Published : 01 Feb 2018 11:11 AM
Last Updated : 01 Feb 2018 11:11 AM

தெய்வத்தின் குரல்: உள்ளே நிறைவு வெளியே ஆனந்தம்

லவிதமான கர்மானுஷ்டானங்களை நான் சொல்கிறேன். இந்தக் கர்மங்கள், பரமேசுவர பூஜை, பரோபகாரம், எல்லாம் பிறருக்காகச் செய்யப்படுவதாகத் தோன்றினாலும் உண்மையில் தங்களுக்கே செய்துகொள்வதுதான். பிறருக்கு உபகாரம் செய்வதால், சேவை செய்வதால், அல்லது சுவாமிக்குப் பூஜை செய்வதால் அவனவனுக்கும் உள்ளுக்குள்ளே ஒரு நிறைவு ஏற்படுகிறது.

நீங்கள் எல்லாரும் எனக்குப் புஷ்ப ஹாரங்களை ஏராளமாகக் கொண்டுவந்து கொடுக்கிறீர்கள். உங்களைவிட நான் பெரியவன் என்று நினைத்துக்கொண்டு, பக்தியால் இப்படிச் செய்கிறீர்கள். நீங்களே இந்த மாலைகளைப் போட்டுக்கொள்ளாமல் இங்கே கொண்டுவந்து கொடுத்தால்தான் அலங்காரமாகிறது என்று நினைத்துச் செய்கிறீர்கள்.

இம்மாதிரி சந்தர்ப்பத்தில் நானும், ‘நாம் ரொம்பப் பெரியவர்தான்’ என்று நினைத்துக்கொண்டு, இந்த மாலைகளால் என்னை அலங்கரித்துக்கொண்டால், அது அகங்காரம்தான். ஆனால், நீங்களோ எனக்குச் செய்தால் விசேஷம் என்று பக்தியோடு கொண்டுவந்து கொடுக்கிறீர்கள். இவற்றை நான் திரஸ்கரிக்கலாமா? அதனால்தான் நீங்கள் என்னை அலங்கரித்துப் பார்க்க ஆசைப்படுகிற மாதிரி, நானும் இந்த மாலைகளை அம்பாளுக்குச் சமர்ப்பணம் பண்ணி அலங்காரம் பண்ணுகிறேன்.

நமக்கு நல்லது செய்வதாக நினைத்துப் பணம், புகழ், இந்திரிய சுகங்களைத் தேடிப் போவது மனசில் கரியை ஏற்றுகிற காரியம்தான். பரமாத்ம ஸ்வரூபமான உலகுக்குச் செய்கிற நல்லதேதான். உண்மையில் நமக்கும் நல்லது, ஆத்ம க்ஷேமமும் அதுவே. இதை நம்முடைய உள் மனமே அறிந்திருக்கிறது. அதனால்தான் தனக்கென்று செய்து கொள்கிற சவுகரியங்களில்கூட ஏற்படாத நிறைவு, பிறருக்காக அசவுகரியப்படும்போது ஏற்படுகிறது.

அனுபவிப்பதே தியானம்

உலகம் பரமாத்ம ஸ்வரூபம் என்றால் நாமும் அதே பரமாத்ம ஸ்வரூபம்தான். மனசு என்ற கண்ணாடியை எடுத்துவிட்டு, அந்தப் பரமாத்ம ஸ்வரூபமே நாம் என்பதை அனுபவித்துப் பார்க்க வேண்டும். இதுதான் தியானம் என்பது. நாம் செய்கிற இத்தனை காரியங்களும் கடைசியில் ஒரு காரியமுமில்லாத அந்த ஆத்ம தியானத்தில்தான் நம்மைச் சேர்க்க வேண்டும்.

கர்மம் தொலைந்த தியானம், யோகம், இத்யாதி. இதில் சித்தியானபின் எதுவுமே தன்னைப் பாதிக்காது என்ற நிலையில் லோக க்ஷேமத்துக்காகக் கர்மாவை உள்ளே அடக்கி வெளியே கூத்தடிக்கிற நிலை.

‘முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான். நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும் எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும்’ என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம்.

அவர் பெயரை வைத்துக்கொண்டிருக்கிற நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள், வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரம் இதுகளையே சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும்.

கர்மம் பக்தி ஞானம்

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் சாக்ஷாத் நம் பகவத்பாத ஆசாரியாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் பக்தி, முடிவில் ஞானம்.

இப்படி கிரமப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையோடும் பக்தியோடும் முன்னேறினால், அதற்குரிய பக்குவம் வருகிறபோது ஆத்ம தியானத்தில் ஈடுபட்டு உள்ளடக்கம் சித்திக்கும். அதன்பின் உலகுக்கு நன்மை செய்வது என்பதற்காக எத்தனை வெளிக் காரியத்திலும் ஈடுபடலாம்.

பராசக்தியாகிய சாந்தியை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, உள்ளே நிறைந்திருக்கும் சாந்தத்தை வெளியிலும் தன்னுடைய மோன ஸ்வரூபத்தில் காட்டிக்கொண்டு விளங்கும் தக்ஷிணாமூர்த்தியை, நாம் தினந்தோறும் சிறிது ஸ்மரிப்பதே ஆத்ம தியானத்துக்கு அழைத்துச் செல்லும் பெரிய உபாயம்.

கர்மா, பக்தி, தியானம் எல்லாம் முதலில் சேர்ந்து சேர்ந்து வரட்டும். இதெல்லாமே ஒன்றுக்கொன்று விரோதமில்லை. ஒன்றையொன்று இட்டு நிரப்புவது (complementary) தான். கடைசியில் ஒன்றொன்றாக மற்றதெல்லாம் உதிர்ந்து தியான சமாதியில் மட்டும் நிற்கும். அந்தச் சமாதியின் நினைப்பாவது நமக்கு இப்போது, ஆரம்ப கட்டத்தில் இருக்கவேண்டும். அதுதானே நம் லக்ஷியம்? அதனால் அன்றன்று சில க்ஷணமாவது சாந்தமாக, வேலைகளையெல்லாம் விட்டு தியானத்தைப் பயிற்சி செய்ய வேண்டும்.

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x