Published : 06 Jan 2018 11:28 AM
Last Updated : 06 Jan 2018 11:28 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை -22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே

சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப்பூப்போல

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்

அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதிபோல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

அதாவது, அகன்று விரிந்த இவ்வுலகெல்லாம் தமக்கே உரியது என்று எண்ணி, இறுமாந்திருந்த மன்னர்கள் அனைவரும் உனது பெருமைகளால், உனது அரியணையின் கீழ், பாங்காக அமர்ந்துள்ளனர்.

அவர்களே உனது மேன்மையை நினைத்து (உனது எதிரிகளை வென்று கைப்பற்றியதால், உனக்கே உரித்தான அரசுகளையும் செல்வங்களையும் மீண்டும் அவர்களுக்கு திருப்பிக் கொடுத்ததால், உன் மேன்மையை நினைத்து), உன்னிடம் அபிமானம் நிறைந்தவராக, உன் அரியணையின் கீழ், குழுமியுள்ளனர்.

அதேபோல், நாங்கள் உனக்குத் தொண்டு செய்வதே பாக்கியம் எனக் கருதி, சங்கங்களில் அமர்ந்திருப்பதைப் போல உனது பள்ளிக்கட்டில் கீழ் அமர்ந்துள்ளோம். ‘கிண்கிணி’ என சத்தம் கொடுக்கும் சதங்கையானது வாய் சற்றே திறந்த நிலையில் இருக்கும். அவ்வாறான சதங்கையின் வாய் போன்று, மலர்ந்து மலராத தாமரைப் பூப்போன்ற உன்னுடைய கண்களால், எங்களை சிறிதாகவேனும் பார்க்க மாட்டாயா? அதாவது, பகவான் எங்களை மெல்ல மெல்லக் கண் திறந்து பார்த்தாலே போதுமானது!

அதாவது, முழுவதுமாகக் கண் திறந்தால், அதை நாங்கள் தாங்கமாட்டோம் என்கிறாள் ஆண்டாள். அதாவது, மழைக்காக வாடிய பயிருக்கு, மழையானது சிறிதாகத்தான் பெய்ய வேண்டும். ஒரேயடியாக பேய் மழையாக, கொட்டித் தீர்த்தால், வெள்ளத்தால் பயிர்கள் நாசமாகிவிடும். எனவே சிறிதுசிறிதாகத் தேவையான அளவு, தேவையான போது பெய்தால்தானே பயிர்கள் செழித்து வளரும். எனவே, அவ்வாறு பார்த்தாலே போதும் என்கிறார் ஆண்டாள்.

’நீங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல...’ மகாவிஷ்ணுவின் இரண்டு கண்களும் சூரியன் மற்றும் சந்திரனாகப் பிரகாசிக்கிறது. இரண்டுமே உதய காலத்தில் குளிர்ந்த கிரணங்களைப் பெற்றிருக்கும். எனவே, ‘எழுந்தாற்போல்’ உதயமான சூரிய சந்திரனைப் போன்று, இரண்டு கண்களால் எங்களை நோக்கினால், நாங்கள் சாபம் நீங்கியவர்களாக ஆவோம் என அழைக்கிறாள் ஆண்டாள் .

இந்தப் பாடலை, தினமும் பாடி கண்ணனை அதாவது மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால், இந்த ப் பிறப்பில் நாம் பெற்ற சாபங்கள் அனைத்தும் கண்ணனின் விழியசைவில் நீங்கி, அவனது அருளைப் பெறுவோம் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x