திருத்தலம் அறிமுகம்: கண்ணதாசன் கவி பாடிய அம்மன்

Published : 28 Jan 2016 11:35 IST
Updated : 28 Jan 2016 11:35 IST

பத்து வயதானதொரு பாலகன்உன் சந்நிதியில் பாடியதும் நினிவி லையோ?

பாதியிர வானதெனத் தாய்மனது வாடுகையில் பக்திசெய வந்த திலையோ?

முத்தான இட்டபெயர் முத்தாக வேண்டுமென முறையீடு செய்ய விலையோ?

முற்றாக கேட்ட பின்னும் நற்றாய்நீ தந்ததமிழ் முறையாக வந்த திலையோ?

சக்தியென வந்தவள் விசாலாட்சி தேவியோடு சாத்தப்பன் பெற்ற மகனைத் தமிழ்பாட வைத்ததொரு சிறுகூடற் பட்டிவளர் தங்கமலை யரசி உமையே!

பத்து வயதில் தனக்குக் கவிதை எடுத்துக் கொடுத்த மலையரசி அம்மனுக்காகக் கவியரசு கண்ணதாசன் பாடிய வரிகள்தான் இவை. பிள்ளையார்பட்டிக்கு மூன்று கிலோ மீடர் தொலைவில் உள்ள சிறுகூடல்பட்டி கண்ணதாசன் பிறந்த ஊர். இவ்வூரின் நடுவில் கோயில் கொண்டிருக்கிறாள் மலையரசி அம்மன். கோனாபட்டு கொப்புடையம்மன், கண்ட்ரமாணிக்கம் மாணிக்க நாச்சி, நாச்சியார்புரம் பெரியநாச்சி உள்ளிட்ட ஆறு பேருடன் ஏழாவதாய்ப் பிறந்தவள் மலையரசி. இந்த ஏழு பேருமே இப்போது திசைக்கொரு தெய்வமாய்த் திகழ்கிறார்கள்.

ஆரம்பத்தில் கூரைக்குடிலில் இருந்த மலையரசிக்குப் பிற்பாடுதான் கோயில் கட்டி இருக்கிறார்கள். கோயிலுக்குக் கோபுரம் எழுப்பக் கூடாது, கருவறையில் உருவச் சிலை வைக்கக் கூடாது என்று இரண்டு நிபந்தனைகளோடுதான் தனக்குக் கோயில் கட்ட மலையரசி சம்மதித்ததாக நம்பிக்கை உள்ளது.

உருவச் சிலை, கோபுரம் இல்லாத அம்மன்

அம்மனின் நிபந்தனைப்படியே கருவறையில் பீடத்தை மட்டுமே அமைத்திருக்கிறார்கள். கோபுரத்திற்குப் பதிலாக, நெல் உதிராத கதிர், பனை ஓலைக் குருத்து, நத்தம் கரந்தமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட தரகம் புல் இவைகளைக் கொண்டு கூரை அமைத்திருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை இந்தக் கூரை யின் மீது, நெல் உதிராத கதிரையும் தரகம் புல்லையும் போட்டு கூரையைப் பலப்படுத்துகிறார்கள். குடமுழுக்கு சமயத்தில் மட்டுமே கூரை புதுப்பிக்கப்படுகிறது.

கண்ணதாசன் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஒரு நாள் இரவு முழுவதும் மலையரசி அம்மன் கோயிலில் அமர்ந்திருந்தாராம். பெற்ற தாயோ தேடிக் கொண்டிருக்க, கோயிலுக்குள் அம்மனிடம் உபதேசம் பெற்றுக்கொண்டிருந்தார் சிறுவன் கண்ணதாசன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் கண்ணதாசன் கவியரசாக உயர்ந்திருக்கிறார். எத்தகைய மனக்குறையையும் மலையரசியிடம் வந்து மண்டியிட்டு வேண்டினால் போதும். சம்பந்தப்பட்டவரின் கனவில் குழந்தை வடிவில் காட்சி கொடுக்கும் மலையரசி, மண்டியிட்டவர்களின் மனக்குறை போக்கி மனங்குளிர வைப்பதாக சிறு கூடல்பட்டி மக்கள் நம்புகிறார்கள்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor