Last Updated : 10 Dec, 2017 12:08 PM

 

Published : 10 Dec 2017 12:08 PM
Last Updated : 10 Dec 2017 12:08 PM

குருவே... யோகி ராமா..! - 11 : ‘நம் வீட்டுக்கே வருவார் ஞானகுரு!’

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

‘அவர் ரொம்ப நல்லாப் பாடுவார்’ என்று அவரின் பாட்டுப் பாடும் திறமையைச் சிலாகிப்போம். ‘எனக்குப் பாட்டுதான் உலகமே. பாட்டைத் தவிர எதைக் கேட்டாலும் அதுல நான் ஜீரோதான்’ என்று அவரும் சொல்லுவார்.

ஓவியம் வரைவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அவர்களும் இப்படியான பதிலைத்தான் சொல்லுவார்கள். பாட்டு போல, ஓவியம் போல, இசையைப் போல, நாட்டியத்தைப் போல, எந்தவொரு விஷயத்தை எடுத்துக் கொண்டார்களோ அவற்றில் அசகாயசூரர்களாக இருப்பார்கள். அதில் இன்னும் இன்னும், அடுத்தது அடுத்தது என்று உயரம் தொடுவார்கள்.

இன்றைக்குக் கம்ப்யூட்டரில் அத்தனை இடங்களும் அத்துப்படியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். நம்மை விட, நம் குழந்தைகள், செல்போன் எனும் உபகரணத்தின் உட்பொருட்கள் தொடங்கி, என்னென்ன பயன்பாடுகள் அவற்றில் உள்ளனவோ அவற்றையெல்லாம் சட்டென்று தெரிந்து கொள்கிற புத்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எடுத்துக் கொண்ட துறை எதுவோ... அதில் விற்பன்னர்களாக இருப்பவர்களே அதிகம். அதுதான் நம்முடைய சுபாவம். அதுவே நமக்கான வெற்றியையும் தந்து கைதூக்கிவிடுகிறது.

ராம்சுரத்குன்வர் எனும் சிறுவன்... 16 வயது வாலிபன் தன்னைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டான். தான் செய்யும் எல்லாக் காரியங்களிலும் முழுதுமாகத் தன்னை ஒப்படைத்தான்.

விளையாடுகிற சமயத்தில் விளையாட்டு. அப்பா சொன்ன கதைகளைக் கேட்கும் போது, அதில் முழுகவனம். சாதுக்கள் உரையாடுவதைக் கேட்கும் போது, நன்றாக உள்வாங்கிக் கொண்ட விதம் அவனுக்கு கைவந்த கலையாயிற்று. ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, ஒவ்வொரு செயலையும் செய்யும் குணம் வளர்ந்து கொண்டே வந்தது.

காசியிலும் கங்கைக்கரையிலுமாக நிகழ்ந்த தேடலும் அப்படியானதுதான். புத்த கயா முழுக்கச் சுற்றும் போதும் ஆழ்ந்த ஈடுபாடும், தாகமும், விருப்பமும் கொண்டே தேடினான்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க... படிப்பிலும் கவனம் இருந்தது. பள்ளியிலும் வீடு இருக்கும் தெருவிலும்... ‘நல்லாப் படிக்கிறாம்பா’ என்று எல்லோரையும் சொல்லவைத்தன. இந்தப் பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பாக வளர்ந்த போதும், எந்தக் குறைவுமில்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினான் ராம்சுரத் குன்வர்.

அலகாபாத் யுனிவர்சிட்டியில் படிப்பு. பாடத்தை ஆழ்ந்து படிக்க... இவனுடைய கெட்டிக்காரத்தனத்தை, படிப்பின் மீதான ஆர்வத்தை ஆசிரியர்களே பார்த்து வியந்தார்கள். அடிக்கடி ஆசிரியர்களிடம் பாராட்டைப் பெறும் மாணவனாகத் திகழ்ந்தான் ராம்சுரத் குன்வர்.

நல்ல மாணவன்தான் நல்ல ஆசிரியராகவும் முடியும். பாடத்தை எவரெல்லாம் ஊன்றிக் கவனிக்கிறார்களோ அவர்களே நல்லதொரு பாடத்தை மற்றவர்களுக்குப் போதிக்கமுடியும். பின்னாளில், நமக்கெல்லாம் நல்லாசானாக, ஞானகுருவாகத் திகழ்ந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார். ‘என் தகப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறான்’ என்று தன்னை நாடி வந்தோருக்கெல்லாம் ஆசி வழங்கி அருளினார் பகவான்!

நல்ல மாணவரே... நல்ல குருவாக முடியும். தன்னை முன்னிறுத்தாதவரே... உலகை வழிநடத்த முடியும். பகவான் யோகி ராம்சுரத்குமார், ‘நான் ஒரு பிச்சைக்காரன்’ என்று தன்னைச் சொல்லிக் கொண்டார். ஆணவமோ கர்வமோ இருந்தால், இங்கே எதுவுமே கிடைக்காது என்பதை இந்த ஒரு வார்த்தையின் மூலமாகவே நமக்கெல்லாம் உணர்த்தினார்.

‘நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா’ என்று அலட்டுபவர்களே இங்கு அதிகம். ‘நான் யாருன்னு தெரியும்ல’ என்று தன்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களே நிறைந்திருக்கிறார்கள். ‘நான் எப்பேர்ப்பட்டவன்னு முதல்ல தெரிஞ்சுக்கோ’ என்று சவடால் பேசுபவர்கள்தான் பின்னாளில், ஒருகட்டத்தில் அதலபாதாளத்துக்குப் போயிருக்கிறார்கள்.

மனித வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் சகஜம்தான் என்றாலும் எதற்கும் ஆடக் கூடாது என்பதைப் புரிந்து உணர... ஓர் நிதானம் தேவையாக இருக்கிறது. பக்குவம் அவசியமாக இருக்கிறது. அப்படி நிதானம் இல்லாமல்தான் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். பக்குவம் இல்லை என்பதால்தான் எப்போதும் எதற்கெடுத்தாலும் பதைபதைத்துப் போகிறோம்.

இந்த நிதானத்தையும் பக்குவத்தையும் தருபவரே குருநாதர். பகவான் யோகி ராம்சுரத்குமாரை ஒருகணம், கண்கள் மூடி, மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அலைபாயும் நம் மனதை நிலைநிறுத்தி அருள்வார். திசை தெரியாத கப்பலுக்கு, கலங்கரை விளக்கென ஒளிர்வார். வழிகாட்டுவார்.

அலகாபாத் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றதை அடுத்து, பள்ளியில் தலைமை ஆசிரியர் உத்தியோகம் கிடைத்தது. ஒரு பள்ளியையே பள்ளி மாணவர்கள் மொத்தபேரையுமே கட்டிக் காத்தார் ராம்சுரத் குன்வர்.

இப்போது நம்மையெல்லாம் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறாரே பகவான் யோகி ராம்சுரத்குமார். அதுபோல் அப்போதே அந்த்ப் பள்ளியை, நிர்வாகத்தை, அங்கிருந்த ஆசிரியர்களை, மாணவச் செல்வங்களை நேர்படுத்தினார். நெறிப்படுத்தினார்.

நல்ல மாணவராக இருந்த ராம்சுரத் குன்வர், நல்லாசிரியராகவும் மலர்ந்தார். தலைமை ஆசிரியராகச் செயல்பட்டார். பின்னாளில்... பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு குருவானார். தலைமை பீடமான, ஞானியரின் தலைமைப் பீடமாகத் திகழும் திருவண்ணாமலையில் இருந்தபடி, ஞானகுருவாகத் திகழ்ந்தார். இன்றைக்கும் சூட்சுமமாய் இருந்து, நம் எல்லோரையும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

எந்த வீட்டில், யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா... என்று ஜபிக்கப்படுகிறதோ... அங்கே அந்த வீட்டின் கசடுகளையெல்லாம் கவலைகளையெல்லாம் களைவதற்கு, துக்கங்களையெல்லாம் விரட்டுவதற்கு நம் வீட்டுக்கே வந்துவிடுகிறார் பகவான் என்று சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

& ராம்ராம் ஜெய்ராம்

 

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x