Last Updated : 10 Jun, 2018 03:40 PM

 

Published : 10 Jun 2018 03:40 PM
Last Updated : 10 Jun 2018 03:40 PM

நல்லன எல்லாம் தரும் முக்கூட்டுப் பொடி

உறவினர் வீடுகளுக்கும் சுற்றுலாவுக்கும் செல்வதற்கோ வற்றல், வடாம், ஊறுகாய் போன்றவற்றைச் செய்வதற்கோ மட்டுமல்ல கோடை. தானிய வகைகளையும் மருந்துப் பொருட்களையும் சித்திரை வெயிலில் உலர்த்தித் தேவையான பொடிகளை அரைத்து வைப்பதற்கும் கோடைக்காலமே சிறந்தது. “மாறிவரும் உணவுப் பழக்கத்தால் பலரும் பலவிதமான உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால், உடலுக்கு நன்மை தருகிறவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அவற்றைப் பொடியாக அரைத்துவைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு” என்று சொல்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில பொடி வகைகளைச் செய்வதற்கும் அவர் கற்றுத்தருகிறார்.

ஆவாரம்பூ சாம்பார் பொடி

என்னென்ன தேவை?

ஆவாரம்பூ - 50 கிராம்

மல்லி (தனியா) - 1 கிலோ

மிளகாய் - அரை கிலோ

துவரம் பருப்பு - 200 கிராம்

கடலைப் பருப்பு - 100 கிராம்

மிளகு, சீரகம் - தலா 40 கிராம்

வெந்தயம் - 10 கிராம்

விரலி மஞ்சள் - 8

எப்படிச் செய்வது?

ஆவாரம்பூவைச் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) சுத்தம்செய்து நன்றாக காயவைத்துக்கொள்ளுங்கள். மற்ற பொருட்களையும் தனித் தனியே நன்றாகக் காயவைத்துக்கொள்ளுங்கள். மல்லி, மிளகாய், மஞ்சள் தவிர்த்து மற்ற பொருட்களை வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்ததும் அனைத்தையும் ஒன்றாக மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். சாம்பார் வைக்கும்போது பெருங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆவாரம்பூவை மருந்தாகப் பயன்படுத்துவதைவிட தினசரி உணவுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் பலன் அதிகம்.

குழம்பு மசாலாப் பொடி

என்னென்ன தேவை?

தனியா, மிளகாய் – தலா அரை கிலோ

மிளகு, சீரகம், சோம்பு – தலா 100 கிராம்

கசகசா - 50 கிராம்

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 4

எப்படிச் செய்வது?

அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக காயவைத்துக்கொள்ளுங்கள். மல்லி, மிளகாய் தவிர்த்து மற்றப் பொருட்களை வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்ததும் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். சைவ - அசைவ குருமா, உருளைக்கிழங்கு/வாழைக்காய் கறி, கோழிக் குழம்பு போன்றவற்றுக்கு இந்த மசாலாப் பொடியைப் பயன்படுத்தலாம்.

வேப்பம்பூ பொடி

என்னென்ன தேவை?

வேப்பம்பூ - முக்கால் கப்

(மோரில் ஊறவைத்துக் காயவைத்தது)

கறிவேப்பிலை – முக்கால் கப்

(கழுவி நிழலில் காயவைத்தது)

சுக்கங்காய் - 10

(வற்றல் கடைகளில் கிடைக்கும்)

மோர் மிளகாய் - 4

உளுந்து – கால் கப்

மிளகு - ஒன்றரை டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் உளுந்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம்பூ, சுக்கங்காய், மோர் மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கசப்பு தெரியாது. இந்த ஆரோக்கிய பொடியை குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் சாப்பிடலாம்.

முக்கூட்டுப் பொடி

என்னென்ன தேவை?

வேப்பம்பூ – கால் கப்

(மோரில் ஊறவைத்துக் காயவைத்தது)

சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல் – தலா கால் கப்

நல்லெண்ணெய், உப்பு

– தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வேப்பம்பூ, சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல் மூன்றையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியைச் சூடான சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். வயிற்றுக் கேளாறு உள்ளவர்கள் இந்தப் பொடியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மோர் மிளகாய் சேர்த்தும் இந்தப் பொடியை அரைத்துக்கொள்ளலாம்.

முருங்கைக்கீரைப் பொடி

என்னென்ன தேவை?

முருங்கைக் கீரை, கறிவேப்பிலை

– தலா 1 கப்

மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முருங்கைக்கீரையையும் கறிவேப்பிலையையும் தனித்தனியாக சுத்தம் செய்து, அலசி, நிழலில் மூன்று நாட்கள் காய வைத்துக்கொள்ளுங்கள். பிறகு வெறும் வாணலியில் இவற்றை தனித்தனியாக நிறம் மாறாமல் மிதமாக வறுத்துக்கொள்ளுங்கள். அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள். சூடான சாதத்தில் இந்தப் பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும். நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைந்த இந்தப் பொடியைத் தினமும் ஒரு டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி மாவுடன் கலந்தும் செய்யலாம். ஆம்லெட் மீதும் தூவலாம். குழந்தைகளுக்குக் கலவை சாதமாகவும் கொடுக்கலாம்.

ரசப் பொடி

என்னென்ன தேவை?

தனியா – கால் கப்

மிளகு - 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை, தூதுவளை – தலா 1 கைப்பிடியளவு (காய்ந்தது)

நெய், உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள், பெருங்காயம் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் வெயிலில் நன்றாகக் காயவைத்து வெறும் வாணலியில் தனித்தனியாக மிதமாக வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்;கொள்ளுங்கள்.

ஒன்றரை கப் பருப்பு தண்ணீரில் நறுக்கிய தக்காளி இரண்டு, பாதி எலுமிச்சை சாறு, 3 நசுக்கிய பூண்டுப் பல் ஆகியவற்றோடு தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் ரசப் பொடி சேர்த்து, கரைத்துவைத்துள்ள கலவையை ஊற்றுங்கள். ரசம் நுரைத்து வரும்போது மல்லித்தழையைத் தூவி இறக்கிவையுங்கள். அனைத்து வகையான ரசத்துக்கும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x