Published : 22 Sep 2016 11:05 AM
Last Updated : 22 Sep 2016 11:05 AM

திருத்தலம் அறிமுகம்: சந்தனத் திருமேனியாய் வீற்றிருக்கும் திருமால் - கருங்குளம் வெங்கடாசலபதி ஆலயம்

மூலவர் சந்தனத் திருமேனியாய் இருந்து அருள்பாலிக்கும் அபூர்வத் திருத்தலம் கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோயில்.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 15-வது கிலோமீட்டரில் இருக்கிறது கருங்குளம். இங்கே தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மலைமேல் வீற்றிருக்கிறார் அருள்மிகு வெங்கடாசலபதி பெருமான்.

பிரம்ம தத்தனின் வயிற்று வலி

பிரம்ம தத்தன் என்பவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். பெருமாள் பக்தரான அவர் தனது வயிற்று வலி தீர திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் வைத்து, குடும்பத்துடன் திருமலை சென்றார். ஏழுமலையானை நெக்குருக வேண்டிய பொழுதும் அவருக்கு வயிற்று வலி தீரவில்லை. ஆனாலும், எனது வலி தீரும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என திருமலையிலேயே முடங்கிப் போனார் பிரம்ம தத்தன்.

மலை ஏறி வந்த களைப்பு; வயிற்று வலியையும் மறந்து உறங்கிப் போனார் பிரம்ம தத்தன். அப்போது அவரது கனவில் அந்தணர் வடிவமாக தோன்றிய நிவாச பெருமான், “இவ்விடத்தில் உமக்கு ரோகம் தீரும் மார்க்கம் இல்லை. நான் வசிக்கும் வகுளம் மலைக்கு வா. அங்கே எமக்குக் கோயில் கட்டி வழிபட்டால் உமக்கு வயிற்று ரோகம் தீர்ந்து விமோசனம் பெறுவாய்” என்று சொன்னார்.

எங்கிருக்கிறது வகுளகிரி?

வகுள கிரி எங்கிருக்கிறது? அதை நான் எப்படித் தெரிந்துகொள்வது? என பிரம்ம தத்தன் கேட்டார். அதற்கு, “திருமலை ஏழுமலையானுக்கு சந்தனத்தில் ஒரு தேர் செய். தேரைச் செய்து முடிக்கும்போது சந்தனக் கட்டைகளில் இரண்டு மிச்சமாகும். அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று பொருநை (தாமிரபரணி) நதியில் விடு. நதியின் போக்கில் செல்லும் சந்தனக் கட்டைகள் எந்த இடத்தில் கரை ஒதுங்குகின்றனவோ அது தான் வகுள கிரி” என்று சொல்லி மறைந்தார் அந்தணர்.

திசைகாட்டிய சந்தனக் கட்டைகள்

ஸ்ரீ நிவாச பெருமான் சொன்னது போலவே, ஏழுமலையானுக்கு சந்தனக் கட்டையால் திருத்தேர் ஒன்றைச் செய்தார் பிரம்ம தத்தன். தேர் செய்து முடித்தபோது இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்க வியந்து போனார் தத்தன். அந்தக் கட்டைகளை எடுத்துக் கொண்டு நெல்லைச் சீமையில் ஓடும் பொருநை நதிக்கு ஓடினார். சந்தனக் கட்டைகளை பயபக்தியுடன் நதியில் மிதக்கவிட்டார். அவை நதியில் மிதந்து பயணிக்கத் தொடங்கின. அவை போன திசையில் தானும் பயணிக்கத் தொடங்கினார் பிரம்ம தத்தன்.

நதியின் போக்கில் மிதந்து வந்த சந்தனக் கட்டைகள் இரண்டும் சொல்லி வைத்தாற்போல் ஓரிடத்தில் நதியின் தெற்குக் கரையில் கரை ஒதுங்கின. அதுதான் பெருமாள் சொன்ன வகுள கிரி என்பதை அடையாளம் தெரிந்து கொண்ட தத்தன், அந்த இடத்திற்கு அருகில் இருந்த மலை மீது வெங்கடாசலபதிக்குக் கோயில் ஒன்றை எழுப்பி, திருமலையிலிருந்து எடுத்து வந்திருந்த சந்தனக் கட்டைகளில் பெருமாளின் உருவத்தை செதுக்கி கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரைப் பீடித்திருந்த தீராத வயிற்று வலி மெல்லக் குணமாகத் தொடங்கியது.

நோய் தீர்ப்பவர்

பிரம்ம தத்தன் படைத்த இத்திருத்தலத்தில் இப்போதும் மூலவர் சந்தனக்கட்டை திருமேனியாகவே காட்சி தருவது வேறு எங்குமில்லா சிறப்பு. பிரம்ம தத்தனுக்கு தீராத வயிற்று வலியைப் போக்கிய திருத்தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் தீராத வியாதிகள் எதுவாகினும் வேங்கடமுடையான் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமலைக்கு வேண்டுதல் வைத்து அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வேண்டிச் சென்றால் திருப்பதி திருமலைக்குச் சென்று வந்த பலனைப் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

பாயசக் கட்டளை

திருமணத் தடை உள்ளவர்கள் தாமிரபரணியில் நீராடி ஒரு மண்டலம் விரதமிருந்து திருவோண நாளில் வெங்கடாஜலபதிக்கு பாயசக் கட்டளை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடி வரும். இத்திருத்தலத்தில் சித்ராபவுர்ணமி நாளில் பிரம்மோற்சவ விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது தாமிரபரணியில் பெருமாளுக்கு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெறும். இதுதவிர, ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி பெருவிழா உள்ளிட்ட நாட்களிலும் வெங்கடாஜலபதி பெருமாள் திருவிழா நாயகராகக் காட்சி தருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x