Last Updated : 10 Dec, 2017 11:21 AM

 

Published : 10 Dec 2017 11:21 AM
Last Updated : 10 Dec 2017 11:21 AM

சுவாமி சரணம் 24: மகிஷி கேட்ட வரம்!

வட்டி குட்டிப் போடும் என்பது போல், குணமும் குட்டிப்போடும். ஒரு குணத்தைத் தொடர்பு கொண்டே அடுத்தடுத்த குணங்களும் அமையும். கொஞ்சம் இரக்க குணம் இருந்துவிட்டால், அடுத்தடுத்த குணங்களும் அந்த இரக்க குணத்துக்கு, ஈகை குணத்துக்கு, கருணை குணத்துக்கு பலம் சேர்ப்பதாகவே அமையும். இன்னும் இரக்கம் கூடும். மனிதர்கள் மீதான வாஞ்சை அதிகரிக்கும். எல்லோரிடமும் அன்பு வழங்கும். எதிர்பார்ப்பில்லாமல் பிரியம் காட்டும். அடுத்தவருக்கு சின்னதான துக்கமென்றாலும் துடித்துப் போகும் மனம் கொண்டதாக குணம் இருக்கும். இரக்கம்... இப்படியான குணங்களை ஒருங்கே கொண்டிருக்கும்.

அரக்க குணமும் அப்படித்தான். ஆனால், இன்னும் இன்னும் மோசமான குணமுடையவர்களாக்கி விடும். குணமே இல்லாதவர்களாக மாற்றிவிடும். எந்நேரமும் எவரையேனும் துன்புறுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்படி அவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து, மகிழ்ச்சியடைகிற மிக மோசமான குணம் அரக்க குணத்தில் இருந்து பிறந்து, எல்லோரையும் அழிக்கவே செய்யும்.

மகிஷி என்பவள் அரக்கி. அரக்க குணங்களை மட்டுமே கொண்ட வம்சத்தில் இருந்து வந்தவள். அவளிடம் அன்பும் கருணையும் இருந்தால்தான் ஆச்சரியம். கனிவும் கருணையும் கொண்டிருந்தால்தான் அதிசயம். அரக்க சிந்தனையின் உச்சத்தில் இருந்துகொண்டு ஆடினாள். ஆட்டம் போட்டாள்.

போதாக்குறைக்கு அவளுடைய அண்ணனின் அழிவு இன்னும் ஆத்திரமூட்டியது. அண்ணன் அழிவுக்குக் காரணமே இந்த மோசமான குணம்தான் எனும் உண்மை, அவளின் புத்திக்கு எட்டவே இல்லை. புத்தி என்றிருந்தால்தானே நல்லதும் கெட்டதும் தெரியும்.

மாறாக, அண்ணனின் அழிவுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறியும் அவளுக்குச் சேர்ந்துகொண்டது. தேவர்களையும் முனிவர்களையும் தேடித்தேடி வதைத்தாள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மண் தெரியாமல், சூறையாடினாள். மூவுலகையும் கிடுகிடுக்க வைத்தாள்.

அவளின் ஆட்டத்தைக் கண்டு எல்லோரும் கதிகலங்கிப் போனார்கள். விட்டால்... இந்த உலகையே அழித்துவிடுவாள் என்று நடுங்கிப் போனார்கள். பதறித் துடித்தார்கள்.

இவை அனைத்துக்கும் காரணம்... மகிஷி வாங்கியிருந்த வரம். அவள் வாங்கிய வரம், அகிலத்துக்கே சாபமாகிப் போனது. தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடுங்கிப் பார்த்த கதையாக, வரத்தை யார் வழங்கினாரோ... அவருக்கு நெருக்கமானவர்களையும் நல்லவர்களையும் ஆட்டம் காணச் செய்தாள் மகிஷி.

‘அவளுக்கு வரத்தைத் தந்திருக்கக் கூடாது’ என்று எல்லோரும் புலம்பினார்கள். வரத்தைத் தந்தவரிடமே சென்று நியாயம் கேட்போம் என்று முடிவெடுத்தார்கள். இந்த அநியாயத்துக்கு முடிவு கட்ட ஏதேனும் வழிசெய்யுங்கள் என்று விமோசனம் கேட்பது என உறுதி கொண்டார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து, மகிஷிக்கு வரம் தந்தவரிடம் போய் நின்றார்கள். அவளுக்கு, அந்த அரக்கிக்கு வரம் தந்தவர் யார் தெரியுமா... பிரம்மா.

நம்மைப் படைத்த பிரம்மாதான் மகிஷிக்கு வரம் தந்தார். நம்மைப் படைத்த பிரம்மாதான், நம்மை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு திரியும் மகிஷிக்கு, இப்படியொரு வரத்தைக் கொடுத்தார். படைத்தவரே அழிப்பதற்குத் துணை போகலாமா என்று குமுறினார்கள்.

மகிஷி அப்படியென்ன கேட்டாள்... பிரம்மா சம்மதித்து என்ன வரம் தந்தார்.

அண்ணனை அழித்தவர்களையும் இந்த அகிலத்தையும் அழித்தொழிக்க வேண்டும். அதற்கு குறுக்கே எவரும் வந்துவிடக்கூடாது. அழிக்க நினைக்கும் நம்மை எவரும் அழித்துவிடக் கூடாது. எல்லோரையும் சாகடிக்க வேண்டுமெனில், நாம் சாகாமல் இருக்கவேண்டும். சாகாவரம் கேட்போம். எப்போதும் ஆளலாம். எவரையும் எதிர்க்கலாம். எல்லோரையும் அழிக்கலாம். அதற்கு வரம் கேட்கவேண்டும். சாகாவரம் வேண்டும்.

வரம் கிடைக்க தவம் செய்யவேண்டும். தவம் என்பது மனம் ஒருங்கிணைப்பது. ஒருபுள்ளியில் குவித்து, மேற்கொள்கிற விஷயம்... தவம். நல்ல விஷயம்தான் தவம். ஆனால் அந்த நல்லதைக் கொண்டுதான் கெட்டவிஷயங்கள் பண்ணமுடியும். நல்லது இருந்தால்தான் வரம் கிடைக்கும். வரம் கிடைத்தால்தான் அழிக்கமுடியும். அப்படி வரம் கிடைக்க தவமிருக்க வேண்டும்.

அந்த அடர்ந்த வனத்தில், பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் இருந்தாள் மகிஷி எனும் அரக்கி. நல்ல மனதுடன், நல்ல எண்ணத்துடன், நல்ல சிந்தனையுடன் தவமிருந்தால், அவை நல்ல நல்ல விஷயங்களை உண்டுபண்ணும். நல்ல மாற்றங்களுக்கு வித்தாக அமையும். ஆனால் துர்குணங்களுடன் துர்சிந்தனைகளுடன் தவத்தில் உட்கார்ந்திருக்கிற மகிஷியின் இந்த தவச்செயலானது, மூவுலகையும் அசைத்தது. அவளின் சிந்தனையால், எல்லா லோகங்களிலும் வெப்பம் சூழ்ந்திருந்தது. அந்தத் தகிப்பில், ஏதோ இன்னும் இன்னுமாக கெட்ட விஷயங்கள் அரங்கேறப் போகின்றன என்று உணர்ந்து பதைபதைத்தார்கள்.

வேறு வழியில்லை. தவத்துக்கு பலன் உண்டு. தவமிருந்தவருக்கு பலன் கொடுத்தேயாக வேண்டும். இக்கட்டான சூழ்நிலைதான் பிரம்மாவுக்கு. மனமே இல்லாமல், மகிஷியின் முன்னே வந்து நின்றார்.

‘உன் உறுதியான, நிலையான தவம்தான் என்னை உன் முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார் பிரம்மா.

‘‘ஒரேயொரு வரம்தான் வேண்டும். அது... சாகாவரம். மரணமில்லா வாழ்வு. இதுபோதும்’’ என்றாள் மகிஷி.

இதைக் கேட்டு சற்றே ஆடித்தான் போனார் பிரம்மா. ஆனாலும் சுதாரித்தபடியே சொன்னார்... ‘‘பிறப்பு உண்டெனில் இறப்பும் நிச்சயம். ஆக்கம் இருந்தால் அழிவும் சத்தியம். பிறந்தது இறக்கும். இறந்தது பிறக்கும். ஆக, பிறந்தால் இறக்கவேண்டும் என்பதே இயற்கை விதி. இந்த உலகில், சாகாமல் இருப்பவர் என்று எவருமே இல்லை. சாகாவரம் விடுத்து, வேறு ஏதேனும் கேள்’’ என்றார்.

சட்டமும் சட்டத்தின் நுணுக்கமும் சட்டத்தின் ஓட்டைகளும் நல்லவர்கள் அறிந்திருப்பதை விட, கெட்டவர்களே தெளிவாக அறிந்திருப்பார்கள். இதைக் கேட்டால் கிடைக்காது, தரமாட்டார், தரமுடியாது என்பதெல்லாம் மகிஷிக்கு நன்றாகவே தெரியும். அதனால் பெரிய மீனைப் போட்டு, சின்ன மீனைப் போட்டாள். ஆனால் அது சின்ன மீன் அல்ல... திமிங்கலம்!

தன் உயிருக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. தன்னை எவரும் சாகடிக்கக் கூடாது. சாகடிக்கவும் முடியாமல் இருக்க வேண்டும் என நினைத்தாள். அப்படியொரு வரத்தைக் கேட்டாள்.

அதென்ன... அந்த வரம்தான் அப்போது எல்லோருக்கும் சாபமானது. அந்தச் சாபம்தான் எல்லோருக்கும் விமோசனமாகக் கிடைத்தது. அந்த விமோசனம்தான்... ஐயப்ப சுவாமி.

- ஐயன் வருவான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x