Last Updated : 06 Jan, 2018 09:11 AM

 

Published : 06 Jan 2018 09:11 AM
Last Updated : 06 Jan 2018 09:11 AM

சந்தோஷம் தருவார்... சாளக்ராம ஆஞ்சநேயர்!

சாளக்ராம ஆஞ்சநேயரை வழிபட்டால், வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் நிச்சயம் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சென்னை அருகில் உள்ள புதுப்பாக்கம் மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சந்நிதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சந்நிதியையும் தரிசித்து விட்டு கஜகிரி எனும் மலையை ஏறிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம். இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர். எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் அற்புதமாகக் காட்சி தந்தருள்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார்.

வீர ஆஞ்சநேயரின் வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி தரையில் படாமல், பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது. அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடன் தலைக்கு மேல் வால் தூக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்கிறார்.

கோயில் பிராகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகள் அழகிய சித்திரங்களாக செதுக்கப்பட்டு மிளிர்கின்றன. அவற்றில் சேது பாலம் அமைத்தலும், ஆஞ்சநேயர் சூரியனைப் பழம் என்றுக் கருதி பிடிக்கச் செல்லுதலும், சிவபெருமானின் உடம்பு முழுவதும் ஆக்கிரமித்தருளும் ஆஞ்சநேயர் சிற்பமும் உயிரோட்டமானவை.

அற்புதமான ஆஞ்சநேயரை, வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று இனிதே வாழ்வீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x