Last Updated : 01 Feb, 2018 10:27 AM

 

Published : 01 Feb 2018 10:27 AM
Last Updated : 01 Feb 2018 10:27 AM

குருவே... யோகி ராமா! 47: இந்தப் பிச்சைக்காரனிடம் ஒன்றுமில்லை!

பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்

‘’என் குருவுக்கு கோடி வந்தனங்கள்’’ என்று பப்பா ராம்தாஸ் சுவாமிகள் குறித்து வணங்கிச் சொல்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

This Beggar Died at The Lotus Feet Of Swamy Ramdoss, in 1952. Pappa Ramdoss Killed The Beggar.

All That Remain is Father Alone. Nothing Else. No One Else' என்று விவரிக்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

1952ம் வருடம், சுவாமி ராம்தாஸின் பாதக்கமலங்களில் சரணடைந்திருந்த வேளையில், இந்தப் பிச்சைக்காரன், செத்துப் போனான். சுவாமி ராம்தாஸ் இந்தப் பிச்சைக்காரனைக் கொன்றுபோட்டார். அதன் பிறகு, எதுவுமில்லை; எவருமில்லை என்று தெரிவித்துள்ளார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

அப்போது, ‘பிச்சை எடு’ என்று சொன்னார் அல்லவா பப்பா ராம்தாஸ் சுவாமிகள். ‘நீ பிச்சைக்காரன் தான்’ என்று தெரிவித்தார் அல்லவா அவர். ‘எங்கே போகப்போகிறாய்?’ என்று அவர் கேட்டதற்கு, ‘அருணாசலம்’ என்று திருவண்ணாமலைக்குப் போகப்போகிறேன் என்பதாக பகவான் யோகி ராம்சுரத்குமார் சொன்னார், நினைவிருக்கிறதுதானே.

ஆனால், ஆனந்தாஸ்ரமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1952ம் வருடம் வந்தவர், 1959ம் வருடம் வரை, தேசாந்திரம் போல் பயணப்பட்டார். கோயில்கோயிலாகச் சென்றார். மலைமலையான இடங்களுக்கெல்லாம் சென்றார். அங்கெல்லாம் ‘ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெயராம்...’ எனும் ராம நாமத்திலேயே மூழ்கினார். மோனநிலையிலேயே இருந்தார். இமயமலை முதலான மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று, அங்கேயே பலகாலம் தங்கியிருந்து, தவநிலையிலேயே இருந்தார்.

1959ம் வருடம் போல், திருவண்ணாமலையிலேயே இருக்கத் தொடங்கினார். மலையே சிவமெனத் திகழும் பூமியில், மகான்களை தன்னகத்தே வாங்கிக் கொண்டு அவர்களின் ஆட்சியை ரசித்த பூமியில் இந்த மகானும் அங்கேயே அமர்ந்தார். திடீரென மலைக்குச் செல்வார். விறுவிறுவென அத்தனை வேகத்துடன் மலையேறுகிற யோகி ராம்சுரத்குமாரைக் கண்டு எல்லோரும் அதிர்ந்து போனார்கள். ‘இது நடையுமில்லை, ஓட்டமுமில்லை. எவ்வளவு வேகம்’ என்று பிரமித்தார்கள்.

பகவான் ரமண மகரிஷி, இப்படித்தான் மலையேறும் போது, வேகவேகமாகச் செல்வார். அவரளவுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் எல்லோரும் திணறுவார்கள் என்று பேசிக்கொண்டார்கள். பகவான் ரமணரின் மலையேறுதலையும் பகவான் யோகி ராம்சுரத்குமார் மலையேறுவதையும் பார்த்தவர்கள், இப்படி ஒப்பிட்டு, விமர்சித்துக் கொண்டார்கள்.

மலையேறினால், உணவு இல்லாமல், தூக்கமில்லாமல், எந்தப் பிரக்ஞையும் இல்லாமல், அங்கே சிலநாட்கள் இருந்து கொண்டு, ராம நாமம் ஜபித்தபடியே இருப்பார்.

பிறகு மலையை விட்டு இறங்கி வருவார். ரமணாஸ்ரமம் செல்வார். ரயிலடிக்குச் சென்று, புன்னைமரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்வார்.

ஒருமுறை, ரமணாஸ்ரமத்துக்கு வந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார். இப்போது போல் அந்த சமயத்தில், வருவோருக்கெல்லாம் உணவு பரிமாறும்படியான நிலை இருக்கவில்லை. ‘யாரு நீ... சாப்பாடா... இல்ல இல்ல... கிளம்பு கிளம்பு...’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமாரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார் கணேசன். பகவான் ரமணரின் சகோதரர் மகன் இவர்.

அப்போது அங்கே இருந்த சுந்தரேச ஐயர் என்பவரிடம் ‘யாரோ என்னவோ... பைத்தியம் போல’ என்று கணேசன் சொன்னார். இதுகுறித்து பின்னாளில், கணேசனே சொல்லியிருக்கிறார்.

‘’அவரை சாப்பாடு இல்லை, கிளம்பு என்று அனுப்பினேன். ‘யாரோ பைத்தியம் போல’ என்று சுந்தரேச ஐயரிடம் சொன்னேன். உடனே அவர்... ‘அவர் பைத்தியமா. யார் சொன்னது. அவர் யார் தெரியுமா. மிகப்பெரிய யோகி. அவர் எப்போது வந்தாலும் சாப்பாடு கொடு. அவர் பெயர்... பகவான் யோகி ராம்சுரத்குமார்’ என்று விளக்கினார். அதன் பிறகு பகவான் யோகி ராம்சுரத்குமார் எப்போது வந்தாலும், அவருக்கு உணவு வழங்குவதில் கவனம் செலுத்தினேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான், பகவான் யோகி ராம்சுரத்குமாரை உணர்ந்து, அவருடைய பக்தரானேன்’ என்கிறார் கணேசன்.

இங்கே ஒரு விஷயம்... ராம்சுரத் குன்வர் என்பவரை, அந்த மகானை யோகி ராம்சுரத்குமார் என்று பெயர் சொன்னவர் சுந்தரேச ஐயர்தான். இவர்தான் இந்தத் திருப்பெயரை, முதன்முதலில் சொன்னார். அன்றில் இருந்து இது அப்படியே பரவியது. இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கிற பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்களும் அன்பர்களும் இந்தப் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள். வணங்குகிறார்கள். வழிபடுகிறார்கள்.

’நான் எங்கே போவேன். எனக்கு வாழத் தெரியாது. பிச்சைதான் எடுக்கணும்’ என்றார் குரு. பப்பா ராம்தாஸ் சுவாமிகளிடம், ’ஆமாம்... பிச்சை எடு. நீ பிச்சைக்காரன் தான்’ என்றார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள். அதன்படியே அவருக்கான உணவை, அவர் பெற்றுக் கொண்டார் .

கிட்டத்தட்ட இது நடந்தது 1952ம் வருடத்தில். இதன் பிறகு பகவான் யோகி ராம்சுரத்குமாரை உலகத்தார் அறிந்து கொண்டு, திருவண்ணாமலைக்கு வந்து அவரைத் தரிசிப்பதற்கு பக்தர்கள் வந்த போதெல்லாம், ’இந்தப் பிச்சைக்காரனிடம் என்ன இருக்கிறது.ஒன்றுமில்லை’ என்று சொன்னார் பகவான் யோகி ராம்சுரத்குமார். ‘இந்தப் பிச்சைக்காரன் உங்களை ஆசீர்வதிக்கிறான்’ என்று அன்பைப் பொழிந்தார். அந்த அன்பு, ஆசீர்வாதமாய், பேரருளாய் இன்றளவும் பக்தர்களுக்கு, தன்னுடைய திருநாமம் சொல்லுவோருக்கு செலுத்திக் கொண்டே இருக்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

இன்றைக்கு பகவான் ரமணாஸ்ரமத்தில், தினமும் தமிழில் பாராயணங்களும் பகவான் ரமணர் குறித்த தமிழ்ப்பாடல்களும் பாடப்படுகின்றன. கேட்டிருக்கிறீர்களா. கேட்டால் மெய்சிலிர்த்துப்போவோம். மெய்ம்மறந்துவிடுவோம்.

ரமணாஸ்ரமத்தில், ரமண பகவான் குறித்து தமிழ்ப்பாடல்கள் பாடப்பட்டு வருவதற்கு யார் காரணம் தெரியுமா?

பகவான் யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

-ராம் ராம் ஜெய்ராம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x