Last Updated : 17 Aug, 2017 10:10 AM

 

Published : 17 Aug 2017 10:10 AM
Last Updated : 17 Aug 2017 10:10 AM

ராமகிருஷ்ண தபோவனத்துக்கு 75 வயது

ஞா

ன யோகத்தையும் சமுதாய மேம்பாட்டுக்கான கர்மயோகத்தையும் தம் வாழ்வின் வேள்வியாகக் கொண்டவர் திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர்.

கொங்கு நாட்டில் பொள்ளாச்சிக்கு அருகில் செங்குட்டைப்பாளையம் எனும் சிற்றூரில், 1898 மார்ச் 11 அன்று பிறந்தார். சித்பவனந்தரை வீட்டில் சின்னு என்று அழைப்பார்கள். பள்ளிப் பருவம் தொட்டே நல்லோர் உறவும் சான்றோர்கள் சந்திப்பும் சின்னுவுக்கு ஆன்மிக நாட்டத்தை ஊட்டின.

சற்குரு சுவாமிகள், சக்தி சுவாமிகள், பழநி சாது சுவாமிகள் போன்ற அருளாளர்களுடன் கலந்துரையாடுகிற பேற்றை மாணவப் பருவத்திலேயே பெற்றார். 1918-ல் உயர் கல்வி கற்க சின்னுவை இங்கிலாந்து நாட்டுக்குப் பெற்றோர் அனுப்ப முயன்றனர். லண்டன் செல்வதற்காகச் சென்னைக்கு வந்த சின்னு, ஒரு புத்தகக் கடைக்குச் சென்றார்.

அங்கே சுவாமி விவேகானந்தரின் ‘சென்னை சொற்பொழிவு’ என்ற நூல் அவரைக் கவர, அப்புத்தகத்தை வாங்கினார். அன்று இரவே அப்புத்தகத்தை முழுமையாகப் படித்தார். அதில் ‘நம்முன் நிற்கும் பணி’ என்ற முதல் கட்டுரை அவரது வாழ்க்கையையே திசை மாற்றியது. ஆம். இந்தியத் திருநாட்டின் குடிமகன் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வீரமிகு எழுச்சியுரை சின்னுவைத் திசைமாற்றியது. மேலைநாட்டுப் படிப்புத் தேவையில்லை என முடிவெடுத்தார்.

தடைபட்ட கல்லூரி வாழ்க்கை

1920-ல் சென்னை மாநிலக் கல்லூரியின் தத்துவத் துறையில் சேர்ந்தார். அவரது ஆன்மிக நாட்டத்துக்குச் சென்னை ராமகிருஷ்ண மடம் உறுதுணை செய்தது. அங்கே பரமஹம்சரின் சீடர்களான பிரம்மானந்த சுவாமிகளையும் சுவாமி சிவானந்தரையும் கண்டு அருளுரை பெற்றார். ஆன்மிக நாட்டத்தால் கல்லூரி வாழ்க்கை தடைபட்டுப்போனது.

17chsrs_swamyசுவாமி சித்பவானந்தர்

பேளூர் ராமகிருஷ்ண மடத்துக்கு சம்ஸ்கிருதம் படிக்கச் செல்வதாகக் கோடீஸ்வரத் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டுப் புரிக்குப் புறப்பட்டார். புரியில் சுவாமி சிவானந்தர் அருளாசி சின்னுவுக்குக் கிட்டியது.

சின்னுவைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டு பேளூர்த் திருமடத்துக்கு அழைத்துச் சென்ற சிவானந்தர், பிரம்மச்சரிய தீட்சை செய்து வைத்தார். சின்னு திரயம்பக சைதன்யர் என்றழைக்கப்பட்டார். பேளூர் ராமகிருஷ்ண மடத்தில் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளைக் கடமையுணர்வோடு தெய்வீகத் திருப்பணியாய்ச் செய்து வந்தார் திரயம்பக சைதன்யர்.

உதகை ஆசிரமத்தில் தங்கியிருந்த திரயம்பக சைதன்யருக்கு 1926 ஜூலை 25-ல் சுவாமி சித்பவானந்தர் என்ற திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தார் சுவாமி சிவானந்தர். 1926-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-ல் உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

1940-ல் சித்பவானந்தர், உதகையை விட்டுக் காவிரிக் கரை வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு திருப்பராய்த்துறைக்கு வந்து சேர்ந்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளால் பாடல் பெற்ற தெய்வீகத் திருத்தலம் அது. அங்கே அன்பர்கள் அரவணைப்போடு சுவாமி சித்பவானந்தர் தமது ஆன்மிகத் திருப்பணிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டார். திருப்பராய்த்துறை திருக்கோயில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் ஏழைச் சிறுவர் சிறுமியருக்காக ஓர் ஆரம்பப் பள்ளியை 1940-ல் தொடங்கினார் சித்பவானந்தர்.

தர்ம சக்கரம் சுழலத் தொடங்கியது

1943-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளி, மாணவர் விடுதி, அதைத் தொடர்ந்து 30 ஏக்கரில் காவிரிப் படுகையில் மேல்நிலைப் பள்ளி, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி என விரிவடைந்தது. 1,952-ல் அச்சகத்தோடு கூடிய தர்ம சக்கரம் என்னும் தமிழ் மாத இதழைத் தொடங்கினார்.

ரமண மகரிஷி, நாராயண குரு, மகாத்மா காந்தி போன்ற சான்றோர்களுடன் நெருக்கமாயிருந்தார். தமிழில் 92 நூல்களும் ஆங்கிலத்தில் 22 நூல்களும் இவர் படைத்தவை.

தவயோகி சித்பவானந்தர் தமது 87-வது வயதில் 16.11.1985-ல் ஆண்டு விதேகமுக்தி அடைந்தார்கள்.

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவதை முன்னிட்டுப் பவள விழா ஆகஸ்ட் 17 முதல் 20 வரை நிகழவுள்ளது. இவ்விழாவையொட்டி சுவாமி சித்பவானந்த மகராஜ் அவர்களின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் சேகரித்து ‘சித்பவானந்த ஞான அமுதம்’ என்ற தலைப்பில் 18 தொகுதிகள் வெளியிடப்படவுள்ளன. இந்த மகத்தான திருப்பணியைத் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன திருமடத்தின் தற்போதைய தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்தா, தபோவனச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி சத்தியானந்தா, தபோவன மகாசபையினர் அனைவரும் ஒருங்கிணைந்து செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x