ஆயிரம் காளியம்மன் அபூர்வ தரிசனம்

பேழைக் காளியைத் தரிசிக்க வந்த பக்தர்கள்

Published : 15 Jun 2017 10:00 IST
Updated : 15 Jun 2017 09:58 IST

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்குத் தரிசனம் தரும் ஆயிரங்காளி அம்மன் கடந்த வாரத்தில் பேழையிலிருந்து வெளிப்பட்டுப் பக்தர்களுக்கு அருள் பாலித்தாள்.

திருமலைராயன்பட்டினத்தில் 108 கோயில்களும் 108 குளங்களும் அமைந்து பக்தி சிறப்புற விளங்கிவருகிறது. இதில் நடுநாயகமாகக் குடி கொண்டு அனைவருக்கும் நல் அருள் புரிந்துவருபவள் இந்த ஆயிரங்காளியம்மன். அன்னைக்குப் படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரமாகப் படைக்கப்படுவதால் அன்னையின் பெயரே ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது.

திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவும் சிறப்பான வகையில் பூஜை நடத்தப்படும். பெட்டிக் காளியம்மன் என்று அழைக்கப்படும் அம்மனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளச் செய்கிறார்கள். சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் பேழையில் வைத்து மூடிவிடுவது வழக்கம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே பேழை திறக்கப்படும். அதுவரை பேழை மட்டுமே வழிபடப்படும்.

சூரிய உதயத்துக்கு முன்பாக

கடந்த ஜூன் 5 இரவு எட்டு மணிளவில் பேழையிலிருந்து அம்மன் எழுந்தருளினாள். ஆறாம் தேதியன்று அபிராமி அம்மன் சமேத ராஜசோளீசுவரர் கோயிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பூஜைப் பொருட்கள், பழங்கள் உள்பட சீர்வரிசைப் பொருட்கள் ஒவ்வொன்றும் 1,000 வீதம் ஆயிரங்காளியம்மன் கோவிலுக்கு 70 மினிவேன்களில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது.


காளிக்கு வந்த சீர்வரிசை

இதையடுத்து ஏழாம் தேதி ஆயிரங்காளியம்மனுக்கு சோடச உபச்சார தீபாராதனை காட்டப்பட்டது. அன்றும் மறுநாளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனைத் தரிசித்தனர். அதையடுத்து 9-ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக அம்மன் மீண்டும் பேழைக்குள் வைக்கப்பட்டாள். இதற்கு அடுத்து 2022-ம் ஆண்டில் அம்மன் மீண்டும் பேழையிலிருந்து எடுக்கப்பட்டுப் பூஜை நடைபெறும்.

கடலில் மிதந்துவந்த பேழை

ஒரு காலத்தில் கலிங்கத்தை ஆண்டுவந்த அரசன் ஒருவன் அன்னைக்காளி தேவியை உருவாக்கி நாளும் அவளுக்குப் பூஜை செய்தும் ஆயிரமாயிரம் பொருட்களும் பழங்களும் மலர்களும் சித்திரான்னமும் செய்து வழிபட்டுவந்தான். அந்த மன்னனின் இறுதிக் காலத்தில் அவன் கனவில் தோன்றிய காளி, “மகனே நீ கவலைப்படாமல் என்னை ஒரு பேழையில் வைத்துக் கடலில் விட்டுவிடு. நான் வேறு இடம் சென்று கோயில் கொண்டு தங்குவேன்” என்று கூறினாள். மன்னனும் அவ்வாறே செய்தான்.

கடலில் மிதந்துவந்த அந்தப் பெட்டி திருமலைராயன்பட்டினக் கரையோரம் வந்துசேர்ந்தது. அந்நகரில் வசித்துவரும் செங்குந்த குல மரபினர் குலப் பெரியவர் ஒருவர் கனவில் தோன்றிய அன்னை, மன்னவனின் குலதெய்வமான தான் இப்போது கடலில் தவழ்ந்துகொண்டிருப்பதாகவும் தன்னை எடுத்து வந்து வழிபாடு செய்யுமாறும் கூறினாள். விடிந்ததும் அந்தப் பெரியவர் மற்றவர்களை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்று மேளதாள வாத்தியம் முழங்க அன்னை இருந்த பேழையை எடுத்து ஊருக்குள் கொண்டுவந்தார்.

பின்பு பேழையைத் திறந்து பார்த்து அதனுள் இருந்த ஓலைக் குறிப்பைக் கொண்டு அன்னைக்குத் தினமும் பூஜை செய்யும் முறையையும், அன்னைக்குப் படைக்கும் பொருட்கள் ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு பூஜைகளை நடத்தினர். தினம்தோறும் வகைக்கு ஆயிரம் படைக்க முடியாத காரணத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை செய்திட முடிவெடுத்து, அதன்படி தற்போது பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor