திருத்தலம் அறிமுகம்: திருவள்ளுவருக்கு ஒரு திருக்கோயில்

Published : 27 Aug 2015 12:38 IST
Updated : 27 Aug 2015 12:38 IST

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் பிறப்பிடம் எதுவென்பதில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்தாலும் சென்னை மயிலாப்பூரில்தான் அவர் பிறந்தார் என்று கருதுபவர்கள் அவருக்கு ஆலயத்தையும் கட்டி இருக்கிறார்கள்.

சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள்தான் இருந்தது திருவள்ளுவர் திருக்கோயில். இப்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தோரண முகப்பைக் கடந்து உள்ளே செல்லும் போதே வலது பக்கம், மூடி போட்டு பாதுகாக்கப்பட்ட வட்டக்கிணறு நம் கண் ணில்படுகிறது. இந்தக் கிணணுக்கும் வள்ளுவர் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதைக்கும் தொடர்பு உண்டு.

ஒருமுறை, வள்ளுவர் மனைவி வாசுகி கிணற்றில் தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்தார். அப்போது வள்ளுவர் அவரை அழைத்தார். கணவரின் குரல் கேட்டு கிணற்றுக் கயிறை அப்படியே விட்டு விட்டு ஓடினார் வாசுகி. அவர் திரும்பி வரும் வரை கிணற்றுக்குள் விழாமல் வாளி அப்படியே அந்தரத்தில் நின்றது. அதை நினைவூட்டும் வண்ணம் இந்தக் கிணறு உள்ளது.

சின்முத்திரையில் திருவள்ளுவர்

கிணற்றைக் கடந்து சற்று நடந்தால் வலது பக்கத்திலேயே ஒரு பகுதியில் பட்டுப் போன இலுப்பை மரத்தின் அடிப்பகுதியை தகடு அடித்துப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்த மரத்தடியில்தான் வள்ளுவர் பிறந்தார் என்பது கோயில் கட்டியவர்களின் நம்பிக்கை. இதையும் கடந்து சற்றே நடந்தால் வள்ளுவர் சந்நிதி. சின்முத்திரை தரித்து பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் வள்ளுவர். அவருக்கு இடது பக்கமாய் வாசுகிக்கும் சந்நிதி இருக்கிறது.

கோயிலின் சுற்றுச்சுவர் முழுவதும் திருக்குறள் வரிகள் எழுதப்பட்டுள்ளன. சைவ ஆகமப்படி பூஜைகள் நடந்தாலும் வள்ளுவருக்காக எழுதப்பட்ட வாழ்த்துப்பா சொல்லியே பூஜைகள் செய்கிறார்கள். வள்ளுவர் குருவாக அமர்ந்திருப்பதால் கல்வி அறிவு கிட்ட இங்கு பிரார்த்தனை வைத்தால் பலிக்கும் என் கிறார்கள். திருவள்ளுவர் தினம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுஷம், முக்தி அடைந்த மாசி உத்தரம் ஆகியவை இங்கே விசேஷ காலங்கள். உற்சவ மூர்த்திகள் உலாவும் உண்டு. பங்குனி உத்தரத்தின் போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய அறுபத்து மூவர் விழாவில் 64-வது உற்சவர்களாக வள்ளுவரும் வாசுகியும் வலம் வருகிறார்கள்.

சிவாலயம் போலவே எழுப்பப் பட்டுள்ள வள்ளுவர் திருக்கோயில் வளாகத்தில் வேம்பு, அத்தி, அரசு மரங்கள் ஒரே வேரில் முளைத்து பின்னிப் பிணைந்து நிற்கின்றன. இந்த அதிசயத்தை மும்மூர்த்திகளின் அவதாரமாகக் கொண்டாடுகிறார்கள் மக்கள். வள்ளுவரைத் தரிசிக்க சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அன்பர்கள் வந்து போகிறார்கள். அத்தனை பேருக்கும் கடவுள் அவதாரமாய் இருந்து அருள்பாலிக்கிறார் அய்யன் திருவள்ளுவர்.

படங்கள்: எல்.சீனிவாசன்

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor