும் என்று விமானத்தில் மொத்த குடும்பத்துக்கும் டிக்கெட் போட்டுவிட்டார். நாள் நெருங்க நெருங்க... எந்தந்த ஊரெல்லாம் அருகில் உள்ளன, அங்கே என்ன மாதிரியான இடங்களையெல்லாம் பார்க்கலாம், முக்கியமான கோயில்கள் எங்கே இருக்கின்றன, எப்படிச் செல்வது என்று திட்டமிட்டு வைத்தார். ஆனால் விமானம் ஏறுவதற்கு முதல்நாள், கம்பெனி முதலாளியிடம் இருந்து அழைப்பு. ‘மனைவிக்கு உடல்நலமில்லை. ஆகவே நான்கைந்து நாட்கள் ஆபீஸ் வரமாட்டேன். நான் ஆபீஸ் வந்தபிறகு, நீங்கள் லீவு எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

அந்த வீடே அதிர்ந்து போனது. அன்று மாலையில், அவருடைய அப்பா சொந்த ஊரிலிருந்து போனில் பேசினார். ‘என்னப்பா... எல்லாரும் ரெடியாகிட்டிருக்கீங்கதானே. நாளைக்கி காலைல எத்தனை மணிக்கு ஃப்ளைட்டு’ என்று கேட்க, மகன் விவரத்தையெல்லாம் சொல்லி, டிக்கெட் கேன்சல் செய்து, நட்டம் அடைந்தது வரை விவரித்தார்.

எதிர்முனையில் இரண்டு நிமிடம் மெளனம். பிறகு அப்பா சொன்னார்...

‘கம்பெனி காசு தருது. அதனால ஃப்ளைட்ல போற மாதிரி ஒரு டூர் ரெடி பண்ணினே. ஷீர்டிக்குப் போகணும். பாபாவை தரிசனம் பண்ணனும். நம்ம குடும்பத்துக்கு பாபாவோ அருள் வேணும்னு நீ கிளம்பியிருந்தா, எந்தத் தடையும் இல்லாமப் போயிருப்பே...’ என்று சொன்னார் அவரின் அப்பா.

உண்மைதான்.

‘நீங்கள் எப்போது என்னை முழுமையாக நம்பிக்கை கொண்டு நினைக்கிறீர்களோ... அப்போது நானே உங்களைத் தேடி வருவேன்’ என்கிறார் ஷீர்டி பாபா. முழுமையாக என்றால் ஆத்மார்த்தமாக என்று அர்த்தம். ஆத்மார்த்தமாக என்றால் சரணடைதல் என்று அர்த்தம். சரணடைவதே உண்மையான பக்தி. பாபாவைச் சரணடைந்தால்தான், அவரின் பரிபூரண அருளைப் பெறமுடியும்.

மனைவியிடமும் குழந்தைகளிடமும் உண்மையான அன்புடன் இருக்கவேண்டும். அக்கம்பக்கத்திலும் அலுவலகத்திலும் கூடுமானவரை, உண்மையாய் அன்பு செலுத்தவேண்டும். இந்த இடங்களிலெல்லாம் உண்மையாய் இருந்தால்தான், அன்பைப் பெறமுடியும். அதேபோல், சத்புருஷன் சாயிபாபாவிடம் உண்மையான பக்தி கொண்டு, அவரை மனசுக்குள் நினைத்தாலே, அவரின் அருள் நமக்கு அன்றைய நாளிலேயே ஏதோவொரு ரூபத்தில் நம்மை வந்துசேரும்.

பாபாவின் சந்நிதியில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் வரை நின்று, பாபாவைத் தரிசனம் செய்யலாம். உண்மையான பக்தியுடன், நம்பிக்கையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பாபாவுக்கு முன்னே நில்லுங்கள். ‘சாய்ராம்... சாய்ராம்... சாய்ராம்...’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

‘நான் உன் பிள்ளைதானே. என்னை கைதூக்கிவிடு பாபா’ என்று உள்ளே சொல்லுங்கள். பாபாவுக்குக் கேட்கும்.

‘என் தகுதிக்கேத்த சம்பளமும் இல்லை, வேலையும் இல்லை. நான் என்ன செய்றது’ என்று பாபாவிடம் முறையிடுங்கள். உங்கள் தகுதியை இன்னும் உயர்த்துவார். அப்படியே அந்தத் தகுதிக்குத் தக்கபடியான உத்தியோகத்தையும் சம்பளத்தையும் பெறுவதற்கான வழி... உங்கள் வாசலுக்கே வந்து அழைக்கும்!

பாபா என்பவர்... அருளாளன். பேரருளாளன். பெருங்கருணையுடன் உங்களை அவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நீங்கள் பார்க்க வேண்டும் என்பது இல்லை. அவன் உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறான்.

ஓம் சாய்ராம்... ஜெய் சாய்ராம்..! என்று ஒரேயொரு முறை சொல்லிவிட்டு, உங்கள் காரியத்தில் இறங்குங்கள். அங்கே சாயிபாபா வந்து, உங்களை வழிநடத்திச் செல்வார். வழிகாட்டுவார்.

ஓம் சாய்ராம்... ஜெய் சாய்ராம்..!

-அருள்வார்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x