Published : 06 Oct 2016 08:39 AM
Last Updated : 06 Oct 2016 08:39 AM

தெய்வத்தின் குரல்: மகான்களுக்கு அருளிய மகாலக்ஷ்மி

காஞ்சியில் காமாக்ஷி பொன்மழை பொழிந்தது பற்றி மூகர் ‘பஞ்ச சதீ'யில் பாடியிருக்கிறார். (கண்டீக்ருத்ய - ஸ்துதிசதகம்). “துண்டீர தேசத்தில் ஸ்வர்ண வர்ஷத்தைப் பொழிந்தவள்” என்கிறார். துண்டீரம் என்பதே தமிழில் தொண்டை மண்டலம் என்பது. பல்லவர்களின் தலைநகரான காஞ்சியைச் சுற்றிய சீமைக்குத் தொண்டை மண்டலம் என்று பெயர். இப்போதும் இந்தச் சீமையில் பொன் விளைந்த களத்தூர் என்றே ஒர் ஊர் இருப்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.



அத்வைத ஸ்தாபகாச்சாரியரான ஸ்ரீ சங்கரருக்காகக் காலடியில் பொன்மழை பெய்த மகாலக்ஷ்மி, காஞ்சிபுரத்தில் விசிஷ்டாத்வைத ஆச்சாரியரான ஸ்ரீவேதாந்த தேசிகனுக்காகவும் பொன்மழை பெய்திருக்கிறாள். வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் கரை கடந்தவர் என்பதாக, அவரை, ‘நிகமாந்த மஹா தேசிகன்' என்றே சொல்வார்கள்.

‘நிகமாந்த' என்றாலும் '‘வேதாந்த' என்றாலும் ஒன்றுதான். ‘ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்' என்றும் அவருக்குச் சிறப்பு உண்டு. குதிரை முகம் கொண்ட மகாவிஷ்ணுவான ஹயக்ரீவர் அவருக்குப் பிரத்யட்சம். வடகலை சம்பிரதாயத்திற்கு மூல புருஷர் அவர். தமக்கென்று திரவியமே வைத்துக் கொள்ளாமல், பிக்ஷை எடுத்துத்தான் ஜீவித்து வந்தார்.

பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் இருப்பார்கள். வேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர்' என்றால் வெளி சகாயம் எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

இந்த தேசிகன் அப்படி எதையும் சாதித்துவிட முடியாது என்று நிரூபித்துவிட வேண்டும். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரப் பட்டம் அவருக்குப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி மானபங்கப்படுத்த வேண்டும்' என்று அவருடைய விரோதிகள் நினைத்து, ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.

பரம ஏழையான ஒரு அசட்டுப் பிராம்மணப் பையன் கல்யாணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். பணம், புத்தி இரண்டும் இல்லாதவனுக்கு, யார் பெண் கொடுப்பார்கள்? தேசிகரின் விரோதிகள் இந்தத் தடிமண்டு பிரம்மச்சாரியைக் கொண்டு அவரை அவமானப்படுத்திவிடலாம் என்று நினைத்தார்கள்.

இந்தப் பையன் போய் அவரிடம் தனக்குப் பணமுடிப்பு வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணட்டும். அவரிடமோ திரவியம் இல்லை. இவனுக்காக அவர் பிறத்தியாரையும் யாசிக்கக் கூடாது. ‘ஸர்வதந்திர ஸ்வதத்திர' என்றால், அவராகவே எப்படியோ இவருக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும். அவரால் இப்படிச் செய்யமுடியாது.

உடனே, “எப்படி ஐயா பெரிய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்?” என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அந்தப் பிரகாரமே ஏழைப் பையனை அவர்கள் ஏவினார்கள். தேசிகனிடம் பிரம்மச்சாரி போய்த் தன் கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித்தான்.

வேதாந்த தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார். “ஸ்ரீஸ்துதி” என்கிற உத்தமமான ஸ்தோத்திரத்தால் மகாலக்ஷ்மியைப் பிரார்த்தித்தார். உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச்சாரிக்குக் கொடுத்தார். விரோதிகளால் பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று.

சங்கரர், தேசிகர் இவர்களின் கருணையிலிருந்து வாக்கு மழையாகப் பொழிந்தது. பொன்னும் மழையாகப் பொழிந்தது. அத்வைத ஆச்சார்யாள், பக்த அநுக்கிரகமாக லக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்தார் என்றால், விசிஷ்டாத்வைத ஆச்சார்யரோ, விரோதிகளின் ஆளாக வந்தவனுக்கும் அநுக்கிரகத்தோடு அதே லக்ஷ்மியை வேண்டினார்.

பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட பணத்தைக் கொடுக்கிற மனப்பான்மைதான் பெரிய லக்ஷ்மி. இந்த மனோபாவத்தையும் மஹாலக்ஷ்மி அநுக்கிரகம் செய்வாள். ஏழைப் பிராம்மணப் பெண்ணின் பொருட்டு அவளைச் செல்வத்துக்கு அதிதேவதையாக வைத்துக் கனக மழை பொழியும்படி வேண்டிக்கொண்ட சங்கரர், இதே ஸ்திதியில் தம் பொருட்டு அவளைப் பிரார்த்திக்கிறபோது, அவளைப் பணத்தின் அதிதேவதையாக மட்டும் நினைக்கவில்லை. மன மாசுகளையெல்லாம் நீக்குகிற ஞானாம் பிகையாக வைத்துப் பிரார்த்திக்கிறார். (‘ஸம்பத்கராணி' என்கிற ஸ்லோகம்)

வைஷ்ணவர்கள் விஷ்ணுவைத் தகப்பனார் என்று சொல்லாமல் ‘பெருமாள்' என்றே சொன்னாலும், மகாலக்ஷ்மியைத் ‘தாயார்', ‘தாயார்' என்றே சொல்வார்கள். அவள்தான் ஸ்ரீ மாதாவான பராசக்தி. ஆச்சார்யாளும் இங்கு மாதா என்று அழைத்து, (மாமேவ மாதர் அனிசம்) “உன்னை நமஸ்காரம் பண்ணிவிட்டால் போதும். அந்த நமஸ்காரங்கள் சம்பத்து, சகல இந்திரிய சந்தோஷங்கள், சாம்ராஜ்யம் எல்லாம் தந்து விடும்.

ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு உன்னிடமிருந்து ஒரே ஒரு செல்வம்தான் வேண்டும். என் பாபங்கள் எல்லாவற்றையும் கிள்ளி எறிவதற்கும் உன்னை நமஸ்கரிப்பதே சாதனமாகிறது. செல்வ தேவதையான நீ எனக்குத் தருகிற செல்வம் இந்த நமஸ்காரம்தான். இது என்னை விட்டு நீங்காமல் இருக்கட்டும்” என்கிறார்.

எல்லோரும் துராசைகளில்லாமல் ஜீவனோபாயம் நடத்துவதற்கு மகாலக்ஷ்மியை உபாசிக்க வேண்டும். ஆச்சாரியாள், தேசிகன் மாதிரி சொந்த நலனுக்காக இன்றி, பரோபகாரமாக அவளைத் துதிக்க வேண்டும். எந்தச் செல்வம் வந்தாலும், வராவிட்டாலும், நம்மிடம் பாபமே சேராமல் நிர்மலமாக இருக்கிற செல்வத்தை விரும்பி அவளை நமஸ்கரிப்போம்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x