Published : 01 Feb 2018 11:21 AM
Last Updated : 01 Feb 2018 11:21 AM

கருமை தெய்வீகமானது!

‘கார் மேகக் கண்ணன்’, ‘காடுடைய சுடலைப் பொடி பூசிய சிவபெருமான்’, ‘பச்சை மாமலைபோல் மேனி கொண்ட திருமால்’, ‘மரகத மீனாட்சி’ போன்ற வர்ணனைகள் கடவுளர்களின் கருமை நிறத்தைக் கொண்டாடுவதாக அமைந்துள்ளன. ஆனால், நம்முடைய வீடுகளில் உள்ள படங்களிலும், காலண்டர்களிலும் சிவபெருமான், முருகன், கிருஷ்ணன், விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி போன்ற அத்தனை தெய்வங்களும் இளஞ்சிவப்பு நிறச் சருமம் கொண்டவர்களாகவே உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்று நாம் வழிபடும் கடவுளர்களின் ஓவியங்கள் 19-வது நூற்றாண்டில் ராஜா ரவிவர்மா தீட்டிய சித்திர பாணியிலிருந்து எடுக்கப்பட்டவை. பார்சி மேடை நாடகத்தின் அம்சங்கள் அவருடைய ஓவியங்களில் பிரதிபலித்தன. அதன் நீட்சியாகவே அவருடைய தூரிகை இந்துக் கடவுளர்களை இளஞ்சிவப்பு நிற மேனி கொண்டவர்களாகத் தீட்டியது.

மறுபுறம் சிவப்புதான் அழகு, சிவப்புதான் உயர்வு என்கிற எண்ணம் இந்திய மனதில் பதிந்துள்ளது. உலகின் எண்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் கருமை நிறம் கொண்டவர்களாக இருக்கும்போது ‘சிவப்புதான் அழகு’ என்பது ஏற்றத்தாழ்வை, பாகுபாட்டையும் உருவாக்குவதாக கருத்து நிலவுகிறது. இதைச் சுட்டிக்காட்டிக் கடந்த சில ஆண்டுகளாக, ‘Dark is beautiful’, #unfair and lovely போன்ற பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

Bharadwaj பரத்வாஜ் சுந்தர் கடவுளர்களின் ஒளிப்படங்கள்

இதன் வேறு கோணமாக, கருமை அழுகு மட்டுமல்ல தெய்வீகமும்கூட எனக் காட்ட முயற்சித்துள்ளார்கள் சென்னையைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் நரேஷ்நில், விளம்பரப் பட இயக்குநர் பரத்வாஜ் சுந்தர்.

“தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆன்மிகத் தொடர்களில் முருகன், சிவபெருமான், கண்ணன், மீனாட்சி உள்ளிட்ட அத்தனை கடவுளர்களும் வெளிர்நிறம் படைத்தவர்களாகப் புனையப்படுகிறார்கள். இதைப் பொதுமக்கள் கேள்விக்குள்ளாக்குவது இல்லை. படைப்பாளிகளாக இதற்கு எதிர்வினையாற்ற நினைத்தோம்.

வழக்கொழிந்துபோன பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறோம். ஏனென்றால், தமிழகத்தின் புராதன கோயில்களில் உள்ள கடவுளர்களின் சிலைகள் யாவும் கருமையான கருங்கல்லில் வடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், நம்முடைய வீடுகளில், காலண்டரில், சுவரொட்டியில் பார்க்கும் கடவுளர்களின் ஓவியங்கள் இளஞ்சிவப்பாகக் காட்சி தருவது ஏன் என்கிற கேள்வி மனதில் எழுந்தது. அதற்கு விடையாக, ‘Dark is Divine’ என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கருமை நிறமாக இந்து கடவுளர்களை ஒளிப்படங்களாகப் படைத்துள்ளோம்” என்கிறார் பரத்வாஜ்.

தன்னுடைய பால்ய நண்பரும் ஒளிப்பதிவாளருமான நரேஷூடன் படப்பிடிப்புக்கான திட்டமிடலில் கடந்த செப்டம்பர் மாதம் இறங்கினார் பரத்வாஜ்.  எந்தெந்தக் கடவுளர்கள், அவர்களுக்கான ஆடை, அலங்காரம், வடிவமைப்பு சார்ந்த அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றைச் சிரத்தையோடு இருவரும் திட்டமிட்டனர். இதில் மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டது மாடல்களை தேர்ந்தெடுத்தபோதுதான் என்கிறார் ஒளிப்பதிவாளர் நரேஷ்.

NareshNil நரேஷ்நில் right

“‘கருமையாக தோற்றமளிக்கும் கடவுளர்கள்’ என்கிற கருத்தாக்கத்துக்காக கருமையான மாடல்கள் தேவை என்று ஃபேஸ்புக்கில் அழைப்புவிடுத்தோம், நேரடியாகவும் தேடினோம். ஆனால், சினிமா மற்றும் மாடலிங் துறையில் சிவப்பழகு கொண்டவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைப்பதால், கருமையானவர்கள் இத்துறைக்குள் ஜொலிப்பது அரிது. சொல்லப்போனால் கருமையானவர்கள் இத்துறையில் நுழையக்கூட முயற்சிப்பதில்லை.

ஒருவழியாக நாங்கள் எதிர்பார்த்ததுபோல நல்ல மாடல்கள் கிடைத்தார்கள். ஆனால், இயல்பிலேயே கருமையானவர்கள்கூடக் கருமையாகத் தோற்றமளிக்க விரும்பவில்லை. அப்போதுதான், இந்த கருத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்பது அவசியமானது என்பதே உறுதிப்பட்டது” என்கிறார் நரேஷ்.

2017-ன் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியபோது புத்தாண்டுக்கான காலண்டரை வடிவமைக்க 12 கடவுளர்களுக்கு 12 மாடல்களை வைத்து ஒளிப்படம் எடுக்கலாம் எனத் திட்டமிட்டார்கள். ஆனால், நிதிப் பற்றாக்குறையினாலும் நேரம் போதாமையினாலும் ‘Dark is Divine’ அடிப்படையில் ஏழு கடவுளர்களின் ஒளிப்படங்களை மட்டும் உருவாக்கியிருக்கிறார்கள்.

லட்சுமி துர்க்கை முருகன் சிவபெருமான்

“இது முழுக்க முழுக்க சொந்தத் தயாரிப்பு என்பதால் முதலில் நினைத்ததுபோல காலண்டர் ஃபோட்டோ எடுக்க முடியவில்லை. நாங்கள் எதிர்பார்த்த மாடல்கள் கிடைப்பதும் சவாலாக இருந்தது. அதன் பின்னர், லட்சுமியாக ஸ்ருதி, துர்க்கையாக ஷோபனா, முருகனாக சஞ்சய், கிருஷ்ணனாக சித்தார்த், சிவபெருமானாக கென்னட், சீதையாக ஸ்ரீதேவி, லவ-குசாவாக மனிஷ்-அனிஷ் என்கிற சிறுவர்கள் ஆகியோர் வேடமிட்டு ஒளிப்படத்துக்குக் காட்சியளித்தார்கள். கடவுளர்களின் பாரம்பரியமான ஓவியங்களில் உள்ள அலங்காரம், வடிவமைப்பு, பின்னணிச் சூழல் ஆகியவற்றை தக்கவைத்து புதியதை உருவாக்க முடிவெடுத்தோம்.

அதனால் கிரீன் மேட் பயன்படுத்தவில்லை. ஃபிளக்ஸில் பின்புலத்தை அச்சடித்து, பழமையும் தெய்வீகமும் ஒளிரும் விதமாக ஒளி அமைப்பை வடிவமைத்தோம். இரண்டு நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். ஃபேஸ்புக்கில் பதிவேற்றினோம். பொதுமக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்” என்கிறார் பரத்வாஜ்.

ஒரு புறம் பாரம்பரியத்தை மீட்டெடுத்து மறுபுறம் சமூகத்தில் வேரூன்றி உள்ள நிறம் தொடர்பான கற்பிதங்களை கேள்வி கேட்கும் இந்தக் கருமையான தெய்வ ஸ்வரூபங்களை போற்றுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x